“பினாங்கு பக்காத்தான் அரசுக்கு தேனிலவு இன்னும் முடியவில்லை”

2008-டில் மாநில அரசாங்கத்தைக் கைப்பற்றிய பக்காத்தான் ரக்யாட் இன்னமும் தேனிலவு கொண்டாடிக்கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது என்று பினாங்கின் மாற்றரசுக் கட்சித் தலைவர் அஸ்ஹார் இப்ராகிம் சாடியுள்ளார்.

தன்னுடைய இயலாமைக்கு பக்காத்தான் முன்னைய பினாங்கின் பிஎன் அரசின்மீதும் மத்திய அரசின்மீதும் பழி போடுவதே வழக்கமாகி விட்டது என்றாரவர்.

பக்காத்தானிடம் காணப்படும் குறைபாடுகள் மாநிலத்தை ஆளும் திறன் அதற்கு இல்லை என்பதைக் காட்டுகின்றன.

2008 பொதுத் தேர்தலின்போது பக்காத்தான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று அஸ்ஹார் குறிப்பிட்டார்.

“(புக்கிட் ஜம்புலில்) புலி பூங்கா ஒன்றை அமைக்கப்போவதாக சொன்னார்கள். ஒன்றும் உருவாகவில்லை”, என்று மாநில அரசின் 2012 பட்ஜெட் மீதான விவாதத்தின்போது அஸ்ஹார் கூறினார்.

“கொரிய நிறுவனம் ஒன்று ரிம300 மில்லியனை கோல்ஃப் திடல் ஒன்றில் முதலீடு செய்யப்போவதாக சொன்னார்கள், ஒன்றையும் காணோம்.”

முதலமைச்சர் லிம் குவான் எங்கும் அவரின் சகாக்களும் அவர்களின் சொத்துப்பட்டியலை இன்னும் அறிவிக்கவில்லை என்றும் அந்த பெனாக சட்டமன்ற உறுப்பினர் சாடினார்.

தேர்தலின்போது பினாங்கு மேம்பாட்டுக் கழகம் அடுக்குமாடி வீடுகளுக்குச் சாயம் அடிக்கும், குறைந்த விலை வீடுகளையும்  மத்தியநிலை வீடுகளையும் கட்டும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது என்றவர் குறிப்பிட்டார்.

பாகான் அஜாமிலிருந்து கர்னி டிரைவ் வரை சுரங்கப் பாதை அமைக்கும் திட்டம், ஹலாம் மையம் என பல நிறுவனங்களுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அடுக்கினால் பெரும் குவியலாகி விடும் என்றவர் கிண்டலடித்தார்.

“சொன்னதுபோல் எதுவும் நடக்கவில்லை. இதே வாக்குறுதிகள் அடுத்த ஆண்டு மீண்டும் கொடுக்கப்படும் என்று நினைக்கிறேன்.

“ஒரு தவணை கொடுக்கப்பட்ட வாய்ப்பிலிருந்து பக்காத்தானிடம் பினாங்கை ஆளும் ஆற்றல் இல்லை என்பது தெளிவாகியுள்ளது…எனவே, (அரசை) மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது”, என்றாரவர்.

பட்ஜெட் பினாங்கு மக்களுக்கு நிறைய நன்மைகளைச் செய்வதாகக் கூறினாலும் பினாங்கின் வரலாற்றில் அதுவே மிகப் பெரிய பற்றாக்குறை பட்ஜெட் என்று அஸ்ஹார் குறைகூறினார்.

பட்ஜெட்டில் ரிம213.71மில்லியனுக்கு துண்டு விழும் என மதிப்படப்படுகிறது.

லிம் தம் பட்ஜெட் உரையில், 2008-இல் 600.47 மில்லியனாக இருந்த மாநில அரசுக் கடன் இப்போது ரிம29.66மில்லியனாக உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதாவது கடன் தொகையில் ரிம600.47மில்லியன் குறைந்துள்ளது.

இதற்கு விளக்கம் கேட்ட அஸ்ஹார், நீர்வள சொத்துகளை பெங்குருசான் அசெட் ஆயர் பெர்ஹாட் நிறுவனத்துக்கு மாற்றிவிட ஜூன் 2-இல் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாகத்தான் கடன் தொகை குறைந்துள்ளதா என வினவினார்.

இதை விளக்க வேண்டும். விளக்கமளிக்காவிட்டால், மாநில அரசு 3.5 ஆண்டுகளாக கடனைக் கழிக்க மாதம்தோறும்  ரிம14மில்லியனை செலுத்தி வந்துள்ளதாக ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்திவிடும்  என்று அஸ்ஹார் கூறினார்.

அதற்குப் பதிலளித்த லிம், அஸ்ஹார் தம் பட்ஜெட் உரையைப் படித்துப் பார்க்க வேண்டும் அதில் விளக்கம் தரப்பட்டுள்ளது என்றார்.

மாதம்தோறும்  கடனுக்காக ரிம14மில்லியன் செலுத்தப்பட்டதாக அஸ்ஹார் கூறியதை மறுத்த லிம், அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பண ஓட்டம், சொத்துகள், கடன்கள் பற்றி ஒரு சிறு விளக்கவுரை ஆற்றினார்.மேலும் விளக்கம் தேவை என்றால், “கட்டணம் வாங்கிக்கொண்டுதான் பாடம் நடத்த வேண்டியிருக்கும்” என்றாரவர்.

“இந்தக் கடன்களைச் சேர்துவைத்தது பிஎன். இப்போது பக்காத்தான் அந்தக் கடன்களைத் தீர்த்துள்ளது, இதுதான் உண்மை”, என்று லிம் கூற பக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர். 

“இது நல்ல காரியம் இல்லையா? மத்திய அரசைப் [போல் நாமும் கடன்களைப் பெருக்கிக்கொண்டே போக வேண்டும் என்பதைத்தான் அம்னோ பிரதிநிதிகள் விரும்புகிறார்களா? நான் அப்படி நினைக்கவில்லை”, என்றவர் மேலும் குறிப்பிட்டார்.