பிரதமரின் ஒரு மாதச் சம்பளத்தை நிறுத்திவைக்க மாற்றரசு எம்பி முயற்சி

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நிர்வாகம் “பிரச்னைகளும் குறைபாடுகளும் நிரம்பியது” என்பதால் அவரின் ஒரு மாதச் சம்பளம் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்றை மாற்றரசு நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா பதிவு செய்துள்ளார்.

அக்டோபர் 27-இல் சமர்பிக்கப்பட்ட அத்தீர்மானம் நாளைக் காலை மணி 11.30க்குக் கேள்வி நேரத்துக்குப் பின்னர் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தியான் சுவா (பிகேஆர்-பத்து), நஜிப்பின் ஒரு மாதச் சம்பளத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றார்.

“2009-இல் நஜிப் பதவி ஏற்றதிலிருந்து  பல பிரச்னைகள், பல விவகாரங்கள் தலைதூக்கித் தீர்வுகாணப்படாமல் இருக்கின்றன”, என்றாரவர்.

“இது, மறைமுகமாக பிரதமரின் தலைமைத்துவம் நிர்வாகம் ஆகியவற்றின்மீது கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் போன்றதுதான்”, என்று தியான் சுவா குறிப்பிட்டார்.