பக்காத்தான்: தேர்தல் குழுவில் பிஎன் “எங்களை விழுங்கி விடும்”

தேர்தல் சீர்திருத்தம் மீதான உத்தேச நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் அமைப்பு குறித்து பக்காத்தான் ராக்யாட் எம்பிக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

பிஎன் ஆதரவு சுயேச்சை ஒருவர் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்பது அந்த ஆட்சேபத்துக்கு முக்கியக் காரணம் என மலேசியாகினியிடம் அவர்கள் தெரிவித்தனர்.

“அந்தக் குழுவில் பக்காத்தான் எப்படி வாக்களிக்க வேண்டும்?”

ஐந்து பிஎன் எம்பிக்கள், தலைவராக ஒரு பிஎன் அமைச்சர், பிஎன் ஆதரவாளராக இருக்கும் ஒரு சுயேச்சை எம்பி, ஆகியவர்களுடன் மொத்தம் எழுவர் பிஎன்னுக்கு ஆதரவாக இருப்பார்கள். பக்காத்தானுக்கு மூவர் மட்டுமே இருப்பர் என பிகேஆர் குவாந்தான் எம்பி புஸியா சாலே கூறினார்.

நேற்று பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் அறிவித்த அமைப்பு முறை தேர்தல் குழுவைத் தோற்றுவிப்பதற்கான விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என்றும் அவர் சொன்னார்.

தேர்வுக் குழு அமைப்பு, நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும் என விதிமுறை கூறுகிறது.

நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 222 உறுப்பினர்களில் 9 பேர் மட்டுமே சுயேச்சை எம்பிக்கள்.

அவர்கள் தேர்வுக் குழுவில் இடம் பெறவே கூடாது,” என அந்த பிகேஆர் உதவித் தலைவர் தெரிவித்தார்.

அவருடைய கருத்துக்களை டிஎபி ராசா எம்பி அந்தோனி லோக்கும் ஒப்புக் கொண்டார். அந்த சுயேச்சை எம்பிக்கள் யாரும் சுயேச்சைகளாக நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

“அவர்கள் அனைவரும் பக்காத்தான் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். ஆகவே உண்மையில் சுயேச்சை எம்பி என்று யாருமே இல்லை,” என்றார் லோக்.

சுயேச்சை எம்பியை இணைத்துக் கொள்வது பிஎன்-னின் அரசியல் நடவடிக்கை என அவர் வருணித்தார். “அந்த எம்பியின் சார்பு நிலையை நாம் அறிவோம். அதனால் பிஎன்னுக்கு குழுவில் ஆதரவு அதிகமாக இருக்கும்.”

‘முதலில் எங்களுடன் பேசுங்கள்’

அந்தத் தேர்வுக் குழுவின் அமைப்பும் அதன் பணிகளும் முடிவு செய்யப்படும் முறையைப் பார்க்கும் போது பிஎன் அந்த விஷயத்தில் எதிர்த்தரப்பை விழுங்கி விட முயற்சி செய்வதாகத் தோன்றுகிறது என குபாங் கெரியான் எம்பி சலாஹுடின் அயூப் கூறினார்.

“அந்த குழுவின் அமைப்பு, பணிகள் ஆகியவை குறித்து மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்தாய்வு செய்யாமல் ஒரு வழிப் பாதையாக அமைச்சர் நடந்து கொள்வது குறித்து நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன்,” என அவர் சொன்னார்.

“இதனை அவ்வாறு நடத்த அவர்கள் திட்டமிட்டால் நாம் எதனைச் சாதிக்க முடியும்?”

அக்டோபர் மாதம் 3ம் தேதி நாடாளுமன்றத்தில் அந்தக் குழு அமைக்கப்படுவதற்கு முன்னதாக கலந்தாய்வுக்கு மற்ற அரசியல் கட்சிகளை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அழைப்பதற்கு இன்னும் அவகாசம் உள்ளது என்றும் சலாஹுடின் கருதுகிறார்.

“எல்லாவற்றையும் விட குழுவின் பணிகள் முழுமையடையும் வரையில் திடீர் தேர்தல்களை நடத்தப் போவதில்லை என பிரதமர் உத்தரவாதம் அளிப்பது மிக முக்கியமாகும்.”

தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் வலுவான அரசியல் உறுதியைக் கொண்டிருந்தால் அரச விசாரணை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த ஆணையம் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை விட “அதிக வலிமை வாய்ந்தது. நம்பிக்கைக்குரியது” என்றும் சலாஹுடின் குறிப்பிட்டர்.

பக்காத்தான் புறக்கணிக்கும் சாத்தியமில்லை

என்றாலும் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை பக்காத்தான் புறக்கணிக்கும் சாத்தியமில்லை என அந்த எம்பிக்கள் குறிப்பிட்டனர். அவ்வாறு செய்வது எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

“நாங்கள் பங்கு கொள்ளவில்லை என்றால் நாங்கள் தோல்வி கண்டவர்கள் என பிஎன் கூறும். ஆகவே நாங்கள் பங்கு கொள்ளவும் வேண்டும். அதே வேளையில் அது பற்றி அதிகம் சத்தம் போடவும் வேண்டும்,” என்றார் புஸியா.

இதனிடையே உத்தேச தேர்வுக் குழுவின் அமைப்பு பற்றி அதிகம் விமர்சனம் செய்ய வேண்டாம் என பக்காத்தான் தலைவர்களுக்கு துணைப் பிரதமர் முஹைடின் யாசின் அறிவுரை கூறியிருப்பதாக பெர்னாமா அறிவித்துள்லது.

அந்தக் குழு அமைக்கப்படுவதை அரசாங்கத்தின் துணிச்சலான முயற்சி என அவர்கள் கருத வேண்டும் என அவர் சொன்னார்.

“அதன் அமைப்பு பற்றிய விவரங்கள் வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். ” அந்த யோசனையை ஏற்றுக் கொள்வதில் பிரதமர் காட்டியுள்ள உண்மையான போக்கே நமக்கு முக்கியமானதாகும்.”

“ஆரூடங்களை நிறுத்திக் கொண்டு விஷயங்களை விவாதிப்பதற்கு அதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என அவர் அரச மலேசியப் போலீஸ் கல்லூரியில்  நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் கூறினார்.