அந்த ‘ஜேம்ஸ் பாண்ட் வாக்காளர்கள்’ மனிதத் தவறு என்கிறது தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலில் இல்லாத மை கார்டு எண்களுடன் பல வாக்காளர்கள் இருப்பது பற்றிய செய்தியை மலேசியாகினி நேற்று வெளியிட்டது. அதற்கு மனிதத் தவறு காரணம் என இன்று தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது.

அந்த மை கார்டு எண்கள் தவறுதலாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டதாக மலேசியாகினியுடன் இன்று பிற்பகல் தொடர்பு கொண்ட தேர்தல் ஆணையம் அதிகாரி ஒருவர் கூறினார்.

“அந்த தவறைச் சுட்டிக் காட்டிய உங்களுக்கு நன்றி. வாக்காளர் பட்டியலில் அது போன்று 17 வாக்காளர்கள் உள்ளனர்,” என பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்தார்.

‘நேற்று கெடா பாஸ் வாக்காளர்’ ( Pengundi PAS Kedah ) என தன்னை அழைத்துக் கொண்ட பாஸ் ஆதரவாளர் ஒருவர் ‘ஜேம்ஸ் பாண்ட் வாக்காளர்கள்’ என பெயரிடப்பட்ட மூன்று வாக்காளர்களுடைய மை கார்டு எண்களில் ஏழாவது எட்டாவது இலக்கங்கள் ’00’ எனக் குறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்தார்.

அந்த இரண்டு இலக்கங்களும் மை கார்டு வைத்திருப்பவரின் பிறந்த இடத்தைக் குறிப்பதாகும். ’00’ என்னும் குறியீடே இல்லை என தேசியப் பதிவுத் துறை கூறியுள்ளது.

குறியீடு ’02’ ஆக இருந்தால் சம்பந்தப்பட்ட மை கார்டு வைத்திருப்பவர் கெடாவில் பிறந்தவர் எனப் பொருள்படும் என்று அந்த தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கினார்.

எடுத்துக்காட்டுக்கு எழுத்தர் ரோஸ்மாடி பின் சிக்-கின் மை கார்டு எண்ணில் கூடுதலாக ‘1’ என்ற இலக்கத்தை சேர்த்து விட்டார். அதனால் பதிவான எண் 801111002544 ஆகும். அந்த எண்ணில் அசல் குறியீடான ’02’ எட்டாவது ஒன்பதாவது இலக்கமாக மாறி விடுகின்றன என்று அவர் சொன்னார்.

ஹாஸ்ருலிஸாம் பின் ஹாலிம் (800604002563) ஷாபிஸா பிந்தி கசாலி (811020002568)  ஆகியோருடைய மை கார்டு எண்களிலும் அதே தவறு நிகழ்ந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

‘ஜேம்ஸ் பாண்ட் வாக்காளர்கள்’ எனக் குறிக்கப்பட்ட மூன்று வாக்காளர்களில் ரோஸ்மாடி, ஹாஸ்ருலிஸாம்  ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டு விட்டதை இன்று காலை மலேசியாகினி, தேர்தல் ஆணைய இணையத் தளத்தில் சோதனை செய்த போது கண்டு பிடித்தது.