கிர் தோயோ வழக்கில் பிரதிவாதித் தரப்பு தனது வாதங்களை முடித்துக் கொண்டுள்ளது

ஷா அலாம் உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர் முகமட் கிர் தோயோ வழக்கில் பிரதிவாதித் தரப்பு இன்று தனது வாதங்களை முடித்துக் கொண்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஷா அலாம் செக்சன் 7ல் இரண்டு துண்டு நிலங்களையும் பங்களா ஒன்றையும் பெற்ற விஷயத்தில் தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக கிர் தோயோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தனது கடைசி சாட்சியான மே பாங்க் அதிகாரி முகமட் தாஜூடின் முகமட் அலி சாட்சியமளித்த பின்னர் அந்த வழக்கில் தனது வாதங்களை பிரதிவாதித் தரப்பு முடித்துக் கொண்டுள்ளதாக அந்தத் தரப்பின் தலைமை வழக்குரைஞர் எம் ஆதிமூலன் உயர் நீதிமன்ற நீதிபதி மொக்தாருதின் பாக்கி-யிடம் (இப்போது அவர் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி) தெரிவித்தார்.

பிரதிவாதித் தரப்பு வாதங்களின் போது ஐந்து சாட்சிகள் சாட்சியமளித்தார்கள்.

2007ம் ஆண்டு மே மாதம் முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர் முகமட் கிர் தோயோவுக்கு சொந்தமான ஷா அலாம் ஜாலான் சுவாசா 7/1 எல் என்னும் முகவரியில் உள்ள இரண்டு துண்டு நிலங்களையும் ஒரு பங்களாவையும் தமது நிறுவனம் மதிப்பீடு செய்த போது கிர் தோயோ தலையிடவில்லை என நிபுணத்துவ மதிப்பீட்டாளர் ஒருவர் இன்று காலை நீதிமன்றத்தில் கூறினார்.

அந்தப் பகுதிக்கான நடப்பு சந்தை விலை அடிப்படையில் 2007ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி அந்தச் சொத்துக்களை 3.5 மில்லியன் ரிங்கிட் எனத் தாம் மதிப்பீடு செய்ததாக ரஹிம் அண்ட் கோ-வின் நிர்வாக இயக்குநர் சொய் யூ குவோங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அன்றைய தினம் மதிப்பீடு செய்யப்படுவதற்கு முன்னர் தாம் டாக்டர் கிர் தோயோவை அவரது அதிகாரத்துவ இல்லத்தில் சந்தித்த போது 3.5 மில்லியன் ரிங்கிட் என்னும் தொகையை குறிப்பிடவில்லை என அரசு தரப்பு வழக்குரைஞர் டுசுக்கி மொக்தார் குறுக்கு விசாரணை செய்த போது சொய் சொன்னார்.

பிரதிவாதித் தரப்பு தனது வாதத் தொகுப்பை வழங்குவதற்கு டிசம்பர் 19ம் தேதியையும் தீர்ப்பு வழங்குவதற்கு டிசம்பர் 23ம் தேதியையும் மொக்தாருதின் நிர்ணயம் செய்தார்.