தேசியப் பேராசிரியர்கள் மன்றம் ஊமையாகி விட்டது, லிம் தெக் கீ

தேசியப் பேராசிரியர்கள் மன்றம் அமைக்கப்படுவதை அறிவித்த உயர் கல்வி அமைச்சர் காலித் நோர்டின், மலேசியப் பேராசிரியர்கள் தங்கள் துறைகளில் “மகாகுரு”வாகத் திகழ்வதோடு தேசிய வாழ்க்கையில் பங்கு கொண்டு  தங்கள் நிபுணத்துவத்தையும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அண்மையில் அமைக்கப்பட்ட பேராசிரியர்கள் மன்றம் பொதுப் பல்கலைக்கழகங்களை சேர்ந்த 1500க்கும் மேற்பட்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. “மாட் இந்த்ரா கம்யூனிஸ்டா அல்லது தேச விசுவாசியா? என்பது மீது அது அண்மையில் சூடான விவாதத்தில் பங்கு கொண்டது.

ரித்துவான் தீ அப்துல்லா, ராம்லா அடாம், சம்சுல் அம்ரி பாஹாருதின், கூ கே கிம் போன்ற பேராசிரியர்களும் ஒய்வு பெற்ற பேராசிரியர்களும் அடிக்கடி ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிடுவதின் மூலம் தங்களது கல்விச் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த உரிமைகளை அனுபவிக்கின்ற அவர்கள், அந்த சுதந்திரம் தொடர வேண்டும் என விரும்புவர் என்றே நான் கருதுகிறேன். ஆனால் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக பேராசியர் அப்துல் அஜிஸ் பேரி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அவர்கள் மௌனமாக இருப்பது எனக்கு முரண்பாடாகத் தோன்றுகிறது.

அஜிஸ் பேரி-க்கு  தாம் சார்ந்துள்ள, தமக்கு நாட்டமுள்ள துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு உண்டு. சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை, டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நடத்திய சோதனை பற்றி சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் இட்ரிஸ் ஷா வெளியிட்ட அரச கட்டளை மீது அஜிஸ் பேரி கருத்துரைத்ததும் அதில் அடங்கும்.

அந்த விவகாரத்தில் அஜிஸ் பேரி-க்கு ஆதரவாக 140 கல்வியாளர்கள் மகஜர் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். அஜிஸ் பேரி-யின் கல்விச் சுதந்திரத்தையும் உரிமைகளையும் கட்டுப்படுத்தும் முயற்சிகளையும் அவர்கள் கண்டித்துள்ளனர்.

அத்துடன் அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கையை ஐந்து இதர கல்வியாளர்  அமைப்புக்களும்  கண்டித்துள்ளன.

அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகம், மலாயா பல்கலைக்கழகம், மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், இக்காத்தான் இல்முவான் நேசனல், மலேசிய கல்வி இயக்கம் ஆகியவை அந்த  ஐந்து அமைப்புக்களாகும்.

தொடரும் அந்த சர்ச்சை மீது தேசியப் பேராசிரியர்கள் மன்றம் இன்னும் குரல் எழுப்பவே இல்லை.

மலேசிய சமூக அறிவியல் போன்ற மற்ற பிரபலமான கல்வி அமைப்புக்களும் ஒன்றுமே சொல்லவில்லை.

இந்த நாட்டில் உள்ள பல பொது, தனியார் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் மற்ற கல்வியாளர்கள் சார்ந்துள்ள அமைப்புக்களின் நிலை என்ன?

அஜிஸ் பேரி விஷயம், இந்த நாட்டில் கல்விச் சுதந்திரத்துக்கு முக்கியமான சோதனைக் களமாகும்.

ஆனால் பெரும்பாலான கல்வியாளர் சங்கங்கள் இன்னும் அஜிஸ் பேரி-க்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அல்லது மனுவில் தங்கள் பெயர்களை சேர்க்கவில்லை.

ஆடுகள் மௌனம்

பெரும்பாலான கல்வியாளர்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் மௌனமாக இருப்பதற்கு பல காரணங்களைக் கூறலாம்.

அஜிஸ் பேரி விவகாரம் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து அக்கறை கொள்ளாமல் இருக்கலாம்.

அவர்கள் கவலைப்படலாம். ஆனால் தங்கள் கவலையைத் தெரிவிப்பது பற்றி அக்கறை காட்டவில்லை அல்லது தாங்கள் சொல்லும் கருத்து தங்கள் வாழ்வாதாரத்துக்குப் பாதகமாக முடியலாம் என அவர்கள் அஞ்சலாம்.

இனம், சமயம், வரலாறு, அரசியல் குறித்து முக்கிய ஊடங்கள் அடிக்கடி கருத்துக்களை நாடும் கல்வியாளர்கள் மௌனமாக இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் தங்கள் மீது வழக்கு தொடரப்படக் கூடிய அச்சமின்றி அல்லது அதிகாரிகளினால் பழி வாங்கப்படக் கூடிய அச்சமின்றி அந்தக் கல்வியாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்புவர் என சாதாரண மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அந்தக் கல்வியாளர்கள் அஜிஸ் பேரி மீது அனுதாபம் கொண்டு அவர் மீது எடுக்கப்பட்ட கடுமையான ஏற்க முடியாத நடவடிக்கைகளுக்கு உடனடியாக ஆட்சேபம் தெரிவிப்பர் என மக்கள் எதிர்பார்த்தனர்.

ஒரு வேளை அஜிஸ் பேரி தண்டிக்கப்பட வேண்டும் என அவர்கள் எண்ணுகின்றனரோ?

எது எப்படி இருந்தாலும் நாடு முழுவதும் “மௌனமாக உள்ள பெரும்பான்மையினர்” (பொதுப் பல்கலைக்கழகங்களில் 35,000 கல்வியாளர்களும் தனியார் பல்கலைக்கழகங்களில் அதே எண்ணிக்கையிலான கல்வியாளர்களும் பணியாற்றுகின்றனர்) காது கேளாதவர்களாகவும் வாய் பேசாதவர்களாகவும் இருப்பதற்கு இது நேரமல்ல.

கல்விச் சுதந்திரத்துக்கு அவர்கள் இதுவரை ஆதரவு தெரிக்கவில்லை என்றாலும் இன்னும் கால தாமதமாகவில்லை.  பேஸ் புக் பக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள அஜிஸ் பேரி ஆதரவான  கையெழுத்து இயக்கத்தில் தங்கள் பெயரை அவர்கள் இணைத்துக் கொள்ளலாம்.

உயர் கல்வி அமைச்சர் கேட்டுக் கொண்டதையே அஜிஸ் பேரி செய்து வருகிறார். கல்வியாளர்கள் தங்களது தந்தக் கோபுரத்திலிருந்து இறங்கி தேசியப் பிரச்னைகளைக்குத் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். அனைத்து கல்வியாளர்களும் அஜிஸ் பேரி-க்கு ஆதரவு காட்ட வேண்டும்.

நாம் ஒர் உண்மையை உணர்ந்து கொள்வது நல்லது: “நீங்கள் உங்கள் உரிமைகளைப் பயன்படுத்தாவிட்டால் அந்த உரிமைகளை நீங்கள் மதிப்பதை அரசாங்கத்துக்குக் காட்டா விட்டால் காலப்போக்கில் நீங்கள் அவற்றை இழந்து விடுவீர்கள்.”

: