சிலாங்கூர் இளவரசர் மதம் மாறினார் எனத் தம் முக நூல் பக்கத்தில் பதிவிட்ட மலாக்கா முன்னாள் முதலமைச்சர் அப்துல் ரஹிம் தம்பி சிக்மீது அரச நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரச நிந்தனைச் சட்டத்தின் பகுதி 4(1), (சி)இன்கீழ் குற்றம் சாட்டப்பட்ட அப்துல் ரஹிம் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
1998 தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட மாற்றுக் குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்.
அப்துல் ரஹிமின் கூற்று ஆதாரமற்றது என சிலாங்கூர் அரண்மனை அதை நிராகரித்தது.
மவனே அன்று 16 – வயது பெண்ணுடன் சல்லாபம் செய்து தப்பித்துக் கொண்டு லிம் குவான் எங்கை சிறைக்கு அனுப்பி வைத்தாய். இன்றோ அரச நிந்தனைச் சட்டத்தின் குற்றச்சாட்டிலிருந்து நீர் தப்பவே முடியாது. கொடும் பாதகம் செய்வோனுக்கு ஊழ்வினை இம்மையிலேயே வந்து பயன் தரும் என்று எங்கள் குருநாதர் சுந்தர மூர்த்தி நாயனார் சொல்லி விட்டுச் சென்றுள்ளார். பாவம் நீர் எங்கே தமிழரின் சைவ சமயத்தை அறிந்திருக்கப் போகின்றீர்.
தேனீ 16 வயது பெண் அது அன்றைய விவகாரம். இன்றைய விவகாரம் அதுவல்லவே ! அவர் அறிந்ததை கூறினார் . அது குற்றமல்லவே !
கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்று தமிழரிடையே ஒரு சொல் வழக்கு உண்டு. ஆதாரமில்லாத எக்கருத்தும் நிருபிக்கப் படாமல் உண்மையாகாது. இதை நான் மட்டும் சொல்லவில்லை. தமிழரின் வரலாற்றில் 1,100 வருடங்களுக்கு முன்னமே சிவபிரான் சுந்தர மூர்த்தி நாயனாரை தடுத்தாட்கொண்ட வழக்கில் தமிழரின் வழக்காடும் முறைமையைப் பற்றித் தெளிவாகச் சொல்லப் பட்டது. இந்தப் பட்டாம் பூச்சி அறிந்ததைப் பொதுவில் கூறும் முன் அதன் பலாபலன்களை அறிந்து சொல்லியிருக்க வேண்டும். மேலும் யாரைப் பற்றி சொல்கின்றோம் என்பதையும் தெளிந்து சொல்லியிருக்க வேண்டும். இங்கே செம்பருத்தி வாசகர்கள் கருத்துச் சொல்வதைப் போல் சொன்னால் பின் விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும், என்னையும் உட்பட.
ஆயிரத்து நுறு ஆண்டுகளுக்கு முன் வழக்கத்தில் இருந்த விசாரணை முறை இன்றைக்கும் பொருந்துமா தோழரே ! எந்த உலகத்தில் இருக்கிறிகள் ? சுந்தர மூர்த்தி நாயனாறேல்லாம் இன்றைய சுப்ரீம் நீதி மன்றத்தில் வாதட முடியுமா ?
1,100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் எப்படி ஒரு வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறினார்களோ அதே நடை முறையில்தான் இன்றும் நீதிமன்றங்களில் வழக்கு நடத்தப் படுகின்றது. தீர்ப்பு வழங்கும் முறையும் உள்ளது. 1,100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழரின் வளர்ச்சியடைந்த வழக்காடல் முறையைப் பற்றி இன்று இரவு எழுதுகின்றேன். தமிழரின் வரலாற்றை அறியவும், அவர்தம் பண்பாட்டை அறியவும் தி.பி. 12-ம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமானால் எழுதப்பட்ட வரலாற்றுக் காப்பியமாகிய பெரிய புராணம் தமிழருக்குத் தேவையான கையேடு. மகாபாரத்தையும் கம்பராமயணத்தையும் அறிந்த தமிழன் தனது சுய சரித்தரத்தை அறிய பெரிய புராணத்தைப் படிக்காமல் போனது திராவிடம் பேசியோர் நமக்குக் கொடுத்தப் பரிசு.
nateri கண் தெரபெனும் குற்றமே அது அரசனான் அன்றாலும்
நீதிமன்றம் : இடம்: திருவெண்ணெய் நல்லூர் (‘Supreme Court’)
நீதிபதிகள் : அந்தணர் அவை அறிஞர்கள்
வாதி : அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான்
பிரதிவாதி : நம்பி ஆரூரர்
வாதியின் வழக்கு: “இந்த நாவலூரன் எனக்கு ஆட்பட்ட அடிமை. எனக்கு உடமையான அடிமை.”
பிரதிவாதியின்
எதிர்வாதம் : மறையோதும் அந்தணர்கள் மற்றவருக்கு அடிமையாகும் வழக்கம் இம்மாநிலத்தில் வேறு எங்கும் இல்லை. (‘defence of customary law’)
வாதியின் பதில் : பிரதிவாதியின் பாட்டன், அவர்தம் தலைமுறையினர் தமக்கு அடிமை என்று சாசனமாக எழுதிக் கொடுத்த ஓலை என்னிடம் இருக்கின்றது. (‘defence of customary law can be negated by written contract to the contrary’)
நீதிபதிகள் : அறிவுடைய வாதி தம் வழக்கைப் பொருத்தமாகச் சொல்லி விட்டார். பிரதிவாதியின் தர்க்கம்தான் என்ன?
நீதிபதிகள் : வாதியை நோக்கி, அந்தணர் அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பது என்பது இதுவரை வழக்கத்தில் இல்லாதது. ஆதலால் உன் வழக்கை நன்றாக உறுதிப் படுத்த வேண்டும். (‘standard of proving case: Beyond reasonable doubt’)
நீதிபதிகள் : வாதியை நோக்கி, நீர் உமது வழக்கை உறுதிப் படுத்த: 1) அனுபவம் [இதற்கு முன் இவ்வாறான வழக்கு இருந்துள்ளதா (‘case law authority’)] அல்லது 2) அடிமையின் உரிமைப் பதிவு பத்திரம் உள்ளதா (‘proof of documentary evidence’) அல்லது 3) அயலாரின் சாட்சியம் உள்ளதா (‘independent witness’). இம்மூன்றில் ஏதாவது ஒன்றைக் கொண்டு உனது வழக்கை நிரூபிக்க வேண்டும் என்று வாதிக்கு கட்டளை இடுகின்றனர். (‘manner of proving case – Rules of Evidence’)
வாதி : பிரதிவாதி இதற்கு முன்னமே நான் புத்தூரில் காண்பித்த ஓலையை பிரதிவாதி கிழித்து எறிந்ததால், அந்த ஓலையின் மூல ஓலையை அறிஞர்களின் முன் வைக்கும் முன் அந்த நம்பி ஆரூர் என் மூல ஓலையையும் பறிக்காத வண்ணம் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பிரேணனை முன் வைக்கின்றார். (‘Application to the Court to protect evidence or witness’)
நீதிபதிகள் : “இந்தச் சபையில் உம்முடையை மூல ஓலைக்கு எந்தவிதமான தீங்கும் நேராத வண்ணம் பார்த்துக் கொள்கிறோம்.” (‘Protection granted by Court’)
வாதி : அந்த அடிமை சாசன ஓலையை சபையோர் முன்னிலையில் காண்பிக்க கணக்கர் (‘court staff’) அதை வாங்கிப் படிக்கின்றார்:
“திருநாவலூரில் இருக்கும் ஆதி சைவனாகிய ஆரூரன் எழுதிக் கொடுப்பதாவது: பெருமுனியான திருவெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு நானும் என் வழி முறையில் வருகின்ற சந்ததியினரும் வழி வழியாகத் தொண்டு செய்து வருவோம் என்பதற்கு ஆதாரமாக உள்ளமும் புறமும் ஒருமைப்பட்டு (‘voluntarily’) இந்த ஓலையை எழுதிக் கொடுத்தேன். இதற்கு என் கையெழுத்து.”
நீதிபதிகள்: ஆரூரரின் கையெழுத்துக்குப் பிறகு சாட்சிக் கையெழுத்துப் போட்டவர்களின் கையெழுத்துகளையும் சரிபார்த்து, அவை சரியாக இருக்கின்றன என்றனர்.
நீதிபதிகள் : பிரதிவாதியை நோக்கி, இந்த ஓலையில் உள்ள கையொப்பம் உமது பாட்டனாரின் கையெழுத்துதானா என்பதை நன்றாகப் பார்த்து அறிந்து சொல்லவும் என்று எதிர்வாதம் செய்ய அழைக்கின்றனர்.
வாதி : அது பிரதிவாதியின் பாட்டனாரின் கையெழுத்துதானா என்று நிரூபிக்க அவர் எழுதிய வேறு ஓலை இருந்தால் கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்கவும் என்று வேண்டுகோள் விடுக்கின்றார். (‘corroborating evidence’)
சபையினர் : பிரதிவாதியின் பாட்டனாரின் பிறிதொரு ஓலையை ஒப்பிட்டுப் பார்த்து, “இரண்டு ஓலையில் உள்ள கையெழுத்துகளும் ஒத்திருக்கின்றன” என்று உறுதி கூறுகின்றனர்.
தீர்ப்பு : “நம்பி ஆரூரரே, நீர் இந்த அந்தணரிடம் தோற்று விட்டீர். ஆகையால் விதிப்படி இவருக்கு ஏவல் தொண்டு செய்வதே உமது கடமையாகும்”.
1,100 வருடங்களுக்கு முன் தமிழரின் வளர்ந்த நாகரிகத்தை இதற்கு மேலும் எடுத்துச் சொல்ல எனக்கு நேரம் இல்லை. முன் வழக்கத்தில் இருந்த விசாரணை முறை இன்றைக்கும் பொருந்துமா பொருந்தாதா என்று இப்பச் சொல்லுங்கள் மு.தா. நீலவாணன். இன்றைய நீதிமன்றத் தீர்ப்புகளைத்தான் நாம் கண்கூடாகவே காண்கிறோமே. தமிழன் கண்ட நேர்மையான தீர்ப்பு இன்றுள்ள நீதிமன்றத்தில் தங்களுக்குக் கிடைக்கின்றதா?
நேர்மையான தீர்ப்பா ? நீங்கள்தான் மெச்சி கொள்ள வேண்டும் ! கேட்ப்பவன் கேனையனாக இருந்தால் ???? அப்பன் பட்ட கடனை பிள்ளைகளிடம் வசூலிக்க முடியாது. இன்றைய சட்டம் சொல்கிறது !
நீர் என்னவோ பாட்டன் பூட்டன் கதையை சொல்கிறீர்கள் ! இந்த காலத்தில் உங்கள் சிவன் போல் யாராவது வழக்கு போட்டால்,,,,,? மவனே வூடு போய் சேர முடியாது !!!
அரசனின் தத்துப் பிள்ளையான நம்பி ஆர்ரூரருக்கு எதிராக வந்த வழக்கில் நீதி தவறாமல் தீர்ப்புச் சொன்ன அறிஞர்களை நோக்கி நேர்மையான தீர்ப்பா? என்று கேட்டால் அது அந்த பரமனுக்கே பொறுக்காது. தமிழரின் வளமான சிந்தனையை மேற்கோள் காட்டியதும் அதற்குப் பதில் இல்லாமல், “நீங்களே மெச்சிக் கொள்ள வேண்டும்” என்று சொன்னால், ஆம்! திராவிட இறை மறுப்பை நீக்கி எம் தமிழரின் வளர்ச்சியை நான்தான் மெச்சிக் கொள்ள முடியும். இன்னொரு திராவிடவாதியா மெச்சிக் கொள்ள முடியும்?.
அப்பன் பட்ட கடனை மகன் அடைத்து விட்டு, அதே அப்பனிடம் அந்த கடனை திருப்பி வசூலிக்க முடியும் என்று இன்றைய சட்டம் சொல்லுது!
“உங்கள் சிவன் போல் யாராவது வழக்கு போட்டால்,,,,,? மவனே வூடு போய் சேர முடியாது!!!”. இதுதான் நாத்திகவாதிக்கும் ஆஸ்திகவாதிக்கும் உள்ள வேறுபாடு.
இறைவன் ஒரு செயலைச் செய்கின்றான் என்றால் அதனுள் ஒரு பொருள் மறைந்திருக்கும். நாஸ்திகனின் அறிவுக் கண்ணால் அதைப் பார்க்க முடியாது. ஆஸ்திகனின் ஞானக்கண்ணால் அதனை அறிய முடியும். இதுதான் நம் இருவருக்குள் இருக்கும் வேறுபாடு.
மு.தா. நீலவாணன் தாங்கள் வழக்கை மட்டும் பார்கின்றீர்கள். நானோ பழங்காலத் தமிழரிடையே இருந்த வழக்காடும் “முறை”க்கான முதிர்ச்சியையும், அந்நாளைய தமிழரின் அறிவு வளர்ச்சியையும் பார்கின்றேன். இதுவும் நம் கருத்தாட்டத்தில் இருக்கும் வேறுபாடு. அன்று இருந்த “மனித அடிமை” வழக்கம் இன்று இல்லை. அதற்காக அப்பாவின் கடனை மகனிடம் கேட்க முடியாது என்பது ‘மாங்காவையும், தேங்காவையும் ஒப்பிடுவதர்க்குச் சமமாகி விடும். வழக்கு வேறானால் தீர்ப்பும் வேறாகத்தான் இருக்கும் என்று நான் சொல்லியா தெரிய வேண்டும்.
ஐயா நீலவாணரே, கருவை காணாமல் எதொஎதோ உளருகின்றீரே. ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தமிழரின் நீதி நேர்மையை தானய்யா தேனீ எடுத்துரைக்கின்றார். அது புரியாமல் எதொஏதோ , சொல்கின்றிரே. ஏன் இப்போது கூட இந்தியாவில் சில கிராமங்களில் தகப்பன் பட்ட கடனை, அவர் இறந்தவுடன் கடனை மற்றவர் ஏற்றுக்கொள்ளாதவரை, கடன் கொடுத்தவர் பிணத்தை புதைக்க விடுவதில்லையே, படித்தது இல்லையா?
தேனீ மற்றும் உழவன் ஆகியோருக்கு , அன்றைய வழக்கு , வாதம்
அந்த கால கட்டத்தில் சரியாக இருந்திருக்கலாம் . அனால் இன்றைய சூழ் நிலையில் பொருந்தி வருமா ? அப்பனுக்கு சொத்திருந்தால் அந்த சொத்து மீது கடன் கொடுத்தவன் உரிமை கேட்கலாமே தவிர , அப்படி சொத்து இல்லை என்றால் பிள்ளைகளிடம் கடனை வசூலிக்க முடியாது ! பிணத்தை பற்றிய சம்பவங்கள் எல்லாம் கிராமத்தில் அப்பாவி மக்களிடம் ஆதிக்க வர்கத்தினர் செய்கின்ற அநியாயங்கள். அது சட்ட விரோதமானது.
அறிவு பூர்வமாக சில வாதங்களி முன் வைக்கும்போது, அதற்கு நேரிடையாக பதிலளிக்காமல் அறிவு, ஞானம் என்று மழுப்புகிறீர்கள். அறிவு வேறு, ஞானம் வேறு அல்ல ! இரண்டும் ஒன்றுதான். அறிவு தமிழ். ஞானம் பிற மொழி சொல். அவ்வளவுதான். பொதுவாக எல்லா சமய வாதிகளின் நிலைப்பாடும்
ஒன்றாகத்தான் உள்ளது.
மு.தா. நீலவாணன் தங்களின் வழக்கு அப்பாவின் கடனை மகனிடம் வசூலிக்க முடியாது. நம்பி ஆரூரரின் வழக்கில் பாட்னாரின் கடனைச் செலுத்தச் சொல்லி அடிமை சாசனம் எழுதப் படவில்லை. அவரின் பாட்டனார் “சிவனுக்கே நான் அடிமை” அவ்வாறே என் வழிமுறையினரும் சிவனுக்கு அடிமை என்றுதான் எழுதிக் கொடுத்தார். இதன் பொருளை அறிய தாங்கள் சைவ சித்தாந்தம் படிக்கவில்லை. சைவ சித்தாந்தம் கூறுவது: இவ்வுலகில் நமது கண்ணுக்குத் தெரிந்த தெரியாத சடமான பொருட்கள் அனைத்தும் இறைவனின் “உடமை”. உயிர்கள் அனைத்தும் இறைவனின் “அடிமை”. அதனால்தான் சைவம் ,இறைவனின் திருப்பாதங்களின் அடியில் உயிர் வீற்றிருந்து முத்தி நிலையில் பேரின்பத்தைப் பெறுவதை பெரும் பாக்கியமாக கருதுவது. இப்போ யாம் சைவ நெறியை விளக்கிச் சொன்னோமே இது “ஞானம்”. அப்பன் கடனை மகன் அடைக்க வேண்டிய கட்டாயமில்லை என்ற தங்களின் வழக்கு “அறிவு” (உலகியல் அறிவு). இப்ப தங்களுக்கு புரிய வேண்டியது “அறிவு” வேறு “ஞானம்” என்பது. தமிழ் மொழியில் அனைத்தும் பொருளுடைத்து என்று எங்கோ ஒரு சங்க இலக்கியத்தில் படித்தாக நினைவு. ஞானம் வேண்டுமானால் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள் நடத்தும் சைவ சித்தாந்த வகுப்பிர்க்குச் சென்று சிவனருளாகிய ஞானத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அறிவு மட்டும் போதுமுன்னா தங்களுக்கு வைத்தது அவ்வளவுதான்னு எண்ணி இருக்கும் இடத்திலேயே இருந்துக் கொள்ளுங்கள்.
நீலவாணன் உலக நாகரிகமே தோன்றாத காலத்தில் எம்புட்டு அறிவாளியாக வாழ்ந்துள்ளார்கள் நம் முன்னோர்கள் என்பதை தேனீ சொல்கிறார் ஐயா .(சிவன் போல் யாராவது வழக்கு போட்டால்,,,,,? மவனே வூடு போய் சேர முடியாது )!!!.. இப்பல்லாம் வழக்காடுபவரை தொம்புல அடிச்சி கான்கிரிட் போட்டு விடுவார்கள் ..அல்லது சாலையில் விபத்து ஏற்படுத்தி கொன்றுவிடுவார்கள் !! நீலவாணன் தற்போதைய அடாவடி அசிங்கமான வாழ்க்கை பற்றி சொல்லவருகிறார் .. அவர் சொல்வதை தற்போது நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம் .
