மலேசியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் குறித்து விளக்கமளிக்குமாறு பக்காத்தான் எம்பி ஒருவர் அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சைக் கேட்டுக் கொண்ட பின்னர் இரண்டு பக்காத்தான் எம்பி-க்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இருக்கையில் அமருமாறு விடுக்கப்பட்ட உத்தரவை மீறியதற்காக டிஏபி பாக்ரி எம்பி எர் தெக் ஹுவா-வை சபாநாயகர் பண்டிக்கார் அமின் முலியா வெளியேற்றினார்.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போது இஸ்ரேலுடனான மலேசியாவின் நடப்புப் பொருளாதார அரசதந்திர உறவுகளின் நடப்பு நிலை குறித்து விளக்கமளிக்குமாறு அனைத்துலக வாணிக, தொழிலியல் அமைச்சர் முஸ்தாப்பா முகமட்டை எர் கேட்டுக் கொண்டார்.
ஆனால் முஸ்தாப்பா, எர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்காமல் தமது அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் குறித்த விவாதங்களை முடித்து வைத்து உரையாற்றி விட்டு தமது இருக்கையில் அமர்ந்து விட்டார்.
அமைச்சர் ஏற்கனவே இருக்கையில் அமர்ந்து விட்டதால் இனிமேல் எந்தத் தலையீடும் அனுமதிக்கப்பட மாட்டாது என பண்டிக்கார் எர்-க்கு நினைவுபடுத்தினார்.
“அமருங்கள் மாண்பு மிகு,” என பண்டிக்கார் எர்-டம் கூறினார்.
ஆனால் அமர மறுத்த அமைச்சர் தமது கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும் என பிடிவாதமாக வலியுறுத்தினார்.
“என் கேள்வி முக்கியமானது. அது இஸ்ரேலுடனான நமது உறவுகள் சம்பந்தப்பட்டது. மக்கள் அறிய விரும்புகின்றனர். அமைச்சர் பதில் அளிக்க வேண்டும்,” என எர் திரும்பத் திரும்பச் சொன்னார்.
எர் தொடர்ந்து மறுத்ததும் பண்டிக்கார் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.
“மாண்பு மிகு அமர வேண்டும். நீங்கள் அமரவில்லை என்றால் ஒய்வு எடுக்குமாறு நான் உங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கும்,” என சபாநாயகர் மேலும் எச்சரித்தார்.
பாக்ரி எம்பி தொடர்ந்து நின்று கொண்டே இருந்ததால் மக்களவையிலிருந்து வெளியே செல்லுமாறு அவரைக் கேட்டுக் கொள்வதைத் தவிர சபாநாயகருக்கு வேறு வழி இல்லாமல் போய் விட்டது.
அப்போது திடீரென டிஏபி சிகாம்புட் எம்பி லிம் லிப் எங் உரத்த குரலுடன் இடைமறித்தார்.
“வெளியே போக வேண்டாம் !” என அவர் கூறினார்.
லிம்-மின் குரலைச் செவிமடுத்ததும் “அது யார்,” என பண்டிக்கார் வினவினார்.
“நான் தான்,” என லிம் பதில் அளித்தார்.
பண்டிக்கார் பின்னர் எர்-உடன் வெளியே செல்லுமாறு லிம்-முக்கும் உத்தரவிட்டார். அவை நடவடிக்கைகளை சீர் குலைக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக அவர்கள் இருவரையும் அவர் வெளியேற்றினார்.
இறக்குமதிக் கட்டுப்பாட்டுச் சட்டம் என்ற நாடாளுமன்றச் சட்டம் ஒன்றின் கீழ் இஸ்ரேலுடனான வாணிக உறவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.