புக்கிட் ஜாலில் தோட்ட மக்கள் பதற்றமடையத் தேவையில்லையா?

கடந்த 15 ஆகஸ்டு 2011-ல் மலேசிய நண்பனில் வெளிவந்த கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணை அமைச்சர் சரவணனின் அறிக்கையின் உண்மை நிலையை கேட்டு கடிதம் ஒன்று இன்று புக்கிட் ஜாலில் தோட்ட மக்களால் அவரது பணிமனையில் வழங்கப்பட்டுள்ளது.

அவரின் பத்திரிகை அறிக்கை படி, “புக்கிட் ஜாலில் தோட்ட மக்கள் வீடு உடைப்படும் நிலையை எண்ணி பதற்றமடையத் தேவையில்லை” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில், புக்கிட் ஜாலில் மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துத் தோல்வியடைந்த போதிலும் அவர்களுக்கு எந்த ரூபத்தில் உதவ முடியுமென ஆலோசனை செய்து வருகிறோம் என கூறப்பட்டுள்ளது.

புக்கிட் ஜாலில் தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவு தெரியும் வரை அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாமென என துணை அமைச்சர் சரவணன் மாநகர் மன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆகவே எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என நம்பப்படுவதால் தொழிலாளர்கள் மன நிம்மதியுடன் கலக்கமின்றி வாழலாம் எனவும் அவர்கள் எவ்வித பதற்றத்தையும் அடைய வேண்டாம் என சரவணன் அவ்வறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

இவ்வறிக்கையின் உண்மை நிலையை அறிய புக்கிட் ஜாலில் தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக இன்று துணை அமைச்சர் சரவணனின் பணிமனையில் கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தில், இவ்விடயம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு நன்றியும் தெரிவித்துத் தொழிலாளர்களுக்கு இன்னும் இருக்கும் 26 ஏக்கரில் 4 ஏக்கரை வழங்கும் திட்டத்தை கூடிப் பேச துணை அமைச்சர் ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலப் போராட்டத்தில் தொடரப்பட்ட வழக்கில் தொழிலாளர்களுக்கு எதிரான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அத்தீர்ப்பு ஒட்டி மேல் முறையீடு செய்ய முயன்று கொண்டிருக்கும் வேளையில் அமைச்சரின் இவ்வறிக்கை மேலும் தொழிலாளர்களுக்கு குழப்பத்தை தந்துள்ளது.

குழப்பத்தைத் தீர்க்கவே உண்மை நிலையை அறிய கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இக்கடிதம் துணை அமைச்சருக்கு வழங்கப்பட்டதை சுவராம் நளினி செம்பருத்தியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

(S.யுவா)