புத்ரா ஜெயாவுக்கு அணிவகுத்துச் செல்ல கல்வியாளர்கள் ஆலோசனை?

கல்வியாளர் சுதந்திரம் மீது அமைதியாக நடந்துகொண்டிருந்த ஒருகருத்தரங்கம், சக விரிவுரையாளர் அப்துல் அசீஸ் பாரிக்கு நேர்ந்ததை நினைத்து ஆத்திரம் அடைந்தவர்கள் தங்கள் மனக்கொதிப்பைக் கொட்டியதைத் தொடர்ந்து கல்வியாளர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் திட்டமிடும் ஒரு கூட்டமாக மாறியது.

அக்கருத்தரங்கில் கலந்துகொண்ட தனியார் மற்றும் பொதுப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 30 கல்வியாளர்கள், கல்விக்கழகங்களில் செய்யப்படும் நியமனங்கள் “அரசியல் நோக்கம்கொண்டவை” என்றும் அங்கு எதிர்ப்புக்குரல்களை அடக்கி வைக்கும் முயற்சிகள் நடப்பதாகவும் கூறினார்கள். அவற்றுக்கு எதிரான தங்கள் அதிருப்தியைக் காண்பிக்க தெருக்களில் ஊர்வலம் செல்லுதல் உள்பட பல நடவடிக்கைகளையும் அவர்கள் முன்மொழிந்தனர்.

“ஆயிரம் கல்வியாளர்களை ஒன்றுதிரட்டி புத்ரா ஜெயாவுக்கு ஊர்வலமாக சென்றால், அரசாங்கம் நீங்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கத்தான் வேண்டியிருக்கும்”, என்று யுனிவர்சிடி கெபாங்சான் மலேசியா உயர்நிலை ஆராய்ச்சியாளர் டெனிசன் ஜெயசூரியா கூறினார்.

யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாரா பங்சா(யுஐஏ)-வின் இஷாம் பாவான் அஹ்மாட் அப்பல்கலைக்கழகத்தின் ஈராயிரம் கல்வியாளர்களில் அப்துல் அசீசுக்கு ஆதரவுதெரிவிக்கும் பத்திரிகை அறிக்கையில் கையொப்பம் இட்டவர்கள் 60 பேர்தான் என்று கவலை தெரிவித்ததற்கு டெனிசன் இவ்வாறு குறிப்பிட்டார்.

யுஎம் உயர்நிலை ஆராய்ச்சியாளர் முகம்மட் இக்மால் முகம்மட் சயிட், 1985-இல், சக விரிவுரையாளர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டபோது யுஎம் வளாகத்தில் நடத்தப்பட்டதைப் போன்ற பேரணி ஒன்றைக் கூட்டலாம் என்ற கருத்தை வெளியிட்டார்.

“கல்வியாளர் அமைப்பு ஒவ்வொன்றும் ஆள்களைத் திரட்டி பேரணி நடத்தி இவ்விவகாரத்தில் கல்வியாளர்கள் ஒன்றுபட்டிருப்பதை உணர்த்த வேண்டும்” என்றார். 

வெள்ளிக்கிழமை அசீசின் இடைநீக்கத்துக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய அனுபவத்தை அங்குள்ளவர்களுடன் பகிர்ந்துகொண்ட மாணவர் தலைவர் முகம்மட் ஸாக்கி சுக்ரி, நிறைய பேர் சேராவிட்டாலும் ஒரு கணிசமான எண்ணிக்கையினர் பேரணியில் ஒன்றுதிரள்வது அவசியம் என்றார்.

 “அன்று 2,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள். ஆனால் யுஐஏ-இன் மாணவர்தொகையுடன் ஒப்பிட்டால் அந்த எண்ணிக்கை சிறியதுதான். மற்ற இடங்களில் இருந்தும் மாணவர்களைத் திரட்டிக் கொண்டு வந்தோம்.அதன்வழிதான் கணிசமான எண்ணிக்கையினர் அங்கு சேர்ந்தனர்”, என்று கெ ராக்கான் இஸ்லாம் சமலேசியா தலைவரான அவர் கூறினார்.  

கல்வியாளர்களும் மாணவர்களும் ஒன்றுசேர்ந்தால் எண்ணிக்கை பெரிதாக இருக்கும் என்று ஸாக்கி(வலம்) கூறினார்.

அதை ஒப்புக்கொண்ட யுனிவர்சிடி சயின்ஸ் மலேசியா (யுஎஸ்எம்)வின் வான் மானான் வான் மூடா, பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களையும் கல்வியாளர்களையும் நீண்ட காலமாகவே “பிரித்து வைத்திருப்பதாக”க் கூறினார்.

“மாணவர் சங்கக் கூட்டங்களில் உரையாற்றக்கூட எங்களை அனுமதிப்பதில்லை. மாணவர்களும் கல்வியாளர்களும் கிள்ளுக்கீரைகளாகத்தான் கருதப்படுகின்றனர்”, என்றாரவர்.

கல்வியாளர்கள் இரண்டாம்தரக் குடிமக்களைப்போல் கருத்துச்சொல்ல முடியாதபடி அடக்கி ஒடுக்கப்படுவதாகக் கூறிய வான் மானான், 1985-இல் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரித்தார்.

1985-இல், பத்திரிகையில் அறிக்கை வெளியிட்ட யுஎஸ்எம் விரிவுரையாளர்கள் ஹஷிம் உசேன் யாக்கூப், ரொஹானா அரிப்பின் ஆகிய இருவரில் முன்னவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார், பின்னவர் பதவி இறக்கப்பட்டார். அதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

அந்நேரத்தில்  மாநாடுகளில் கலந்துகொள்ள மலேசியா வந்த வெளிநாட்டுக் கல்வியாளர்களின் கவனத்துக்கு இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. அவர்களும் பல இடங்களில் அது பற்றிப் பேசினார்கள். அதையே இன்றும் செய்யலாம் என்றாரவர். 

“இதனால் என்னவாயிற்று என்றால், அப்போதைய யுஎஸ்எம் துணை வேந்தர் எங்கு சென்றாலும் அங்குள்ள கல்வியாளர்கள் அவரிடம் அது பற்றி விசாரிக்கத் தொடங்கினார்கள்.”

முடிவில், ஹஷிமும் ரொஹானாவும் யுஎஸ்எம்முக்கு எதிராக தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றார்கள்.

யுஎம் விரிவுரையாளர் ரோஸ்லி மஹாட், பன்னாட்டு அமைப்புகள் மூலமாகவும் அழுத்தம் கொடுக்கலாம் என்றார்.

“எடுகேசன் இண்டர்நேசனல் அமைப்புடன் எங்களுக்கு நல்ல தொடர்பு உண்டு. நாங்கள் கேட்டுக்கொண்டதன்பேரில் அது அசீஸ் இடைநீக்கம் மீது  அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது”, என்று மலேசிய கல்வியாளர் இயக்கம்(முவ்) என்ற அமைப்பின் தலைவருமான அவர் சொன்னார். 

கல்விக்கழக மற்றும் பொருளாதார உரிமைகள் மீதான கட்டமைப்பு (நியர்)  தன் உறுப்பினர்கள் இவ்விவகாரத்தை விழிப்புடன் கவனித்து வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது என்றும் ரோஸ்லி கூறினார்.

“நியர் ஐநா அமைப்பான யுனெஸ்கோவுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது உண்டு. யுனெஸ்கோவில் மலேசியாவின் கல்விக்கழக சுதந்திர அமைப்பையும் இடம்பெறச் செய்துவிட்டால் போதும். அதிகாரத்தில் உள்ளவர்களை ஆட்டம் காண வைத்து விடலாம்”, என்றார்.