தேனீ யாரே, நீங்கள் சொல்வதெல்லாம் , சைவ சமய கூட்டத்தவர்கள் கேட்டு மகிழ்வார்கள் பக்தி பரவசத்தில் ! ஆனால் அறிவார்ந்த மக்கள் கேட்டால் நகைப்பார்கள். 1970 ஆம் ஆண்டு என நினைக்கிறேன் அன்றைய தமிழ் நேசன் ஞாயிறு பதிப்பில் வாரம் தோரும் சைவ சமய தொடர்பான கேள்வி பதில் அங்கம இடம் பெரும். அதனை வழங்கியவர் முவார் ( ஜொகூர் ) சைவ சித்தாந்த
வித்தகர் முரு.பழ. இரத்தினம் செட்டியார் அவர்கள். அந்த சமயத்தில் என் வயது பதினெட்டு. என்னுள் எழுந்த இறைவன் , சாமி, சடங்கு, அருளுக்கும், மருளுக்கும், உள்ள வேறுபாடு, சமி ஆடுவது, உருவ வழிபாடு , போன்றவற்றுக்கு அவர் அளித்த விளக்கம், எனக்கு தெளிவை ஏற்படுத்தியது. அதன் விளைவு என்னை ” பெரியார் ” பக்கம் கொண்டு போய் நிறுத்தியது. ஏன் இதை கூறுகிறேன் என்றால் நானும் அங்கிருந்துதான் இங்கே வந்தவன் என்பதற்காக ! சிவனார் பெயரில் பல கற்பனை கதைகள் அவருடய அடியார்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தெளிவான விழக்கம் . நன்றி தேனி அவர்களே.
மு.தா. நீலவாணன், தாங்கள் சொன்னது, “என்னுள் எழுந்த இறைவன், சாமி, சடங்கு, அருளுக்கும், மருளுக்கும், உள்ள வேறுபாடு, சமி ஆடுவது, உருவ வழிபாடு , போன்றவற்றுக்கு அவர் அளித்த விளக்கம், எனக்கு தெளிவை ஏற்படுத்தியது”
தாங்கள் 18 வயதில் எப்படி இருந்தீர்களோ அதேபோல்தான் நானும் இருந்தேன். எனது சமய வாழ்க்கையும் மயக்கத்தில் மேற்கொண்டேன். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பதுதான் முந்நாளில் என் சமய வாழ்க்கையாக அமைந்திருந்தது.
அமரர் முரு.பழ. இரத்தினம் செட்டியார் அவர்களின் உரையைக் கேட்டு முழு மயக்கத்தில் இருந்து தாங்கள் அரை மயக்கத்திற்கு வந்தீர்கள். அந்நாளில் பெரியாரியத்தின் இறை மறுப்புக் கொள்கை மலேசியாவில் திராவிடக் கழகத்தாரால் வெகுவாகப் பரப்பப் பட்டு வளர்ந்திருந்தது. அதானல் பொய்யான சமய நம்பிக்கைகளை அறிந்த தாங்கள் அதை மறுத்து, சிக்கென இறை மறுப்புக் கொள்கையைப் பிடித்துக் கொண்டீர்கள்.
நானோ, எனது சமய வாழ்க்கையில் ஆலயத்திர்க்குச் சென்று அங்குள்ள தெய்வங்களையெல்லாம் வணங்கி விட்டு என்னுடைய வேண்டுதலை அத்தெய்வத்தின் முன் வைத்து விட்டு, நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டு மேலும் ஆலயக் கிரியைகளில் கலந்து கொள்வது மட்டுமே நமது சமயம் என்ற அறியாமையில் வாழ்ந்து வந்தேன். இதைத்தான் தாங்களும் சொன்னீர்கள்.
தங்களைப் போலவே நானும் ஐயா முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்களின் சைவ சமய சித்தாந்த வகுப்பில் சமய நெறி ஞானம் பெற்ற பின், இறை மறுப்புக் கொள்கைக்குப் போகவில்லை மாறாக நம் முன்னோர்கள் நமக்காக சிறந்ததொரு அறிவார்ந்த இறை நெரியையும், வாழ்வியல் நெறியையும் நமக்கு கருவூலமாக வைத்து விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதை அறிந்து சிவநெறியை சிக்கென பிடித்துக் கொண்டு சைவனாக வாழ்கின்றேன்.
நமது சமயம் என்பதும் இறைநெறி என்பதும், வெறும் மூட நம்பிக்கைகளும், கிரியைகள் மட்டுமே கொண்டது அல்ல. அதற்கு மாறாக தேவையற்ற கிரியையைகளை நீக்கி திருமுறைகளைப் பாராயணம் செய்து அன்பால் இறைவனை வழிபட்டாலே போதும் என்பதை உணர்த்துவதுதான் சித்தாந்த சைவம். நம் பக்தி நெறி சீராக இருக்கவும், சமயம் சார்ந்த மூட நம்பிக்கைள் நம்மை அண்டாமல் தடுக்கவும், சமயத்தை வைத்து நம்மிடையே வியாபாரம் செய்வதைத் தடுத்து நிறுத்தவும் பெருநெறியாகிய சித்தாந்த சைவம் நமக்கு அவசியம்.
இறைவன் யார்? உயிரின் நிலை என்ன? உயிரை இறைவன்பால் அரவணைத்துக் கொள்வதற்கு இறைவனின் செயல் என்ன என்பதை உணர்த்துவதே தமிழர் கண்ட, கொண்ட சைவ வாழ்க்கை.
மேலே கூறியவற்றில் முன்னதை, பெரியார் திராவிட தொண்டர்களுக்கு உணர்த்தினார். ஆனால் பின்னதை அவரும் உணரவில்லை, திராவிட தொண்டர்களுக்கும் உணர்த்தவில்லை. இதற்கு காரணம் அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ் நாட்டில் சமயம் என்றாலே அதற்கு அதிகாரமுடையோர் பிராமணர் என்று எழுதாத சட்டம் வைத்திருந்ததால், தமிழரின் உண்மைச் சைவ நெறியை அவராலோ, அவரைச் சார்ந்து இருந்த அண்ணாதுரை போன்ற அறிஞர்களாலோ தமிழ் நாட்டு மக்களுக்கு உணர்த்த முடியவில்லை. அதானால்தான் தங்களைப் போன்றோர் பலர் திராவிட இறை மறுப்புக் கொள்கையில் ஈர்க்கப் பட்டர்கள். நீங்களும் அவ்வாறே பின்பற்றி இன்று வரை வாழ்ந்து வருகின்றீர்கள்.
ஆனால், இன்றோ நிலைமை மாறி விட்டது மு.தா. நீலவாணன். மலேசியாவில் தமிழரின் சைவ சமயத்திற்கு பிராமணர்கள் அதிகாரிகள் அல்ல. நாம் தமிழரே உண்மைச் சைவத்திற்கு உரைக்கல். அதனால் திராவிடத்தின் தவறான வழிகாட்டுதலைப் புரிந்து அறிந்து இறைநெறியில் நேர்பாதையைக் காண முயலுங்கள். உங்களுக்குத் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்ட தி.மு.க. தலைவர்கள் வீட்டில் இன்று சாமி வந்து தலை விரித்தாடிக் கொண்டிருக்கு. திராவிடத் தொண்டர்கள் வீட்டிலோ இன்னமும் இறை மறுப்புக் கொள்கை. ஆனால் அவர்தம் மனைவி மக்களோ இறை வழிபாட்டில்! என்ன ஓர் எதிரும் புதிருமான கொள்கை இது?.
