சந்தை விலைக்கு மேலாக அரசாங்கக் கொள்முதலை அங்கீகரிக்கும் அரசு அதிகாரிகள் அந்தக் கூடுதல் செலவுக்கான பணத்தை தங்கள் சொந்த பாக்கெட்டிலிருந்து கொடுக்குமாறு செய்யப்பட வேண்டும் என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் பரிந்துரை செய்துள்ளார்.
தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல நிதி முறைகேடுகளுக்கு முடிவு கட்டுவதற்கு அதுவே சிறந்த வழி என அவர் கருதுகிறார்.
“நிதி முறைகேடுகளை துடைத்தொழிப்பதற்கு எத்தனையோ எளிதான வழிகள் இருக்கும் போது அவை ஏன் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை அறிய மலேசியர்களுக்கு உரிமை உண்டு,” என அவர் இன்று விடுத்த அறிக்கை கூறியது.
என்றாலும் பொது நிதிகளை தவறாகப் பயன்படுத்தும் “பெரிய பெருச்சாளிகளை” நீதிக்கு முன் நிறுத்தப்பட்டால் தான் அது சாத்தியமாகும் என ஈப்போ தீமோர் எம்பி-யுமான லிம் சொன்னார்.
எடுத்துக் காட்டுக்கு வழக்கமாக 50 ரிங்கிட்டுக்கு விற்கப்படும் கார் ஜாக் என்ற சாதனம் 5,700 ரிங்கிட்டுக்கு வாங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
அரசாங்கம் ஆண்டுதோறும் ஊழல், முறைகேடுகள் காரணமாக 28 பில்லியன் ரிங்கிட்டை இழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது எனக் கூறிக் கொண்ட லிம், அரசாங்க ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் “முற்றாக செயலிழந்து விட்டதாக” குறை கூறினார்.
ஊழலை ஒழிப்பதற்கு அரசியல் உறுதியுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படாத வரையில் தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிதி முறைகேடுகள் தொடரும்.”