மாணவர்களின் ஆங்கிலமொழி திறனை வலுப்படுத்துவதற்கு ஆங்கில இலக்கியம் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்று மசீச கல்வி அமைச்சிடம் கூறியுள்ளது.
சரிந்து வரும் ஆங்கிலமொழியின் தரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று மசீச தலைவர் டாக்டர் சுவா சோய் லெக் கூறினார். மேலும், அறிவியல் மற்றும் கணிதம் ஆங்கிலமொழியில் போதிக்கப்பட வேண்டும் என்பது பற்றி எழுந்துள்ள சர்ச்சை மாணவர்களின் ஆங்கிலமொழி திறனை மேம்பாடடைவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகின்றது என்றாரவர்.
மசீசவின் தலைவர் சுவா, சுகாதார அமைச்சர் லியோவ் மற்றும் துணைக் கல்வி அமைச்சர் வீ ஆகியோர் துணைப் பிரதமர் முகைதின் யாசினை சந்தித்துள்ளனர்.
அச்சந்திப்பில் அறிவியல் மற்றும் கணிதம் ஆகியவை ஆங்கிலத்தில் போதிப்பது பற்றிய சர்ச்சை குறித்து விவாதிக்கப்பட்டது.
எழக்கூடிய குழப்பங்களைத் தவிர்ப்பதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தெளிவானதாக இருக்க வேண்டும் என்பது மசீசவின் கருத்தாகும் என்று கூறிய சுவா, இவ்விரு பாடங்களையும் ஆங்கிலத்தில் பயிலத் தொடங்கி விட்ட மாணவர்கள் அதனைத் தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என்று மேலும் கூறினார்.
“தடங்கல் ஏதும் இருக்கக்கூடாது. இதில் மசீசவின் நிலைப்பாடு மிகத் தெளிவானதாகும். அக்கறையுள்ளவர்களின் விருப்பம் இன்றியமையாதது என்பது எங்கள் கருத்தாகும்”, என்றாரவர்.
ஆங்கிலத்தில் அறிவியலும் கணிதமும் போதிப்பதற்கான வாய்ப்பு அளிப்பது நல்லது என்பதை மசீச உணர்ந்திருந்தபோதிலும், பெற்றோர்களின் விருப்பம் அமலாக்கப்படுவதினால் எழும் இடையூறுகள் பற்றி கட்சிக்கு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.