துணைப் பிரதமர் முகைதின் யாசின், மலேசியாவின் வளர்ச்சிக்குப் பெருமளவு பங்காற்றியுள்ளதாக சீனர்களின் வணிகச் சமூகத்தை வாயாரப் புகழ்ந்துள்ளார்.
“நீண்ட காலமாக உள்ளூர் சீன வணிகர்கள்தாம் நம் நாட்டின் தலையாய முதலீட்டாளர்களாக இருந்துள்ளனர் என்று தாராளமாகக் கூறலாம். அவர்கள் இல்லையென்றால் மலேசியா இன்றைய நிலையை எட்டியிருக்க முடியாது.”
இன்று செர்டாங்கில், மூன்றாவது உலகப் பொருளாதாரக் கருத்தரங்கில் பேசிய முகைதின், நாட்டின் எதிர்கால நன்மையின் பொருட்டு சீனச் சமூகம் பூமிபுத்ரா சமூகத்துடன் கைகோத்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர்கள், “கடந்த பத்தாண்டுகளாக உள்நாட்டில் அதிகமதிகமாக முதலீடு செய்துவரும்” அரசு-தொடர்புடைய நிறுவனங்களுக்கும் (ஜிஎல்சி) ஆதரவாக இருக்க வேண்டும் என்றாரவர்.
“மலேசிய சீன வணிகர்கள் தொடர்ந்து மேம்பாட்டில் பங்காளிகளாக இருப்பதுடன் ஜிஎல்சி-களுடனும் பூமிபுத்ராக்களுடனும் இணைந்து அடுத்த கட்ட மேம்பாட்டிலும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.
துணைப் பிரதமரின் உரைமீது பின்னர் கருத்துரைத்த மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், அரசாங்கம் “உண்மையான சீன-பூமிபுத்ரா பங்காளித்துவத்துக்கு” முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“அரசாங்கக் குத்தகைகளை வழங்கும்போது உண்மையான சீன-பூமிபுத்ரா கூட்டுநிறுவனங்களுக்கு சலுகை காட்ட வேண்டுமே தவிர அலிபாபா நிறுவனங்களுக்கு அவற்றை வழங்கக்கூடாது.”
‘தாய்மொழிக் கல்வி பொருளாதாரத்துக்கு உதவுகிறது’
முன்னதாக, கருத்தரங்கைத் தொடக்கி வைத்த சுவா, தமது தொடக்க உரையில், தாய்மொழிக் கல்வி குறிப்பாக மெண்டரின் மொழிக் கல்வி பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்றார்.
சீனா, ஒரு பொருளாதார வல்லரசாக உருவாகிவருவதை வைத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“பண்பாட்டை வளர்க்கும் என்பதற்காக மட்டும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தவில்லை. அது பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்”, என்றாரவர்.
“(சீனமொழி பேசும் நாடுகளுடன்) அதிகமான கூட்டுமுயற்சிகளில் ஈடுபட வேண்டுமானால், மலேசியர்கள் பஹாசா மலேசியா, ஆங்கிலம், மெண்டரின் ஆகிய மொழிகளில் புலமையுள்ளவர்களாக மாறுவதை ஊக்குவிக்க வேண்டும்”.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுவா, தாய்மொழிக் கல்வியை இனரீதியாக அல்லது அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது என்றார்.
“நான் ஆங்கிலம் பேசுவதால் மாட் சாலே ஆகிவிடுவேனா?
“அறிவைப் பெருக்கிக் கொள்ள மூன்று மொழிகளுமே முக்கியமானவை; எந்த இனமும் ஒரு மொழியை மட்டுமே தெரிந்து வைத்திருப்பது போதுமானதல்ல”, என்றாரவர்.