தி.மு.க. அரசியல் கட்சி ! அதன் தாக்கம் எனக்கு இல்லை. நான் எந்த இயக்கத்திலும் உறுப்பினர் அல்ல.! பதினெட்டு வயதில் எழுந்த சமயம் சடங்கு பற்றிய அய்யம் ! அது தெளிந்தது ! தொடர்ந்து வந்தது இறைவன் பற்றிய நம்பிக்கை ! அதுவும் 55 வது
வயதில் ஒரு முடிவிற்கு வந்தது ! அதுதான் இறைவன் என்ற பெயரில் ஏதும் இல்லை ! என் பிள்ளைகள் பெரியார் சிந்தனைகளில் அதிகம் ஈடுபாடு கொண்டுள்ளனர். இதில் என் பிரச்சார பங்கு அதிகம் இல்லைதான் . ஆனாலும் அது எனக்கு வியப்பான மகிழ்ச்சித்தான்.!
1
உலகம் மேற்கே இருந்து கிழக்கே தன்னைத்தானே சுற்றி வருவதை உணராத அறியாமையில் இருந்த மாக்கள் ஒரு நாள் இந்த உண்மையை அறிந்த பிறகு சூரியன் ஏன் கிழக்கே தோன்றுவதாகத் தெரிகின்றது என்பதை உணர்ந்தனர். அறியாமை என்ற இருளில் வாழ்வோர் ஒளி என்ற விளக்கு ஒன்று இருப்பதை அறியமாட்டார். மறைத்தல் தொழிலை செய்யும் சிவன், ஆணவமலம் முழுமையாக உயிரை மறைத்திருக்கும் பொழுது அவ்வுயிருக்குத் தன்னைக் காட்ட மாட்டான். அவ்வுயிரைப் படிப்படியாக பக்குவப் படுத்தி பக்குவம் வந்த பிறகே தன்னைக் காட்டுவான். இதனை அறிந்து உணர்ந்தால் இறை நம்பிக்கை அற்றோருக்கு தெளிவு பிறக்கும். பெரியார் ஞான குரு அல்ல என்பதை உணர்வார். சிவ சிவ.
தேனீ ஐயா, உலகம் உருண்டை, என்றும் , பூமி தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்ற உண்மையை உலகிற்கு எடுத்துரைத்தவர்கள், அறிவியலாளர்கள் ! இந்த உண்மையை உலகிற்கு எடுத்துரைத்த போது ; அதனை மறுத்து அந்த அறிவியலார்களுக்கு தண்டனை கொடுத்தவர்கள் உங்களை போன்ற மேற்கத்திய மத வாதிகள்தான்!!!. இறைவன் உண்டு என நம்பி வணங்குவதால் அடையும் பலன் என்ன ? விளக்கவும் ? பெரியார் தன்னை பெரு மேதாவி என்றோ, ஞான குரு என்றோ, தான் சொல்வதெல்லாம் சரி என்று வாதிட்டதே இல்லை அய்யா. உன் அறிவை கொண்டு ஆய்வு செய் என்றுதான் கூறினார்.
விடமாட்டீர்கள் போலிருக்கு மு.த. நீலவாணன். உலகம் உருண்டை என்றும் இன்னும் இந்த உலகத்திற்கும் இதர விண்மீன்களின் கூட்டத்திற்கும் இருக்கும் தொடர்பை கலிலியோ என்ற இத்தாலிய விஞ்ஞானி ஒருவர் சொன்னது 17-ம் நூற்றாண்டில்தான். அதற்கே ரோமில் இருந்த போப் பாண்டவர் மத போதனைக்கு எதிரானது அவரின் கருத்து என்று வீட்டுக் காவலில் தடுத்து நிறுத்தி வைத்தால் அதற்கு நாம் தமிழர் என்ன செய்ய முடியும்? ஏன் நமக்கும் அவர்களுக்கும் மாமன் மச்சான் உறவு ஏதாவது வேண்டிக் கிடக்குதா? அவர்கள் இறை நம்பிக்கையுடன் வாழ்வியல் நெறிகளையே வலுவாக குறித்து வைத்து சமயத்தை வளர்த்தவர்கள். தமிழர் சமயமும் அவ்வாறே என்று ஒரே ஊனக்கண்ணால் பார்ப்பது தமிழர் என்பாரின் குற்றம் என்பதை அறிக. இண்டியாவில் வானவியல் சாத்திரத்தின் மூலத்தை இன்றையிலிருந்து 2,000 ஆண்டுகளுக்கு முன்னமே பார்க்கலாம். அதை மனிதர்களுக்கு ஏற்புடைய காலக் கணிதமாக பின்னாளில் சோதிடம் என்று ஒழுங்குப் படுத்தி வைத்தார்கள். தமிழர் சமயத்தில், மாணிக்கவாசகர் திருவாசகத்தின் “திருவண்டப்பகுதி” – யில் ஆரம்பிக்கும் பொழுதே “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்” என்று அண்டசராசரங்களின் நிலையையும் அவற்றை மாயையில் இருந்து படைத்து காக்கும் இறைவனின் செயலையும் வியந்து பாடுவார். அவர் வாழ்ந்த காலம் தி.பி. 9-ம் நூறாண்டின் பிற்பகுதி என்று வரலாற்று ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர். அன்றே அவர் உலகங்கள் முட்டைப் போன்று (அண்டம்) வடிவமாகவும், உருண்டை வடிவங்களாகும் உலகங்கள் விளங்குகின்றன என்று சொன்னார். நம்மவர் யாராவது மாணிக்கவாசகரை வீட்டுக் காவலில் அடைத்தனரா? அல்லது தண்டித்தனரா? அப்புறம் ஏன் “உங்களைப் போன்ற மேற்கத்திய மதவாதிகள்” என்று குறிப்பிட்டு நம்மையும் அறிவீனர்களோடு சேர்த்துப் பேசுகின்றீர். தங்களுக்குத் தெரிந்த தமிழரின் வரலாறும் தமிழரின் சமய அறிவும் கடலின் சிறுதுளி என்பதால் தமிழரின் இறை நெறியை பிற மதத்தினரோடு ஒப்பிட்டு ஒரே “துலாக்கோலில்” நிறுத்துப் பார்க்க முயலாதீர்கள். அது தமிழன் என்பார் தன் கண்ணைத் தானே குத்திக் கொண்டு ஊனமாக்கிக் கொள்வதற்கு ஒப்பாகும். இப்படித்தான் திராவிட கழகத் தொண்டர்கள் இறை மறுப்பில் இறங்கி பல இலட்ச தமிழர்கள் மதம் மாறுவதற்கு உறுதுணையாக இருந்தார்கள். கண் விழித்துக் கொண்ட இன்றைய தமிழர்களிடையே திராவிட கழகத்தார் மீண்டும், எனது நண்பர் ஒருவர் சொன்னது போல, மோடி மஸ்தான் கண்கட்டி வித்தைத் காட்ட வேண்டாம். சைவர்களுக்கு கண் கட்டி வித்தைச் செய்யவும், கண் கட்டாமலேயே வித்தைச் செய்யத் தெரியும். இனி திராவிட இறை மறுப்புக் கொள்கைக்கைக்கு தமிழரிடையே இடமில்லை என்பதை அறிந்துக் கொண்டு கருமை சூழ்ந்த உலகை விட்டு வெளிச்சத்திர்க்கு வாருங்கள். தங்கள் பிள்ளைகளுக்கும் நல்வழியைக் காட்டுங்கள்.
