பொதுப் பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு வகை செய்யும் யூயூசிஏ என்ற பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15(5) வது பிரிவு அரசியலமைப்புக்கு முரணானது. பேச்சுச் சுதந்திரத்தை மீறுகிறது என முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
யூயூசிஏ கட்டுப்பாடுகளை விதிப்பது அரசியலமைப்புக்கு உட்பட்டது என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முறையீட்டு நீதிமன்றம், பெரும்பான்மை அடிப்படையில் மாற்றியது.
அந்த முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளில் நீதிபதி முகமட் ஹிஷாமுடின் முகமட் யூனுஸும் நீதிபதி லிண்டோன் அல்பர்ட்-டும் நான்கு முன்னாள் யூகேஎம் என்ற மலேசிய தேசியப் பல்கலைக்கழக மாணவர்கள் செய்து கொண்ட முறையீட்டை அனுமதித்தனர்.
அந்த மூவர் கொண்ட குழுவில் இடம் பெற்றிருந்த நீதிபதி லாவ் ஹோப் பிங் மட்டும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
யூயூசிஏ சட்டத்தின் 15வது பிரிவு கூட்டரசு அரசியலமைப்புக்கு ஏற்ப உள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை லாவ் நிலை நிறுத்தினார்.
யூயூசிஏ சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என பிரகடனம் செய்யுமாறு அந்த நான்கு முன்னாள் யூகேஎம் மாணவர்களும் விண்ணப்பம் செய்து கொண்டிருந்தனர்.
அந்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் முறையீட்டு, சிறப்பு அதிகாரப் பிரிவு இதற்கு முன்னர் நிராகரித்தது.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு வகை செய்யும் யூயூசிஏ சட்டத்தின் 15வது பிரிவு – பேச்சுச் சுதந்திரம் சம்பந்தப்பட்ட கூட்டரசு அரசியலமைப்பின் 10வது பிரிவை மீறவில்லை என உயர் நீதிமன்ற நீதிபதி அஸியா அலி தீர்ப்பளித்தார்.
யூயூசிஏ தடை செய்துள்ள அரசியல் நடவடிக்கைகளில் பங்கு கொண்டதற்காக உலு சிலாங்கூர் இடைத் தேர்தலின் போது முகமட் ஹில்மான் இட்ஹாம், இஸ்மாயில் அமினுடின், அஸ்லின் ஷாபினா முகமட் அட்ஸா, வோங் கிங் சாய் என்ற அந்த நால்வரையும் போலீஸ் கைது செய்தது.
“யூகேஎம் நால்வர்” என அழைக்கப்பட்ட அவர்கள் மீது இவ்வாண்டு ஜுலை மாதம் 4ம் தேதி பல்கலைக்கழகம் நடத்திய ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை எதிர்நோக்கினர்.
ஆனால் அவர்கள் குற்றம் புரியவில்லை என பல்கலைக்கழக ஒழுங்கு வாரியம் முடிவு செய்தது. அந்த நான்கு அரசியல் விஞ்ஞான மாணவர்களும் கடந்த மாதம் பட்டப்படிப்பை முடித்து கொண்டுள்ளனர்.
பொதுப் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வரையில் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடுவதற்கு முறையீட்டு நீதிமன்ற முடிவு வகை செய்துள்ளது.
வழக்குரைஞர் முகமட் ஷாபி அப்துல்லா, யூகேஎம்-ஐ பிரதிநிதித்து அந்த வழக்கில் ஆஜரானார். அந்த முடிவுக்கு எதிராக யூகேஎம் விண்ணப்பிக்கும் என அவர் கோடி காட்டினார்.