மலேசியாவும் மற்ற இஸ்லாமிய நாடுகளும் தங்கள் மேம்பாட்டுக்கு மாதிரியாக மேலை நாடுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக மற்ற கிழக்கு நாடுகளைப் பார்க்க வேண்டும். இவ்வாறு முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.
தாம் பிரதமராக இருந்த காலத்தில் ஜப்பானிய, தென் கொரிய வேலை நெறிமுறைகளையும் வர்த்தக நுட்பங்களையும் பின்பற்றும் ‘கிழக்கை நோக்கும்’ கொள்கையை அறிமுகப்படுத்தியது சரியான முடிவு என்றும் அவர் கருதுகிறார்.
“இப்போது மேலை நாடுகள் பல பிரச்னைகளை எதிர்நோக்குகின்றன. மேற்கத்திய நாடுகள் அதிக அளவுக்கு கடன் வாங்கி விட்டன. இப்போது அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தடுமாறுகின்றன.
அதுவே அவை எதிர்நோக்கும் பிரச்னை. நீங்கள் அது போன்ற ஒரு நாட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.”
“ஜப்பான், தென் கொரியா, சீனா போன்ற கிழக்கு நாடுகளைப் பாருங்கள்.. சீனாவிடம் 3.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் சேமிப்பில் உள்ளது. அவர்கள் பணத்தில் நீச்சலடித்துக் கொண்டிருக்கிறார்கள். மேற்கத்திய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை விட சிறந்த பொருட்களை கொரியா உருவாக்கிக் கொண்டிருக்கிறது.”
“ஜப்பான் போரில் தோல்வி கண்டது உங்களுக்கு தெரியும். அது முற்றாக அழிந்து விட்டது. அது தன்னை மீண்டும் வலுப்படுத்திக் கொண்டது. இப்போது அது உலகில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் ஆகும். நீங்கள் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ள விரும்பினால் வெற்றி பெற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். தோல்வி அடைந்தவர்களிடமிருந்து அல்ல,” என மகாதீர் மூன்றாவது லங்காவி இஸ்லாமிய நிதி-பொருளாதார அனைத்துலக மாநாட்டில் கேள்வி பதில் நேரத்தின் போது பேசினார்.
மேற்கத்திய நாடுகள் முற்றாக தோல்வி கண்டு விட்டதால் அவற்றிடமிருந்து எதனையும் கற்றுக் கொள்ள முடியாது என்றும் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.
“ஆகவே நாம் தொடர்ந்து கிழக்கை நோக்க வேண்டும். மேற்கை அல்ல. மேற்கு திவாலாகி விட்டது,” என்றார் அவர்.