“இறைவன் உண்டு என நம்பி வணங்குவதால் அடையும் பலன் என்ன ? விளக்கவும் ?” இது என்ன குதர்க்கமான கேள்வி? தாங்கள் நாத்திகர் என்பதால் இப்படி கேட்கின்றீர்கள்.
தமிழர் கண்ட சித்தாந்த சைவத்தில் இறைவன் உண்டு என்று “நம்புவதில்லை”. “இந்து மதம்” என்று சொல்லிக் கொள்கின்றார்களே அதில் அப்படிதான் என்றால் நானும் ஏற்றுக் கொள்வேன். ஆனால் சித்தாந்த சைவத்தில் இறைவன் உண்டு என்று நம்புங்கள் என்று வேண்டுவதில்லை. தருக்க ரீதியில், தோன்றி, நின்று, அழியும் சடமான இந்த அண்டசராசரங்களை அறிவுள்ள ஒரு உயிர் தோற்றுவித்துச், செயல்படுத்தி, காலம் கனியும் பொழுது அழிக்கும் நிலையை விளக்கி அதுவே இறைவனின் ஆற்றல் என்று நிறுவும். இறைவனை சத்தி என்னும் அவன் திருவருளின் செயலாலேதான் நாம் அறிய முடியும், விளங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு தருக்க ரீதியில் இறை உண்மையை விளக்கியது தமிழர் கண்ட சித்தாந்த சைவம். வெற்று நம்பிக்கையை மட்டும் கொண்டு தமிழர் இறை நெறியை வளர்க்கவில்லை என்பதை அறிக. தொடரும்.
“இறைவனை வணங்குவதால் பலன் என்ன”. இதுவே கடைசிக் கேள்வியாக இருக்கட்டும். இப்பகுதி எமது பொன்னான நேரத்தை அதிமாக எடுத்துக் கொள்கின்றது.
தமிழர் இறை நெறியில் மற்றவர்களை விட ஆழமாகச் சிந்தித்து ஞானக் கண்ணுக்கு எட்டியவரை சென்று இறைவனுக்கும் உயிர்க்கும் உலகத்திற்கும் உள்ள பந்தத்தை எடுத்துச் சொன்னவர்கள். இதற்கு வழிகாட்டியாக இருப்பது மெய்கண்ட சாத்திரங்கள். அதற்கு மூலமாக இருந்தது சிவாகமங்கள்.
இதர சமயங்களில் இறைவன் தன்னை வணங்குவதர்க்காக மனிதக் குலங்களைப் படைத்தான் என்று சொல்லும். ஏன் சும்மா இருக்க மாட்டாமல் உயிர்களைப் படைத்து இப்படி இன்ப துன்பகங்களில் திளைக்க வைக்க வேண்டும்? இறைவனுக்கு ஏதாவது வேண்டுதலை இருந்ததா? ஆரிய மதத்தின் மூலமே உயிர்கள் என்பது பிரமத்தின் “மாயை: என்று பகரும். பிரம்மம் ஒன்றே உள் பொருள் என்று சொன்னவர்களிடம் மாயை எங்கிருந்து வந்தது என்று சித்தாந்திகள் கேட்டதற்கு இன்று வரை வேதாந்திகளிடம் இருந்து பதில் இல்லை!.
இவற்றுக்கெல்லாம் மாறாக இருப்பது தமிழர் கண்ட சித்தாந்த சைவம். அநாதியிலேயே உயிர் ஆணவமல மறைப்பால் முழு அறியாமையில் அழுந்தி இருந்தது. கண் கட்டிய இருளில் இருப்போருக்கு எச்செயலும் செய்வதறியாது கல்லாய் இருக்கும் நிலையை இது உணர்த்தும். இங்ஙனம் துன்பப்படும் உயிரை அறியாமை என்ற இருளில் இருந்து அறிவு விளக்கத்திற்கு கொண்டுச் செல்லவே இறைவன் உயிருக்கு, உடலைக் கொடுத்து அதனுள் கருவிக் கரணங்களை வைத்து அவ்வுயிர் இன்ப துன்பங்களை நுகர்ந்து பக்குவப் பட வேண்டி புவன போகங்களைப் படைத்தான் என்று கூறும் சித்தாந்த சைவம். இதுதான் இன்று நம் உயிர் இருக்கும் இடைக்கால நிலை. இங்கிருந்து இறைவன் இருக்கும் நிலைக்கு உயிர் மேம்பட தங்களைப் போன்று மயக்க அறிவில் இருப்போரை அவ்வுயிரின் இறுதி இலக்காக இருக்கும் இறைவனின் திருப்பாதங்களை அடைய, மலங்கள் அற்ற அவனது நிலைக்கு உயிரை உயர்த்த வேண்டும். இதுவே முத்தி நிலை என்பது. உயிர் அடையும் பேரின்ப நிலை. இந்த நிலையை அடைவதற்கு நீங்கள் இறைவனை வணங்க வேண்டாம். இறைவனை அன்பால் உணருங்கள் என்று சொல்வது சித்தாந்த சைவம். இதைத்தான் நாம் “அன்பே சிவம்” என்று உணர்த்தியது. இறைவன்பால் அன்பு வைக்க வந்ததுதான் பக்தி மார்க்கம். பக்தி என்பது மனம், வாக்கு செயல் அறவொழுகத்துடன் செயல்படுவது. அத்தைகைய பக்தியே நம்மை இறைவனின் திருவருளால் படிப்படியாகப் பக்குவப் படுத்தி, இன்ப துன்பங்களை ஒரே சீராக பார்க்கும் இருவினை ஒப்பு என்ற நிலைக்கு உயர்த்தி பின் சீவர் முத்தி நிலையை அடைவச் செய்வது. இதுதான் பக்தி நிலையில் இறைவனை வணங்குவதின் பயன். தொடரும்.
