பெர்க்காசா:செக்சுவலிடி மெர்டேகா பாதுகாப்புக்கு ஒரு மருட்டல்

ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் போன்றோரின் சமத்துவத்தை முன்னிலைப்படுத்தும் செக்சுவலிடி மெர்டேகாவின் நிகழ்ச்சிகள் தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலாக அமையலாம் என்கிறார் பெர்க்காசா தலைவர் இப்ராகிம் அலி.

“அவர்கள் (நிகழ்ச்சிகளை) தொடர்ந்து நடத்துவதென்று முடிவு செய்தால் அது நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டலாக அமையலாம் என அஞ்சுகிறேன்.

“அவர்களுக்கு நல்லா தெரியும், இது உணர்ச்சிவசப்பட வைக்கும் விவகாரம் ,எதிர்வினைஇருக்கும் என்று. இருந்தும் தொடர்ந்து நடத்துவதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

“ஏற்பாட்டாளர்கள் யோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”, என்று இப்ராகிம் அலி கூறியதாக சினார் ஹராபான் நாளேடு அறிவித்துள்ளது.

இது மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட ஒன்று என்றாலும்கூட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டில் ஓரினச் சேர்க்கையாளருக்குச் சமநிலை கோருவது நல்லதல்ல என்றாரவர்.

சுதந்திரம் என்பதற்கு வரம்பு இருக்கிறது. சமய உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஏற்பாட்டாளர்கள் அந்த நிகழ்ச்சிகளை ரத்துச் செய்ய வேண்டும் என்று இப்ராகிம் கேட்டுக்கொண்டார்.

“நிகழ்ச்சிகளை ரத்துச் செய்தால் அவர்களுக்கு நன்றி சொல்வேன். அவர்களுடன் சச்சரவிட நாங்கள்(பெர்க்காசா) விரும்பவில்லை”. 

செக்சுவலிடி மெர்டேகாவின் அடுத்த நடவடிக்கையைப் பொறுத்து  பெர்க்காசாவின் எதிர்நடவடிக்கை அமையும் என அச்செய்தி அறிக்கை குறிப்பிட்டது.

செக்சுவலிடி மெர்டேகா என்பது பல்வேறு பாலினங்களுக்கிடையில் சமத்துவத்தை வலியுறுத்தும் ஓர் ஆண்டுவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பல என்ஜிஓ-களும் கலைஞர்களும் சமூக ஆர்வலர்களும் தனிப்பட்டவர்களும் ஒன்றிணைந்து 2008 முதல் இதைக் கொண்டாடி வருகிறார்கள்.

அவ்விழாவையொட்டி, நவம்பர் 9-இலிருந்து நவ.13வரை கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், பட்டறைகள், நூல் வெளியீடுகள், கண்காட்சி, மேடைநிகழ்வுகள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் விழாவை அதிகாரப்பூர்மாகத் தொடக்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: