சட்டப் பேராசிரியர் அசீஸ் பேரியின் கோம்பாக் இல்லத்துக்கு ஒரு கடிதத்துடன் துப்பாக்கித் தோட்டாவும் இன்று வந்து சேர்ந்தது. ஆகஸ்ட் மாதம் தேவாலயம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை குறித்து சிலாங்கூர் சுல்தான் விடுத்த அறிக்கைமீது அவர் தெரிவித்த கருத்தின் தொடர்பில் அது அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்றவர் கருதுகிறார்.
கடித்ததில். “Jangan kurang ajar dengan sultan maut nanti” (சுல்தானிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ள வேண்டாம், உயிர் போய்விடும்) என்று எச்சரிக்கப்பட்டிருந்ததாக அப்துல் அசீஸ் கூறினார்.
ஒரு சாதாரண கடித உறையில் இருந்த கடிதமும் துப்பாக்கித் தோட்டாவும் காலை மணி 11.45-க்கு ஒரு அஞ்சல்காரரால் கொண்டு வந்து சேர்ப்பிக்கப்பட்டன.
“அப்போது நான் பாகான் செராயில் (பாஸ் துணைத் தலைவர்) மாட் சாபுவுடன் ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ளப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன்”, என்று பேராசிரியர் மலேசியாகினி அவரைத் தொடர்புகொண்டபோது கூறினார்.
அவசரமாகப் புறப்பட்டுச் செல்ல வேண்டியிருந்ததால் அப்துல் அசீஸ் அது பற்றி இன்னமும் போலீசில் புகார் செய்யவில்லை. நாளைக்குள் புகார் செய்யப்போவதாகத் தெரிவித்தார்.
இந்த மருட்டல் அச்சத்தைத் தருகிறதா என்று வினவியதற்கு 2009-இல், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கைக் குறைகூறியபோது மருட்டல் விடுக்கப்பட்டது. மற்றபடி இதுவரை எந்த மிரட்டலும் வந்ததில்லை என்றும் அவர் சொன்னார்.
அப்துல் அசீஸ், பெட்டாலிங் ஜெயாவில் டியுஎம்சி தேவாலயத்தில் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஸ்) மேற்கொண்ட அதிரடிச் சோதனை குறித்து சிலாங்கூர் சுல்தான் விடுத்த அறிக்கை “வழக்கத்துக்குமாறானது” என்று கூறப்போக அவருக்குத் தொல்லைமேல் தொல்லை வந்து கொண்டிருக்கிறது.
அக்டோபர் 13-இல் பேராசிரியர் மலேசியாகினியில் தெரிவித்த கருத்துக்காக அவருக்கும் மலேசியாகினிக்கும் எதிராக செனட்டர் எஸாம் முகம்மட் நூர் போலீசில் புகார் செய்ய, போலீசும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமும்(எம்சிஎம்சி) அவ்விரு தரப்புகளின்மீது விசாரணைகளைத் தொடக்கின.
அதனை அடுத்து யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா(யுஐஏ) அவருக்குக் காரணம் கோரும் கடிதம் அனுப்பியதுடன் பணி இடைநீக்கமும் செய்தது.
அப்துல் அசீஸுக்கு ஆதரவாக மாணவர்களும் சக கல்வியாளர்களும், என்ஜீஓ-க்களும் மாற்றரசுக் கட்சித் தலைவர்களும் உயர்க்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லாவும் திரண்டதால் அக்டோபர் 24-இல் பல்கலைக்கழகம் இடைநீக்கத்தை ரத்துச் செய்தது.
ஆனால், பிரச்னை தீரவில்லை.முன்னிலும் மோசமான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றே பேராசிரியர் எதிர்பார்க்கிறார்.