கணித/அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பதற்கு பள்ளிகள் அனுமதிக்கப்படவில்லை

கணித, அறிவியல் பாடங்களைப் போதிப்பதற்கு பயன்படுத்தப்படும் மொழியைத் தேர்வு செய்வதற்கு பள்ளிக்கூடங்களுக்கு கல்வி அமைச்சு அனுமதிக்காது.

இவ்வாறு அதன் அமைச்சர் முஹைடின் யாசின் கூறுகிறார். அத்தகைய வாய்ப்பை வழங்குவது நிலமையை மென்மேலும் சிக்கலாக்கி விடும் என்றார் அவர்.

தேர்வு செய்ய வாய்ப்பு வழங்குவது திட்டமிடும் பணிகளுக்குச் சிரமங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தேர்வு செய்ய (பள்ளிக்கூடங்கள் அனுமதிக்கப்பட்டால்) கல்வி முறையில் பெரிய குழப்பமே ஏற்படும்.”

“அமைச்சு திட்டமிடுவதற்கும் சிரமம் ஏற்படும். ஒரு பள்ளிக்கூடம் ஆங்கிலம் அல்லது பாஹாசா மிலாயுவில் போதிப்பதைத் தேர்வு செய்தால் நாங்கள் எப்படி ஆசிரியர்களை வழங்க முடியும் ?” என முஹைடின் வினவினார்.

அறிவியல் கணித பாடங்களை பாஹாசா மலேசியாவில் மீண்டும் போதிப்பது என கல்வி அமைச்சு முடிவு செய்த பின்னர் அந்த இரு பாடங்களும் போதிக்கப்படும் மொழியைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு பள்ளிக்கூடங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பல பெற்றோர் அமைப்புக்கள் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்து வருகின்றன.