இண்ட்ராப் வழக்குரைஞர் நாடுகடத்தப்பட்டது மீது ஏன் இந்த மெளனம்?

கருத்தாக்கம் – டாக்டர் லிம் டெக் கீ

மக்களின் எதிர்ப்புணர்வையும் மனச்சாட்சியையும் உசுப்பிவிட்டு, அதிகாரத்தையும் பலத்தையும் மூர்க்கத்தனமாகப் பயன்படுத்தும்  பிஎன்னுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வைத்த இண்ட்ராப்புக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எவ்வளவு கடன்பட்டிருக்கிறோம் என்பதை மலேசியர்களில் பலர் மறந்து விட்டார்கள்.

ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு முன்னர், ஏழை இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள், சமூக-பொருளாதார ரீதியில் ஓரங்கட்டப்பட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க இண்ட்ராப் மாபெரும் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்தது. பேரணியில் பங்கேற்க கோலாலம்பூர் தெருக்களில் திரண்ட வந்தனர் 40,000க்கும் மேற்பட்ட அதன் ஆதரவாளர்கள். நீதியும் நியாயமும் கேட்டு  அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாட்டின் அரசியல்வாழ்வில் அப்படி ஒரு நிகழ்வு அதற்குமுன் நிகழ்ததில்லை.

அடிப்படை உரிமைகளுக்காகவும் இந்திய சமூகத்தின் அவல நிலையின்பால் கவனத்தை ஈர்க்கவும் அவ்வியக்கத்தின் தலைவர்கள் செய்திட்ட தியாகங்கள் எத்தனை எத்தனை. அத்தனையும் மறக்கப்பட்டதுபோன்று தெரிகிறது.

எவ்வகையிலும் அவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடச் செய்வதற்காகவே பேரணிக்குப் பின்னணியில் இருந்த முக்கிய புள்ளிகள் ஐவர்  உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். ஆதரவாளர்கள் பலரின்மீது பலவகை அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 

ஆனாலும் இண்ட்ராப் இயக்கம், அரசியலில் வலுவான தாக்கத்தை உண்டுபண்ணியது.அதை 2008 பொதுத்தேர்தல் முடிவுகள் பிரதிபலித்தன. .இண்ட்ராப் போராட்டத்தால் உத்வேகம் பெற்ற வாக்காளர்கள் பிஎன் கொள்கைகளிலும் தலைவர்களிடத்திலும் போலித்தனம் மிகுந்திருப்பதைக் கண்டுகொண்டனர். ஆளும் கட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் துணைவையும் பெற்றனர்.

இவ்வளவு மாற்றங்கள் ஏற்படக் காரணமான இண்ட்ராபுக்கு நாம் எவ்வளவு கடன் பட்டிருக்கிறோம். ஆனால், பிரிட்டனில் தன் வழக்கை வாதாட இண்ட்ராப் ஏற்பாடு செய்துள்ள வழக்குரைஞர் இம்ரான் கான் மலேசியா வந்தபோது அவர் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து மலேசியர்களில் மிகச் சிலரைத் தவிர மற்றவர்கள் அக்கறை கொள்ளாததை நினைக்கும்போது ஏமாற்றம், இரட்டிப்பு ஏமாற்றம்தான் ஏற்படுகிறது.

ஆகஸ்ட் 12-இல் கேஎல்ஐஏ வந்திறங்கிய இம்ரான் கான், அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டு மறுநாள் திருப்பி அனுப்பப்பட்டார். அவ்விவகாரத்தில் லண்டன் உயர் அதிகாரிகளும் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளும் உதவ முன்வந்தனர்.  ஆனால், மலேசிய அதிகாரிகள் அதைப் பொருட்படுத்தவில்லை.

ஒரு வழக்குரைஞர் அவரின் கட்சிக்காரர்களைச் சந்திக்க முடியாதபடி தடுத்து நிறுத்தியது ஏன் என்று அதிகாரிகள் இதுவரை விளக்கமளிக்கவில்லை.

இதற்கு மலேசிய வழக்குரைஞர் மன்றமோ, சமூக அமைப்புகளோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார்களா என்றால் அதுவும் இல்லை என்கிறது இண்ட்ராப் வட்டாரம் ஒன்று.

கான் ‘தடைசெய்யப்பட்ட மனிதராம்’,நாட்டுக்குள் நுழையத் தடை செய்யப்பட்டவர் பட்டியலில் அவரது பெயரும் இருக்கிறதாம். அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், கான், மனித உரிமைப் போராட்டங்களுக்காக  காமன்வெல்த்தில் நன்கு அறியப்பட்டவர். அவர் தடுத்து வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதற்கு எதிராக எவரும் மூச்சு விடாததுதான் அதிர்ச்சி அளிக்கிறது.

இண்ட்ராப்மீது நம்பிக்கை இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் ஆனால், இதற்கு எதிராகக் குரல் எழுப்பாதிருந்தால் அவர் நாடு கடத்தப்பட்டதை சரிதான் என்று ஏற்றுக்கொள்கிறோம் என்றாகிவிடும். இது பன்னாட்டு நடைமுறைகளுக்கு முரணான ஒரு விசயம். மேலும், அவர் மலேசியாவுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை என்கிறபோது அவரை எப்படி “நாட்டின் பாதுகாப்பு மிரட்டல்” என்று கருதுவது.

ஒரு மாதத்துக்குமுன், ஸ்கோர்பியன் நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் தொடர்பில்  இங்கு வருகை மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டின் வழக்குரைஞர் வில்லியம் போர்டன் திருப்பி அனுப்பப்பட்டபோது பலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

ஆனால், கான் நாடுகடத்தப்பட்டு ஒரு வாரம் ஆகியும் மூச்சில்லை;பேச்சில்லை. “நிச்சயமாக சமூக அமைப்புகளும் வழக்குரைஞர் மன்றமும் தாங்கள் இதை அறியோம் என்று சொல்ல முடியாது” என்றந்த இண்ட்ராப் வட்டாரம் கூறியது.

குத்தலான சொற்கள்தாம்.என்றாலும் மலேசியர்கள் அவர்கள் சம்பந்தப்பட விரும்பாத விவகாரங்களை நீண்ட நாள் நினைவில் வைத்துக்கொள்வதில்லை என்பது ஒரு வருந்ததக்க உண்மை.ஏதோ சில நினைவுகள் ஒட்டிக்கொண்டிருந்தால் அவையும்கூட அதிகாரப்பூர்வமாக கட்டிவிடப்படும் கதைகளில் அதுவும் அடித்துச் செல்லப்படுகின்றன.

———————————————————————————————————————————

DR LIM TECK GHEE- Policy Initiatives மையத்தின் இயக்குனர்