இண்டர்லோக்: எஸ்பிஎம் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடையும் அபாயம்

இவ்வாண்டிற்கான எஸ்பிஎம் தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இத்தேர்வில் மலாய் இலக்கிய பாடத்திற்கான பாடநூல் நிலை என்ன?

எஸ்பிம் மலாய் இலக்கிய பாடநூலாக இண்டர்லோக் அறிவிக்கப்பட்டு அது பெரும் பிரச்னையான பின்னர் அந்நூலுக்கு பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் செய்த பின்னர் திருத்தங்களுடன் கூடிய புதிய இண்டர்லோக் நூல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.

அந்நூலை புதிதாக அச்சடிப்பதால் ஏற்படும் செலவைத் தவிர்ப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களைத் துண்டுகாளாக அச்சடித்து தேவைப்படும் இடங்களில் ஒட்டப்படும் என்றும், அதனை பள்ளி ஆசிரியர்களே செய்வர் என்றும் கூறப்பட்டது.

அதுவும் சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. தற்போது, அந்நாவல் மலாய் இலக்கிய நூலாகப் பயன்படுத்தப்படும் சாத்தியம் எந்த நிலையில் இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார் இண்டர்லோக் நூல் எதிர்ப்பு அணியான நியட்டின் தலைவர்களில் ஒருவரும் மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவருமான டாக்டர் எம்.பாலதர்மலிங்கம்.

“எஸ்பிஎம் தேர்வுக்கான நாள் நெருங்கி விட்டது. மலாய் இலக்கிய பாடத்திற்கான கேள்விகள் இன்னேரம் தயாராகி இருக்க வேண்டும். அக்கேள்விகள் எந்தப் பாடநூலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வேண்டும்”, என்றாரவர்.

இண்டர்லோக் நாவல் பாடநூலாக பயன்படுத்தப்பட்டு விட்டதா? “ஆம், என்றால் மாணவர்கள் பயன்படுத்தும் நூல் திருத்தப்பட்டதா?”, என்பது பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பாலாதர்மலிங்கம் கூறினார்.

நியட் இயக்கம் இண்டர்லோக் நாவல் மலாய் இலக்கன பாடநூலாக பயன்படுத்தக்கூடாது என்றும் அது அகற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய பாலா, அந்நாவலின் பாடநூல் என்னும் தகுதி எந்த நிலையில் இருக்கிறது என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் ஓர் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

இண்டர்லோக் நூல் விவகாரம் அரசியலாக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாக தெரிந்த விசயம். அதற்கான விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. ஆனால், அரசாங்கத் தரப்பு மௌனம் சாதிக்கும் நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகத் தெரிகிறது என்று தமது ஆதங்கத்தை வெளியிட்ட பாலாதர்மலிங்கம், “அரசாங்கம் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடக் கூடாது” என்று எச்சரித்தார்.

ஜனவரி மாதத்திலிருந்து சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு 56 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஒன்றுக்கும் இன்று வரையில் பதில் அளிக்கப்படவில்லை.

“அரசாங்கத்தின் இந்த மௌனப் போக்கால் பாழடையவிருப்பது மாணவர்களின் எதிர்காலம்”, என்பதை வலியுறுத்திய பாலாதர்மலிங்கம், அரசாங்கத்தின் இந்தப் பொறுப்பற்ற நடத்தையை நியட் வன்மையாகக் கண்டிக்கிறது என்றார்.

மேலும், அடுத்த கட்ட நடவடிக்கையை நியட் முடிக்கிவிட தயாராகியுள்ளது என்றார்.

இண்டர்லோக் விவகாரம் குறித்த முழு விபரங்களுடன் இப்பிரச்னைக்குத்  தீர்வு  காணுமாறு கோரும் வேண்டுகோள் அடங்கிய மனு பேரரசர், சிலாங்கூர் சுல்தான் மற்றும் நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்துவா ஆகியோரிடம் சமர்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.