தேர்தல் மோசடியில் தாங்கள் சம்பந்தப்பட்டதாக முன்னாள் ஆயுதப் படை வீரர்கள் சிலர் கூறிக் கொள்வது, துரோகச் செயல் என ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் சுல்கிப்லி முகமட் ஜின் வருணித்துள்ளார்.
இன்று பிற்பகல் வெளியிட்ட உணர்வுப்பூர்வமான அறிக்கை ஒன்றில் சுகிப்லி அந்தக் குற்றச்சாட்டுக்களை கூறியவர்களைக் கடுமையாகச் சாடியதுடன் மலேசிய ஆயுதப் படைகளுக்கு அவர்கள் காட்டும் “விசுவாசம்” குறித்தும் அவர் கேள்பி எழுப்பினார்.
“அவர்களுடைய நடவடிக்கையை துரோகமாக கருதப்பட முடியும். அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆயுதப் படைகள் நாட்டின் தற்காப்பு அரண் ஆகும். இனவம்சாவளி, சமய, அரசியல் சார்பு நிலை வேறுபாடின்றி எல்லா நிலையிலான மக்களும் அதனை ஆதரிக்க வேண்டும்.”
“தங்களது சொந்த நலன்களை மேம்படுத்த முயலுகின்றவர்கள் ஆயுதப்படைகளை பலிகடாவாக மாற்ற மாட்டார்கள் என நான் நம்புகிறேன். ஆயுதப் படைகள் ஆற்றும் பணிகளை மக்கள் ஆதரிக்க வேண்டும். பாராட்டவும் வேண்டும்.”
“அந்த வகையில்:” நீங்கள் எங்களுக்கு விசுவாசமாக இல்லை என்றால் நாங்கள் எப்படி உங்களுக்கு விசுவாசமாக இருக்க முடியும்?”
நேற்று நான்கு முன்னாள் இராணுவ வீரர்கள், தாங்கள் தேர்தல் மோசடியில் ஈடுபட்டதை எதிர்த்தரப்பைச் சார்ந்த பாஸ் கட்சி ஏற்பாடு செய்த நிருபர்கள் கூட்டத்தில் ஒப்புக் கொண்டனர்.
மேஜர் (ஒய்வு பெற்ற) ரிஸ்மான் மாஸ்டோர், கமாருல்ஸாமான் இப்ராஹிம், முகமட் நாசிர் அகமட், முகமட் கமில் ஒமார் ஆகியோரே அந்த நால்வரும் ஆவர். 1978ம் ஆண்டுக்கும் 1999ம் ஆண்டுக்கும் இடையில் நிகழ்ந்த மூன்று வெவ்வேறு தேர்தல்களில் ஆயிரக்கணக்கான அஞ்சல் வாக்குகளுக்குத் தாங்கள் குறியிட்டதாக அவர்கள் கூறிக் கொண்டனர்.
களத்திற்கு சென்றுள்ள நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான வீரர்களுக்காக அஞ்சல் வாக்குகளில் குறியிடுமாறு தங்களது தளபத்திய அதிகாரிகள் ஆணையிட்டதாகவும் அந்த நான்கு அதிகாரிகளும் கூறிக் கொண்டனர்.
ஏற்கனவே இந்த மாதத் தொடக்கத்தில் இன்னொரு முன்னாள் இராணுவ வீரர் ஒருவர், மற்ற இராணுவ வீரர்களுக்கான அஞ்சல் வாக்குகளுக்கு குறியிடுமாறு தமக்கு ஆணையிடப்பட்டதாக நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார்.