சீன மொழிச் செய்தி சஞ்சிகை ஒன்றின் (ஸ்பெஷல் வீக்லி) முன்னாள் ஆசிரியர் ஒருவர், தாம் கடந்த ஆண்டு அந்த சஞ்சிகையிலிருந்து நீக்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கொடுத்த நெருக்குதலே காரணம் எனக் கூறிக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சின் சியூ டெய்லி அலுவலகத்துக்கு வருகை புரிந்த ஹிஷாமுடின் தாம் நீக்கப்பட வேண்டும் எனக் கோரியதாக சியாவ் குவிங் லியோங் என்ற அவர் சொன்னார்.
“ஹிஷாமுடின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி சின் சியூ டெய்லிக்கு வருகை அளித்தார். அங்கு ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் நான் நீக்கப்படுவது பற்றிப் பேசப்பட்டது”, என அந்த மூத்த ஆசிரியர் குறிப்பிட்டார்.
சின் சியூ டெய்லியும் ஸ்பெஷல் வீக்லியும் சரவாக் வெட்டுமர செல்வந்தர் தியோங் ஹியூ ஹிங்-கின் கட்டுப்பாட்டில் இருக்கும் சைனிஸ் மீடியா இண்டர்னேசம் லிமிடெட்-டுக்கு சொந்தமானவை.
என்றாலும் அந்த உத்தரவு அமைச்சரிடமிருந்து எழுத்துப்பூர்வமாக வரவில்லை என்றும் வாய்மொழியாகக் கூறப்பட்டது என்றும் சியாவ் குறிப்பிட்டார்.
உள்துறை அமைச்சர் வருகைக்கு சில நாட்கள் கழித்து அந்த முடிவு பற்றி தமக்கு மேலதிகாரியான லாவ் பெங் சீ தெரிவித்தார் என்றும் சியாவ் சொன்னார். அதற்குப் பின்னர் அவர் விளம்பரப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
“நான் கறுப்புப் பட்டியலில் இருப்பதாகவும் நான் என் வேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் லாவ் சொன்னார்.”
தாம் நீக்கப்பட்டதற்கான காரணங்களை லாவ் விவரிக்கவில்லை என்றாலும் ஸ்பெஷல் வீக்லி சஞ்சிகையின் வெளியீட்டு அனுமதியைப் புதுப்பிப்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்களுடன் அது தொடர்புடையது என மற்றவர்கள் தம்மிடம் சொன்னதாக சியாவ் கூறினார்.
“ஸ்பெஷல் வீக்லி அனுமதியை புதுப்பிப்பதில் பிரச்னைகளை எதிர்நோக்குவதால் ஹிஷாமுடினுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் அந்தப் பிரச்னையை நிர்வாகம் எழுப்பியது. அதனை எப்படி சமாளிப்பது என்பது உங்களுக்குத் தெரியும் என ஹிஷாமுடின் அப்போது சொன்னார்.”
ஆனால் அதில் எவ்வளவு உண்மையிருக்கிறது என்பது தமக்கு நிச்சயமாகத் தெரியாது என்றாலும் தமக்குத் தெரிவிக்கப்பட்ட காரணம் அதுதான் என்றும் சியாவ் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட ஒராண்டுக்கு விளம்பரப் பிரிவில் ‘முடக்கி வைக்கப்பட்ட’ பின்னர் தாம் கடந்த வாரம் அந்த நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
தமக்கு அர்த்தமுள்ள எந்த வேலையும் கொடுக்கப்படாமல் நிர்வாகம் தம்மை ஒரங்கட்டி வந்தததகவும் அவர் புகார் செய்தார்.
கடந்த திங்கட்கிழமை சியாவ் இரண்டு வார விடுமுறைக்குப் பின்னர் வேலலக்கு வந்த போது அவரிடம் வேலை நீக்கம் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது.