பிகேஆர்: இண்டா வாட்டார் மறு தோற்றம் என்றால் அதிகமான பணம் வெளியாகும் எனப் பொருள்படும்

IWK என்ற இண்டா வாட்டார் கான்சோர்ட்டியம் எனப்படும் தேசியக் கழிவு நீர் நிறுவனத்துக்கு மறு தோற்றம் அளிக்கும் நடவடிக்கை மக்களுக்கு அதிகச் செலவை ஏற்படுத்தக் கூடும் என்று பிகேஆர் அரசியல்வாதி ஒருவர் எச்சரித்துள்ளார்.

மார்ச் 29ம் தேதி நடத்தப்பட்ட வியூகத் திட்டம் மீதான பட்டறையிலிருந்து கிடைத்த ஆவணங்களைப் பார்க்கும் போது இண்டா வாட்டார் மறுசீரமப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டதாகத் தெரிகிறது. அமைச்சரவை அதனை அடுத்துப் பரிசீலிக்க வேண்டும் என பிகேஆர் மாச்சாங் உறுப்பினர் சைபுதின் நசுத்தியோன் சொன்னார்.

அந்த மறுசீரமைப்பின் கீழ் இண்டா வாட்டர்,  நாஸ்கோம் (Nascom)என பெயரிடப்படும். அனைத்து கழிவு நீர் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைப்புக்களும் அதன் கீழ் கொண்டு வரப்படும். அதில் கழிவு நீர் சேவைத் துறையும் அடங்கும்.

“இது மிகவும் கடுமையான யோசனை ஆகும். அது மக்களுக்கு அதிகச் செலவு பிடிக்கும் விஷயமாகும். 

“இண்டார் வாட்டர் மறு தோற்றம் என்பது மிகவும் ஆபத்தான விஷயமாகும். காரணம் அந்த இண்டா வாட்டர் என்ற முழு வர்த்தக மாதிரியும் சரியானது இல்லை. போட்டி ஆற்றலையும் கொண்டிருக்கவில்லை.”

ஈராயிரத்தாவது ஆண்டு தொடக்கம் நிதி உதவியாக அதற்கு 1.2 பில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டுள்ளது,” என அவர் சொன்னார்.

இண்டா வாட்டர் தொடர்ந்து தோல்வி கண்டு வருகிறது

அரசாங்கம் அந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் அக்கறை காட்டாமல் இண்டா வாட்டர் நிறுவனத்துக்கு நாஸ்கோம் என மறு பெயர் சூட்டுவதைத் தவிர வேறு எதனையும் செய்யவில்லை என சைபுதின் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

உண்மையில் அரசாங்கம் ஈராயிரத்தாவது ஆண்டு அரசாங்கம் ஏற்றுக் கொள்வதற்கு முன்னர்  இண்டா வாட்டர் ஐந்து முறை கை மாறி மறு தோற்றம் பெற்றுள்ளது என்றார் அவர்.

“கழிவு நீர் சேவைத் துறையை கலைக்கும் முடிவு, கண்காணிப்புக்களை ஒழித்து விட்டு தேசியப் பயனீடுகளில் ஏக போக ஆதிக்கத்தைத் தோற்றுவிக்கும் பிஎன் போக்கைக் காட்டுகிறது.”

கழிவு நீர் சேவைத் துறை, இண்டா வாட்டர் மற்றும் சலுகை பெற்ற மற்ற நிறுவனங்களை கண்காணிப்பதில் முக்கியப் பங்காற்றி வந்துள்ளதை சைபுதின் சுட்டிக் காட்டினார்.

“அந்தத் துறையில் 200 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இண்டா வாட்டர் ஊழியர் எண்ணிக்கையை விட அது மிகக் குறைவாகும்.. ஆகவே செலவுகளைக் குறைப்பதற்காக அந்தத் துறை கலைக்கப்படுகிறது எனச் சொல்வது கவைக்கு உதவாத வாதமாகும்,” என்றார் அவர்.

கழிவு நீர் சேவைத் துறையை நிர்வாகம் செய்யும் எரிபொருள், பசுமைத் தொழில்நுட்ப, நீர்வள அமைச்சு, அந்த விவகாரத்தை விளக்க வேண்டும் என்றும் அந்த எம்பி கேட்டுக் கொண்டார். ஏனெனில் சில தரப்புக்களின் ஆதாயத்துக்காக அரசு ஊழியர்களுடைய தலைவிதி பணயம் வைக்கப்படக் கூடாது. அத்துடன் மக்களுக்கும் நிதி அளவில் சிரமங்களைக் கொண்டு வரக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.