வெளிநாடுகளில் ஒரு மில்லியன் மலேசியர்கள்!

இவ்வாண்டு ஏப்ரல் முடிய, வெளிநாடுகளில் சுமார் ஒரு மில்லியன் மலேசியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இன்று மக்கள் அவையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

உலகப் பொருளகமும் பிரதமர்துறையின் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவும் கூட்டாக மேற்கொண்ட ஓர் ஆய்வில் இது தெரிய வந்தததாக பிரதமர்துறை துணை அமைச்சர் எஸ்.கே. தேவமணி கூறினார்.

அவர்களை மலேசியாவுக்குக் கவர்ந்திழுக்க டேலண்ட் கோர்ப்பரேசன் மலேசியா பெர்ஹாட்(டேலண்ட்கோர்ப்) என்னும் அமைப்பு அமைக்கப்பட்டது ஒரு சரியான நடவடிக்கையாகும் என்றாரவர்.

வெளிநாடுகளில் பணிபுரியும் மலேசியர்களைத் திரும்ப அழைத்து வர டேலண்ட்கோர்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக அவர் சலாஹுடின் ஆயுப்புக்கு (பாஸ்-கூபாங் கிரியான்) விளக்கினார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் மலேசியர்கள் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கும் பணம் ஒரு வகையில் நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவுகிறது என்றும் தேவமணி கூறினார்.