கொள்கை மாற்றம் மீது ஆசிரியர் பயிற்சி பெறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆட்சேபம்

யூபிஎஸ்ஐ என்ற சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான கல்விப் பட்டப்படிப்பு மாணவர்கள், தங்களுக்கு வேலைகள் உறுதியற்றதாக இருக்கும் சூழ்நிலை குறித்து நேற்று ஆட்சேபம் தெரிவித்தனர்.

Gabungan Bertindak Mahasiswa, முஸ்லிம் பட்டப்படிப்பு மாணவர் இயக்கம், தீவகற்ப மலாய் மாணவர் சங்க சம்மேளனம்,  Legasi Mahasiswa Progresif, Gabungan Graduan Ijazah Sarjana Muda Pendidikan, யூபிஎஸ்ஐ மாணவர் பிரதிநிதித்துவ மன்றம் ஆகியவை அந்த ஆட்சேபக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன.

காலை மணி 11.30க்குத் தொடங்கி நான்கு மணி நேரம் நீடித்த அந்த நிகழ்வின் போது பல மாணவர் தலைவர்கள் உரையாற்றினார்கள். கல்வி முறைக்குள் தாங்கள் இணைக்கப்படுவதற்கான உரிமைகள் நிலை நிறுத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரினர்.

பயிற்சி பெறாத 7,902 தற்காலிக ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்களாக பள்ளிக்கூட முறைக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் மேலும் 7,508 பேர் இணைத்துக் கொள்ளப்படுவர் என்றும் கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் அண்மையில் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த ஆட்சேபத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தாங்கள் வேறு இடங்களில் வேலை தேட வேண்டும் என துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹைடின் யாசின் கூறியிருப்பதும் அந்த எதிர்ப்புக் கூட்டத்துக்கு வித்திட்டதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அடாம் அலி கூறினார்.

கல்வி அமைச்சின் உபகாரச் சம்பளங்களை பெற்றிருப்பவர்களுக்கு கல்வி முறையில் இணைவதற்கு முதற்சலுகை அளிக்கப்படும் என முஹைடின் கடந்த ஞாயிற்றுக்கிழமை டிவி3ல் கூறியிருந்தார். மற்ற கல்விப் பட்டதாரிகள் வேறு இடங்களில் வேலை தேட வேண்டும் எனவும் அவர் சொன்னார்.

“பட்டப்படிப்பு இல்லாத பயிற்சி பெறாத ஆசிரியர்களை அவர்கள் ஏன் சேர்த்துக் கொள்ள வேண்டும்? எங்களிடம் பட்டங்கள் உள்ளன. ஆனால் நாங்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை. நாங்கள் ஆசிரியர் தொழிலை எங்கள் நிபுணத்துவ வாழ்வு ஆதாரமாகக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் அந்த நடவடிக்கை நேர்மையற்றதாக உள்ளது?”  என அடாம் வருத்தத்துடன் கூறினார்.

பயிற்சி பெறாத தற்காலிக ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள 7,000க்கும் மேற்பட்ட இடங்கள் மூலம் கல்விப் பட்டப்படிப்பைப் பெற்றுள்ள தனியார் மாணவர்கள் எதிர்நோக்கும் வேலையில்லாத பிரச்னையைத் தீர்த்து விட முடியும் என்றார் அவர்.

கல்வி அமைச்சு,  கல்விப் பட்டப்படிப்பை முடித்துள்ள மாணவர்களுக்கு போதுமான வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் பயிற்சி பெறாத தற்காலிக ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரும் ஏழு அம்ச மகஜரையும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திடம் சமர்பித்தார்கள்.

அந்த விவகாரம் மீதான மனுவில் மாணவர்கள் கூட்டமைப்பு 6,000 கையெழுத்துக்களைத் திரட்டியுள்ளதாகவும் 10,000 கையெழுத்துக்களைத் திரட்ட அது எண்ணியிருப்பதாகவும் அடாம் சொன்னார். பின்னர் அது முஹைடினிடம் சமர்பிக்கப்படும்.