“கீழறுப்புக் காவியம்” பிஎஸ்எம் அறுவரின் விடுவிப்போடு முடிவுற்றது

கீழறுப்பு செய்வதற்கான உபகரணங்களை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்ட மலேசிய சோசலிசக் கட்சியின் அறுவரை, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.ஜெயகுமார் உட்பட, இன்று காலை பட்டர்வொர்த் செசன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்யாமல் விடுவித்தது.

இதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த மலேசிய சோசலிசக் கட்சியின் 24 உறுப்பினர்களை இரண்டு வாரங்களுக்கு முன்பு நீதிபதி இக்மால் ஹிசான் முகமட் தஜுடின் விடுவித்ததற்குப் பின்னர் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.

தொடர்பு கொண்டபோது, இச்சம்பவம் முடிவிற்கு வந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜெயகுமார், முதலாவதாக, அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது பற்றி குறைபட்டுக்கொண்டார்.

“அரசாங்கத்திற்கு நன்றி கூற வேண்டியதில்லை. நன்றியுடையவர்களாக இருப்பதற்கு ஒன்றுமில்லை. முதலாவதாக, எங்களை கைது செய்திருக்கக் கூடாது. அதிகமான மலேசிய மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அரசியல் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவர்கள் எங்களை விடுவித்தனர்.”

“அரசாங்கம் விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்”

எப்படி இக்குற்றச்சாட்டுகள் எழுந்தன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அரசாங்கத்தை ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

“நாங்கள் பேரரசருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப் போகிறோம் அல்லது சுங்கை சிப்புட் மக்கள் போலீஸ் நிலையங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் என்று புனையப்பட்ட கதை குறித்து விசாரணை ஒன்றை உள்துறை அமைச்சு மேற்கொள்ள வேண்டும்.

“இக்கதைகள் போலீசாரிடமிருந்து துவங்கியது என்றால், இது பெரிய நம்பகத்தன்மை குறித்த பிரச்னைகளை எழுப்புகிறது”, என்றாரவர்.