“எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள்; நாங்கள் உங்களுக்கு 2/3 பெரும்பான்மையைத் தருகிறோம்”

பள்ளிக்கூடங்களில் ஆங்கிலத்தில் கணித, அறிவியல் பாடங்களை போதிப்பதற்கான தேர்வை பள்ளிக்கூடங்களுக்கு வழங்குவதில்லை என்னும் அரசாங்க முடிவால் பெற்றோர்களும் பிள்ளைகளும் ‘மனமுடைந்து’ போயிருப்பதாக பேஜ் எனப்படும் மலேசியக் கல்விக்கான பெற்றோர் நடவடிக்கை அமைப்பு கூறுகிறது.

“பெரும்பாலான கணித, அறிவியல் ஆசிரியர்கள், கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு அந்த இரு பாடங்களையும் ஆங்கிலத்தில் போதித்த பின்னர் இரு மொழிகளிலும் போதிப்பதற்குத் திறமை பெற்றிருப்பர். ஆகவே ஆசிரியர் பற்றாக்குறை என்பதற்கே இடமில்லை,” என அந்த அமைப்பின் தலைவர் நூர் அஸிமா அப்துல் ரஹிம் கூறினார்.

கணித, அறிவியல் பாடங்களைப் போதிப்பதற்கு பயன்படுத்தப்படும் மொழியைத் தேர்வு செய்வதற்கு பள்ளிக்கூடங்களுக்கு கல்வி அமைச்சு அனுமதி அளிக்காது என நேற்று கல்வி அமைச்சருமான துணைப்பிரதமர் முஹைடின் யாசின் அறிவித்திருந்தார்.

அத்தகைய வாய்ப்பை வழங்குவது நிலமையை மென்மேலும் சிக்கலாக்கி விடும் என்றார் அவர். தேர்வு செய்ய வாய்ப்பு வழங்குவது திட்டமிடும் பணிகளுக்குச் சிரமங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தேர்வு செய்ய (பள்ளிக்கூடங்கள் அனுமதிக்கப்பட்டால்) கல்வி முறையில் பெரிய குழப்பமே ஏற்படும்.”

“அமைச்சு திட்டமிடுவதற்கும் சிரமம் ஏற்படும். ஒரு பள்ளிக்கூடம் ஆங்கிலம் அல்லது பாஹாசா மிலாயுவில் போதிப்பதைத் தேர்வு செய்தால் நாங்கள் எப்படி ஆசிரியர்களை வழங்க முடியும் ?” என முஹைடின் வினவினார்.

அந்த இரு பாடங்களையும் ஆங்கிலத்தில் போதிப்பதற்கு முடிவு செய்யும் பள்ளிக்கூடங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ஆசிரியர்களை வழங்குவது இன்னும் சுலபம் என நூர் அஸிமா சொன்னார்.

“கிட்டத்தட்ட 3 பில்லியன் ரிங்கிட் மக்களுடைய வரிப்பணம் செலவு செய்யப்பட்ட பின்னர் பிரச்னைகளை நேரடியாக சமாளிக்க வேண்டுமே தவிர மூடி மறைக்கக் கூடாது,” என அவர் விடுத்த இன்னொரு அறிக்கை கூறியது.

“அரசாங்கம் ‘ஒரே மலேசியா’ பற்றிப் பேசுகிறது. ஆனால் இன்னும் ‘ஒரே மலேசியா’ பள்ளிக்கூடத்தை அது காட்டவில்லை.”

கல்வி முறை இன அடிப்படையிலான பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளைப் பிரிப்பதில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. அத்துடன் இப்போது அனைத்துலகப் பள்ளிக்கூடங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் வசதி அடிப்படையில் பிள்ளைகள் மேலும் பிரிக்கப்பட்டுள்ளன.”

“அரசாங்கம் மக்களுக்கு முதலிடம் எனக் கூறுகிறது. ஆனால் “பெற்றோர்களையும் அவர்களது குழந்தைகளையும் கடைசியாகக் கவனிப்பதாக நாங்கள் கருதுகிறோம்,” என நூர் அஸிமா சொன்னார்.

“இந்த நாட்டில் 5.4 மில்லியன் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்குச் செல்கின்றனர். அதே எண்ணிக்கையிலான பெற்றோர்களும் வாக்காளர்களாக உள்ளனர்,” என்றார் அவர்.

“ஆங்கிலத்தில் கணித அறிவியல் பாடங்களைப் போதிக்கும் கொள்கையைக் கைவிடும் முடிவு அரசியல் ரீதியிலானது அல்ல என்றால் பெற்றோர்களுக்குத் தேர்வு செய்யும் வாய்ப்பை கொடுங்கள்.”

“அது அரசியல் ரீதியிலானது என்றால் தேசிய தொடக்க, இடைநிலைப் பள்ளிகளுக்கு ஆங்கிலத்தில் அவ்விரு பாடங்களையும் கற்பிப்பதற்கான தேர்வை வழங்குங்கள். நாங்கள் உங்களுக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையைக் கொடுக்கிறோம். நாங்கள் அதனைச் செய்வதை நீங்கள் மென்மேலும் சிரமமாக்கிக் கொண்டிருக்கின்றீர்களா ? எங்கள் வாக்கை எதிர்க்கட்சிகளுக்குச் செலுத்துவதற்கு எங்களை அனுமதிக்காதீர்கள் ?”

நாளை அந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் துறையிடம் பேஜ் அமைப்பு மகஜர் ஒன்றை சமர்பிக்கத் திட்டமிட்டுள்ளது.