அம்னோவுக்கு ‘கம்யூனிஸ்ட்’ சீனாவுடன் உறவுகள் இல்லை

பிஎன் தலைமையிலான கூட்டரசு அரசாங்கமே சீன மக்கள் குடியரசுடன் உறவுகளை வைத்துக் கொண்டுள்ளது. அம்னோ அல்ல என்று வெளியுறவு அமைச்சு இன்று கூறியது.

மக்களவையில் இன்று காலை கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த வெளியுறவுத் துணை அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் அவ்வாறு தெரிவித்தார்.

அம்னோ அண்மையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் கையெழுத்திட்ட ஆவணம் ஒன்றின் வழி உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுவது குறித்து பதில் அளிக்குமாறு பாஸ் பொக்கோக் சேனா உறுப்பினர் மாஹ்புஸ் ஒமார் அந்த அமைச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

இளைஞர் தலைமைத்துவ பரிவர்த்தனை சம்பந்தப்பட்ட அந்த ஆவணம் கையெழுத்தானதை அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர், சீனாவுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டிருந்த போது பார்வையிட்டதாக வெளியான தகவல்களை மாஹ்புஸ் தமது கேள்வியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் ரியோட் அத்தகைய ஆவணம் கையெழுத்தானதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

ஆளுமைச் சித்தாந்த வேறுபாடுகளைக் கருதாமல் அந்நிய நாடுகளுடன்  மலேசியா உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு வருவதாக அவர் சொன்னார். சீனாவுடனான மலேசிய உறவுகள் இரு தரப்புக்கு விரிவான பொருளாதார நன்மைகளைக் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாஹ்புஸ் தமது கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்திய போது, ஒரு நாடு கம்யூனிஸ்ட் நாடு எனக் ‘கருதப்பட்டாலும்’ அது கம்யூனிஸ்ட்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை என ரியாட் கூறினார்.

அம்னோ வெளிநாட்டில் உள்ள ஒரு கம்யூனிஸ்ட் கட்சியுடன் அணுக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு உள்நாட்டில் “கம்யூனிஸ்ட்களின் புகழ் பாடுவதாக” தான் எண்ணிக் கொள்கின்றவர்களை தாக்கும் ‘இரட்டை வேடம்’ போடுவதாக மாஹ்புஸ் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

அந்தக் கருத்து மாட் இந்த்ரா மீது எழுந்த சர்ச்சை சம்பந்தப்பட்டதாகும். மாட் இந்த்ரா, பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வுகளுக்காக பாராட்டப்படுகிற மலாய் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ஆனால் அவர் மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் வைத்திருந்ததாகக் கூறப்படும் உறவுகளுக்காக சிலர் அவரைக் குறை கூறுகின்றனர்.