1971-ம் ஆண்டுக்கான யூயூசிஏ என்ற பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தை குறிப்பாக மாணவர்கள் அரசியலில் பங்கு கொள்வதைத் தடுக்கும் 15(5) பிரிவைத் திருத்துவதைத் தனிப்பட்ட முறையில் உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லா ஆதரிக்கிறார்.
அந்தப் பிரிவு அரசியலமைப்புக்கு முரணானது என பிரகடனம் செய்த முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்ப அது அமைகிறது.
அந்த விவகாரம் குறித்துத் தாம் பல முறை கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் அந்தத் திருத்தத்திற்கு ஆதரவாக பத்திரிக்கைகளில் எழுதியுள்ளதாகவும் அதே வேளையில் அம்னோ உச்ச மன்றத்தில் அது குறித்து யோசனை ஒன்றைத் தெரிவித்துள்ளதாகவும் சைபுதின் சொன்னார்.
“திருத்தம் செய்ய வேண்டும் என சிலர் கோருகின்றனர். சிலர் யூயூசிஏ சட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும் கோருகின்றனர். உண்மையில் நாம் அனைவரும் ஒரே நிலையில்தான் இருக்கிறோம். அதாவது நமக்கு 15வது பிரிவைப் பிடிக்கவில்லை.”
“நாம் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியலில் பங்கு கொண்டு கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என விரும்புகிறோம். அதனை அடைவதற்கு 15வது பிரிவைத் திருத்த வேண்டும்,” என சைபுதின் நேற்றிரவு புதிய அரசியல் மீதான கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.
முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் முறையீடு செய்யுமா என அவரிடம் வினவப்பட்டது. அதற்குப் பதில் அளித்த சைபுதின், இன்னும் அமைச்சரவைக்கு அந்த விஷயம் கொண்டு வரப்படவில்லை என்றார்.
எந்த முடிவையும் ‘யார் வெற்றி பெற்றார் யார் தோல்வி அடைந்தார்’ என்ற நிலையில் பார்க்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
“நாம் தார்மீக அடிப்படையிலும் அறிவாற்றல் அடிப்படையிலும் அதனைப் பார்க்க வேண்டும்,” என தெமர்லோ எம்பி-யுமான சைபுதின் சொன்னார்.