வேலை வாய்ப்பு மசோதாவை தடுக்குமாறு 107 உள்ளூர் வட்டார அமைப்புக்கள் வேண்டுகோள்

தொழிற்சங்கங்களும் சமூக அமைப்புக்களும் ஆட்சேபம் தெரிவித்த போதிலும் மலேசிய அரசாங்கம் சர்ச்சைக்குரிய 2011ம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முனைந்துள்ளது குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட வட்டார அமைப்புக்கள் இன்று கவலை தெரிவித்துள்ளன.

அந்தத் திருத்தம் தொழிலாளர் உரிமைகளுக்கு பாதகாமக அமைவதோடு தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் இப்போது உள்ள ஒரு தரப்பு உறவுகள், மூன்றாம் தரப்பு ஒன்றைச் ‘சட்டப்பூர்வமாக்குவது’ மூலம் சீர்குலைந்து விடும் என அந்த 107 அமைப்புக்களும் விடுத்துள்ள கூட்டறிக்கை குறிப்பிட்டது.

“பல நாடுகளில் முதலாளிகள், ஒப்பந்தங்கள்/குத்தகைகள், முத்தரப்பு உடன்பாடுகள் வழியாக வேலை வாய்ப்பு உறவுகளை தவிர்க்க தவறாக முயன்று வருகின்றனர். மலேசியா அந்த பாதகமான போக்கை எதிர்ப்பதற்குப் பதில் அதனைச் சட்டப்பூர்வமாக்க முயலுகிறது. அதன் மூலம் தொழிலாளர்களுக்கு எதிரானது என்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிரானது என்றும் அரசாங்கம் தன்னைக் காட்டிக் கொள்கிறது,” என உள்ளூர் பேராளரும் மனித உரிமை வழக்குரைஞருமான சார்லஸ் ஹெக்டர் கூறினார்.

அந்த மசோதா மூன்றாவது தரப்புக்கு இடம் அளிக்கிறது. தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான நேரடி உறவுகளை முற்றாக அகற்றி விடுகிறது. அதனால் உரிமைகள் மீதான நேரடிப் பேச்சுக்களுக்குத் தடை ஏற்படுத்தப்பட்டு விடுகிறது என்றும் ஹெக்டர் சொன்னார்.

“ஒரே வேலையைச் செய்யும் உள்ளூர் தொழிலாளர்களிடமிருந்து மாறுபட்ட நிபந்தனைகளை அந்நியத் தொழிலாளர்கள் பெற்றிருப்பர் என்பதும் அதன் பொருளாகும். அதனால் முதலாளிகள் மாறுபட்டவர்கள் என்பதால் சம்பளம், வேலை சகாயங்கள், ஏன் உரிமைகள் கூட மாறுபடலாம்.”

எம்டியூசி என்ற மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் அக்டோபர் மூன்றாம் தேதி நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு வெளியில் கூடி அந்தத் திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அதில் 200க்கும் அதிகமான தொழிற்சங்கவாதிகள் கலந்து கொண்டனர்.

நவம்பர் மாதம் மூன்றாம் தேதி பாகுபாடான அந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் மறியல் செய்ய எம்டியூசி திட்டமிட்டுள்ளது.