பிற பெரிய மதங்கள் என்று சொல்லிக் கொள்வோர், மாந்தர்கள் அறவொழுகத்தில் நின்று நல்வினைச் செய்து, உயிர் உடலை விட்டு நீங்கிய பிறகு சுவர்க்கம் சென்றடைய வேண்டி இறைவனை வணங்க வேண்டும் என்று பகரும். இலையேல் தீ வினையால் நரகம்தான் கிட்டும் என்று பகரும். அதுவும் ஒவ்வொரு மதமும் சொல்லும் கடவுளை வழிபடுவோருக்கு மட்டுமே சுவர்க்கம் என்றும் பகரும்! பிறருக்கு இல்லையாம். அவர்களைப் பொருத்தவரை மாந்தர்கள் இறைவனை வழிபடுவதின் பயன் சுவர்கத்தை அடையும் நோக்கம் மட்டுமே கொண்டது.
இது அவ்வாராகின், நாம் அனைவரும் வள்ளுவன் கூறிய அறவொழுகத்துடன் வாழ்ந்தாலே நல்வினைப் பயனால் சுவர்க்கம் என்ற இன்பப் பயனை அனுபவிக்கும் உலகத்தை அடையலாமே! அதற்கும் மேல் இறைவனை ஏன் வணங்க வேண்டும்? இந்த கேள்வியை நீங்கள் தமிழர் சமயம் அல்லாதோரிடம் கேள்விக் கேட்டுப் பதிலைப் பெற வேண்டும். இனி இறைவனை வணங்குவதால் என்ன பயன் என்பதைப் பற்றி தமிழர் சமயம் என்ன சொல்கின்றது என்று காண்போம்.
நாம் செய்யும் நல்வினை தீவினையால், உயிர் வினைப் பயனை பெறுகின்றது. இம்மையில் (இன்று வாழும் உலகத்தில்) நாம் செய்யும் நல்வினைப் பயனால் மறுமையில் (உயிர் உடலை விட்டு நீங்கியப் பிறகு) சுவர்கத்தை நம் உயிர் அடையலாம். தீவினைப் பயனால் நரகத்தை அடையலாம். இத்தோடு உயிரின் பழவினை (சஞ்சிதம்) தீர்ந்து விடுவதில்லை. இதற்கு முன் எடுத்த பல பிறப்புகளில் நம் உயிர் செய்த நல்வினை தீவினை பழவினை மூட்டையாக மலிந்துள்ளது. அதனையும் தீர்க்க வேண்டி உயிர் மீண்டும் ஓர் உடலைப் பெற்று ஊழ்வினையைத் துய்த்த வண்ணமாக இருக்கும். இந்த வினைப் பயன் தத்துவம் இந்தியாவிற்கு வெளியே தோன்றிய மதங்களில் இல்லை. உயிர் இப்படியே பிறந்து, பிணி மூப்பு சாவு என்ற நிலைகளில் இருந்து நீங்க வேண்டும் இதைத்தான் சைவம் “பிறவாக் கடல் நீந்துவது” என்பது. இப்படி சுவர்க்கம் நரகம் என்ற இன்பத் துன்பங்களில் இருந்து உயிர் விடை பெற்று “அம்மை” என்ற உலகை அடைய வேண்டும் இதுவே இறைவனின் உலகம். இங்கே முத்திப் பெற்ற உயிர்கள் இறைவனைச் சார்ந்து பேரின்பத்தை பெற்று இருக்கும். தங்களை “முழுமைப்பெற்ற மதம்” என்று சொல்லிக் கொள்வோரிடம் கூட இந்த தத்துவம் இல்லை. தமிழன் அவர்தம் இறைநெறியில் பிறரை விட இங்கே உயர்ந்து நிற்கின்றான். வள்ளுவனும் இதைத்தான் “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேரா தார்” என்று சைவ சித்தாந்தக் கருத்தைக் கூறினார். இதுதான் தமிழரின் சமயம் சொல்லும் “இறைவனை வணங்கும் பயன்”. இவ்வளவையும் எங்களுக்கு ஞானமாக ஊட்டியவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள். அப்பாடா இவ்வளவு சொல்லியும் மு.தா. நீலவாணன் தாங்கள் நாத்திகராகத் தொடர்ந்தால் அந்த சிவபெருமானே தங்களுக்கு வெளிச்சத்தைக் காட்டட்டும். என் பணி இத்தோடு முடிந்தது.
மனித நேயத்துடன் யாருக்கும் துன்பம் விளைவிக்காமல் வாழ்ந்தலே போதும். இறை நம்பிக்கை அவசியம் இல்லை என்பதே எனது முடிவாகும்.
“மனித நேயத்துடன் யாருக்கும் துன்பம் விளைவிக்காமல் வாழ்ந்தலே போதும்”.
இதற்கு தங்கள் மனம் அன்பு வயப்பட வேண்டும். செம்பருத்தியில் தாங்கள் இதுவரை எழுதிய கருத்துக்கைளை எல்லாம் ஒவ்வொன்றாக ஒரு முறை படித்துப் பாருங்கள். அதில் ஏதாவது ஒரு கருத்து பிறரின் மனதைப் புண்படுத்தி இருந்தால் தாங்கள் இன்னமும் அன்பு வயப் படவில்லை என்பதாகும். மனித நேயத்துடன் யாருக்கும் துன்பம் விளைவிக்காமல் வாழ்ந்தலே போதும் என்பதற்கு யார் நீதிபதி? தங்களின் செயலுக்கு தாங்களே நீதிபதி என்றால் இந்நாட்டில் இன்று சட்டத்துறையில் நடக்கும் அலங்கோலங்களுக்கு இந்த வழி முறைதான் காரணம். அதனால்தான் நீதிபதி என்பவன் தனித்து நின்று உண்மை சொல்பவனாவான். தங்களின் செயலுக்கு நீதிபதி இறைவன் என்பதால் அவன் அவசியத்தை தாங்கள் உணர்ந்தே ஆக வேண்டும். என் செயலுக்கு நானே தலைவன், நீதிபதி என்று ஆணவ செருக்குக் கொண்டு பேசிய மனிதரால்தான் உலகம் இன்று பெரும் சீரழிவைப் பெற்று “மனித நேயம்” அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இந்த உண்மையை அறிந்து நாத்திகத்தை விடுங்கள்.
