முஹைடின்: “ஆங்கிலத்தில் அறிவியல், கணித பாடங்களை போதிப்பது என்பது முடிந்து போன கதை”

ஆங்கிலத்தில் அறிவியல், கணித பாடங்களைப் போதிக்கும் கொள்கையைத் தொடருவதில்லை என்ற முடிவு இறுதியானது என கல்வி அமைச்சர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார்.

ஆகவே அந்தக் கொள்கையை தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டும் என்ற வேண்டுகோட்கள், ஈராண்டுகள் காலம் கடந்தவை என துணைப் பிரதமருமான முஹைடின் சொன்னார்.

“2009ம் ஆண்டு ( ஆங்கிலத்தில் அறிவியல், கணித பாடங்களை போதிப்பதை நிறுத்திக் கொள்ளும் முடிவு அறிவிக்கப்பட்ட போது ) எத்தகைய எதிர்ப்பும் இல்லை. பெரும்பான்மையினர் அதனை ஏற்றுக் கொண்டார்கள். ”

“நான் அமைச்சரவையில் அதனைச் சமர்பித்தேன். எல்லோரும் ஒப்புக் கொண்டனர். அந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் உட்பட எல்லாத் தரப்புக்களும் இணக்கம் தெரிவித்தன.”

“ஆனால் இப்போது சில தரப்புக்கள் எதிர்ப்பதால் எதிர்க்கட்சிகள் அதில் சேர்ந்து கொள்ள விரும்புகின்றன.”

கணித அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பதற்கு குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பேஜ் என அழைக்கப்படும் கல்விக்கான பெற்றோர் நடவடிக்கை அமைப்பின் வேண்டுகோள் குறித்து முஹைடின் கருத்துரைத்தார்.

“முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருப்பது போல மலேசியர்கள் வெகு எளிதாக மறந்து விடுகின்றனர். அப்போது அது எழுப்பப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே புதிய கொள்கை அமலாக்கப்பட்டு விட்டது.”

“என்ன நடக்கிறது என்பது பேஜ் அமைப்புக்குத் தெரியவில்லை. ஒரு வேளை அது காலத்தால் பின் தங்கியிருக்கலாம்,” என்றார் அவர்.

அதற்கு முன்னதாக முஹைடின் கோலாலம்பூரில் ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழிப் பயிற்சித் திட்டத்தில் கலந்து கொண்டார்