1990ம் ஆண்டுகளில் சபாவில் ஆயிரக்கணக்கான சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டதாக கூறப்படுவது எல்லாம் கட்டுக்கதைகள்.
மற்ற எல்லா நல்ல கட்டுக்கதைகளைப் போன்று அதற்கு நிறைய ஆதாரம் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் அது நிகழ்ந்ததற்கு மறுக்க முடியாத ஆதாரம் ஏதுமில்லை.
எது எப்படி இருந்தாலும் அடையாளக் கார்டு திட்டம் அல்லது எம் திட்டம் அழைக்கப்படுகின்ற அந்த ஐயத்துக்குரிய நடவடிக்கை பற்றி முன்னாள் இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மானுடைய எண்ணமே அதுதான்.
“நான் இசி தலைவராக இருந்த போது சபாவில் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் குவிக்கப்பட்டது பற்றி நம்பத்தகுந்த அல்லது உருப்படியான ஆதாரங்கள் ஏதுமில்லை.”
எல்லா நேரத்திலும் மக்கள் கட்டுக்கதைகளைப் பரப்பிக் கொண்டிருந்தனர். அதனை உண்மையென நம்புவது மிகவும் சிரமம். அவை எல்லாம் வதந்திகளே,,” என்று அவர் கடந்த வாரம் மலேசியாகினிக்கு வழங்கிய மின் அஞ்சல் பேட்டியில் கூறினார்.
ஆனால் அந்த வதந்திகளுக்கு கருத்துக் கூறுவது அவருக்குக் கடுமையான விஷயமாக இருந்தது. அது பற்றி மேலும் கருத்துரைக்க மறுத்து விட்ட அப்துல் ரஷிட், “அதில் ஊகங்களும் அரசியலும் அதிகமாகக் கலந்துள்ளன”, என்றார்.
“மிகவும் சூடான உருளைக் கிழங்கு” என வருணித்த அவர் அந்தக் கேள்விக்கு மேலும் கருத்துக் கூற மறுத்து விட்டார். அந்த விவகாரம் ஓய்வு பெற்ற அந்த அரசாங்க ஊழியருக்கு உண்மையில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது.
அப்துல் ரஷிட் 2001ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை இசி தலைவராக இருந்தார். அதற்கு முன்னர் அதன் செயலாளராகப் பணி புரிந்தார். அப்போது அந்த அடையாளக் கார்டு திட்டம் எனக் கூறப்படும் விவகாரம் நடந்திருக்க வேண்டும்.
அடையாளக் கார்டு திட்டம் என நம்பப்படும் அடையாளக் கார்டு மோசடியில் சம்பந்தப்பட்டதற்காக பல அரசாங்க அதிகாரிகள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.
அவர்களுடைய வாக்குமூலங்களை செவிமடுப்பதற்காக 2007ம் ஆண்டு நேர்மை மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் அந்தக் குழுவின் முடிவுகள் பொது மக்களுக்கு அறிவிக்கப்படவே இல்லை.
அத்துடன் சபாவில் வலிமையானவரும் முன்னாள் பிகேஆர் உறுப்பினருமான ஜெப்ரி கிட்டிங்கான் அந்த விவகாரம் மீது விரிவான ஆய்வு நடத்தி அதனை புத்தக வடிவிலும் வெளியிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இரண்டு முறை ஏன் மூன்று முறை கூட இடம் பெற்றுள்ளதை ஜெப்ரியும் இன்னொரு சபா அரசியல்வாதியான யோங் தெக் லீ-யும் மேம்பாட்டு ஆய்வுக் கழகம் வழி ஆவணமாக வெளியிட்டுள்ளனர்.
“அடையாளக் கார்டுகள் செல்லத்தக்கதா இல்லையா என்பதை சோதிப்பது என் வேலை அல்ல”
அப்துல் ரஷிட், அப்போது 60,000க்கும் மேற்பட்ட போலி அடையாளக் கார்டுகளை வெளியிட்டதாக சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கான மலேசிய அமைப்பின் முன்னாள் தலைவர் அப்துல் மாலிக் ஹுசேன் கூறியதாக அண்மையில் தகவல்களை அம்பலப்படுத்தும் வில்கிலீக்ஸ் இணையத் தளம் கடந்த மாதம் அறிவித்தது.
என்றாலும் அப்துல் ரஷிட், சந்தேகத்துக்குரிய வாக்காளர்களை உண்மையில் பதிவு செய்தார் என்றும் வில்கிலீக்ஸ் தகவல் கூறுவது போல போலி அடையாளக் கார்டுகளை வெளியிடவில்லை என்றும் அப்துல் மாலிக் பின்னர் மலேசியாகினியிடம் தெளிவுபடுத்தினார்.
அந்தத் தகவல் பற்றி கருத்துக் கூறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது, அப்துல் மாலிக்-கின் சொற்களை அரசதந்திரிகள் ‘திரித்து விட்டதாகவும்’ அப்துல் மாலிக் “தமது நண்பர்” என்றும் அப்துல் ரஷிட் சொன்னார்.
“என்னைச் சந்தித்த மாலிம் சபாவில் ஆயிரக்கணக்கான அடையாளக் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.”
“அடையாளக் கார்டுகளை சோதிப்பது என் வேலை அல்ல என நான் அவரிடம் சொன்னேன். ஒர் அடையாளக் கார்டு உண்மையானதாகத் தெரிந்தால் அது எங்கிருந்து வந்தது என்பதை நான் சோதிக்க வேண்டிய தேவை இல்லை”, என்றார் அப்துல் ரஷிட்.
தாம் அந்த நேரத்தில் இசி செயலாளராகப் பணியாற்றி வந்ததாகவும் இன்னொரு துறையில் தலையிட்டால் தமது வேலைக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் மேலும் சொன்னார்.
“அந்த அடையாளக் கார்டுகள் எங்கிருந்து வந்தன என்று கேள்வி எழுப்புவது எங்கள் வேலை அல்ல. நான் இசி செயலாளராக அப்போது இருந்தேன். நான் இன்னொரு துறையில் தலையிட்டால் நான் பதவி நீக்கம் செய்யப்படலாம்”, என அவர் தேசியப் பதிவுத் துறையைக் குறிப்பிட்டுப் பேசினார்.