உலகில் இறை நம்பிக்கை உள்ளவர்கள் அதிகம்! எங்களை போன்றவர்கள் மிக குறைவுதான் ! ஆனால் குற்ற செயல்கள் யாரால் அதிகம் நடை பெறுகிறது ? எவ்வளவோ அக்கிரமங்கள் , அனியாயஙள் நடை பெறுகின்றன ! உங்கள் இறவன் தடுத்தாரா ? தண்டனை கொடுத்தாரா ???
நீங்கள் இந்த “நம்பிக்கை” என்று சொல்கின்றீர்களே அங்குதான் பிரச்சனையே உள்ளது! “நம்பிக்கை”, அவநம்பிக்கையாவதர்க்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? ஒருவர் இறைவன் மீது நம்பிக்கை வைத்து தனக்கு வேண்டிய சிற்றின்பத்தை வேண்டுகின்றார். அது அவர் எதிர்பார்த்த வண்ணம் கிடைக்காமல் போனால் அவருக்கு இறைவன் மீது அவநம்பிக்கை ஏற்படுகின்றது. இத்தகைய நம்பிக்கையைத்தான் “உபச்சார நம்பிக்கை” என்பது. இது இறைவனை நம்புவதுபோல் பாவனை செய்வது. இப்படி இறைவனின் உண்மை நெறி அறியாமல் உபச்சார நம்பிக்கை கொண்டு இவ்வுலகில் வாழ்வோர் 90% இருப்பர் என்று குத்துமதிப்பாக சொல்லி விடலாம். இத்தகையோர் இறை நம்பிக்கை கொண்டிருந்தாலும், அது பொய்யான நம்பிக்கை. ஆதாலால் அந்த 90% சதவீதமும் உங்களின் எண்ணிக்கையிலேயே சேர்த்துக் கொள்ளுங்கள். உண்மையான இறை நெறியில் நிற்போர் 10% சதவீதம் என்றால் உபச்சார இறை நம்பிக்கையிலும், நாத்திகத்திலும் இருப்போர் 90% சதவீதம். இப்பொழுது யார் பெருபான்மை, யார் சிறுபான்மை? அதனால்தான் தாங்கள் சொல்வது போல் குற்றச் செயல்கள், அக்கிரமங்கள் அநியாயங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. புரிகின்றதா?. எங்கள் இறைவன் தடுத்தாரா? எங்கள் இறைவன் தண்டனை கொடுத்தாரா? எங்கள் இறைவன் சிவபெருமான் கருணை உள்ளம் கொண்டவர். ஆதலால் அவர் யாருக்கும் தண்டனை கொடுக்க மாட்டார். நீங்கள் சொல்லும் உலகியல் அறிவு கொண்ட காட்டுத் மிராண்டித் தர்பார் நீதிமன்றத்தை அவர் நடுத்துவதில்லை. தண்டனை கொடுக்கும் தீயச் செயல் அவருடைய செயல் அல்லவே. அவர் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களும் அருட்செயல்களே என்பதை அறிய தங்களுக்கு ஞானம் இல்லாமல் போய் விட்டது தங்களின் ஊழ்வினைப் பயன். இதற்கு யாம் என்ன செய்வோம்? தொடரும்.
உலகில் உயிர்குலங்கள் செய்யும் ஒவ்வொரு வினைக்கும் தானே பொறுப்பு என்று முன்னமே சொன்னேன். அதை புரிந்துக் கொள்ளும் பக்குவம் தங்களுக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் மீண்டும் சொல்கின்றேன். ஓர் உயிர் நல்லது செய்வதும் தீயதை செய்வதும் அதன் ஊழ்வினையின் அடிப்படியிலேயே நடக்கும். ஒவ்வொருவரின் ஊழ்வினையானது அவரின் புத்தித் தத்துவத்தைப் பந்திப்பதால் அவரவர் செயல் அதற்கேற்றார் போல் நடைபெறும். நல்லதும் தீயதுமாக. நல்ல தீய வினைகள் செய்து அதன் இன்ப துன்பப் பயனை அனுபவிக்கப் போவது அந்த உயிரே அன்றி பிறர் அல்ல என்பது சைவ சித்தாந்தம். அதனால்தான் சைவத்தில் பரிகார கிரியைகளுக்கும், பாவ மன்னிப்புக்கும் இடமில்லை என்பது. உதாராணமாக ஒரு மாணவன் பரீட்ச்சையில் உட்கார்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருக்கின்றான். அவன் அத்தேர்வில் தவறாக பதில் எழுதுகின்றான் என்றால் அதை கண்காணிக்கும் ஆசிரியரோ அல்லது கண்காணிப்பாளரோ அப்பிழையை அல்லது தவற்றைத் தடுக்க முடியுமோ?. அவன் தவறுக்கு அல்லது பிழைக்கு அம்மாணவனே பொறுப்பாகி அதற்குரிய தண்டனையை அவனே அனுபவிக்க வேண்டும். இதுதான் சைவம் கூறும் வினைப்பயன் நியதிக்கு ஓர் உவமானம். இப்படி உயிர் பல முறை பல்வேறு வகையான உடலைப் பெற்று இன்ப துன்பங்களில் திளைத்து வினைபயனை ஈட்டிப் படிப்படியாக பக்குவமடைய வைக்கின்றான் இறைவன். பக்குவம் அடைந்த உயிருக்கே இறைவன் முத்திப் பேரின்பத்தை அருளுகின்றான். அதனால் முத்திப் பேரிம்பம் என்பதும் அரிது. ஆனால் சைவம் காட்டும் உண்மை பொருளாகிய சிவனை அறியும் பொழுது அனைத்து உயிர்களுக்கும் முத்தி பேரிம்பம் கிட்டும் என்று சைவம் பகரும். இதற்குமேல் சித்தாந்தப் பயிற்சி வேண்டுமானால் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்களை கூப்பிட்டு மலேசிய திராவிடர் கழக உறுப்பினர்களுக்கு எல்லாம் ஒருநாள் பயிற்சி வையுங்கள். அப்புறம் நீங்கள் அணியும் கருப்புச் சட்டையை கழற்றி எறிந்து விட்டு வெள்ளைச் சட்டையை போடும் படி செய்து விடுவார். ஆளை விடுங்கப்பா. எனக்கு ஏராளமான வேலை இருக்கு.