கோத்தா சீபூத்தே உறுப்பினர் கெடா சட்டமன்றக்கூட்டத்தில் கலந்துகொள்ளத் தடை

கோத்தா சீபூத்தே சட்டமன்ற உறுப்பினர் அபு ஹசான் ஷரீப் இம்மாதம் முழுவதும் கெடா சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதபடிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அபு ஹசான், சீபூத்தேயைப்  பிரதிநிதிக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்தான் என நீதிமன்றம் ஆகஸ்ட் 18-இல் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரி கெடா சட்டமன்றத் தலைவர் அப்ட் இசா இஸ்மாயில் செய்த விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம்  ஒருமித்து ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்தத் தடை அமலுக்கு வருகிறது.

தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரும் விண்ணப்பத்தை அப்ட் இசாவின் வழக்குரைஞர் எட்மண்ட் பூன் இன்று தாக்கல் செய்தார்.

ஆகஸ்18 தீர்ப்பை எதிர்த்து அப்ட் இசா கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாகவும் அங்கு அந்தத் தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டால் பிறகு சட்டமன்றம் எடுக்கும் முடிவு-இந்த மாத அமர்வில் செய்யப்படும் எந்தவொரு முடிவும்- இயல்பாகவே செல்லாததாகிவிடும் என்று எட்மண்ட் கூறினார்.

“இன்றைய தீர்ப்பைத் தொடர்ந்து,அபு ஹசான் (கோட் அணிந்தவர்) இம்மாதக் கூட்டத்தில் கலந்துகொள்வதினின்றும் தடுக்கப்படுகிறார்”, என்று பூன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகஸ்ட் 18தீர்ப்பை இன்னும் எழுத்துப்பூர்வமாகத் தரவில்லை.அதனால் அத்தீர்ப்புக்கு எதிரான முறையீட்டைக் கூட்டரசு நீதிமன்றம் விசாரணை செய்ய முடியாதிருக்கிறது.”

ஆகஸ்ட் 18-இல், நீதிபதி ரம்லி தலைமையில் கூடிய மேல்முறையீட்டு நீதிமன்றம், இரண்டாண்டுகளுக்கு முன்பு சீபூத்தே சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாய் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது.

நீதிபதிகள் லிண்டன் அல்பர்ட், ஆசியா அலி ஆகியோருடன் அந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி ரம்லி அம்முடிவுக்கான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.

முன்னதாக 2009, நவம்பரில் கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அலிஜதுல் ஹயிர் ஒஸ்மான் கைருடின், சீபூத்தே தொகுதி காலியானதாக அறிவித்திருந்தார். அபு ஹசான் இரண்டு சட்டமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என்பதால் அவருடைய தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்ற அவைத் தலைவர் அப்ட் இசாவின் கோரிக்கையை ஏற்று அவர் அவ்வாறு தீர்ப்பளித்திருந்தார்