‘ஜெனரல் சுல்கிப்லி அவர்களே, இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்து விட்டது’

“நாட்டுக்குச் சேவை செய்வதற்காக கீழ் நிலை அதிகாரிகள் ஆயுதப் படைகளில் சேர்ந்தனர். அம்னோவுக்கு சேவை செய்ய அல்ல. நீங்கள் அவர்களுக்கு தவறு செய்து விட்டீர்கள். அவர்களுக்குத் துரோகம் புரிந்தது நீங்களே.”

 

 

 

“நீங்கள் விசுவாசமாக இல்லை என்றால் நாங்கள் எப்படி உங்களுக்கு விசுவாசமாக இருப்பது?”

மஹாகுருபோலே: ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அகோங்கிற்கு மட்டுமே பதில் சொல்ல வேண்டும். வேறு யாருக்கும் அல்ல. நீங்கள் ஆளும் கட்சிக்காக வேலை செய்யவில்லை.

ஒவ்வொரு தேர்தலிலும் ஆயுதப்படை வீரர்கள் பிஎன்-னுக்கு வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்தப்படுவது ஊரறிந்த விஷயமாகும். அவர்களில் சிலரைக் கேட்டுப் பாருங்கள், வாக்குச் சீட்டுக்கள் எப்படி இருக்கும் என்பது கூட தங்களுக்குத் தெரியாது என்பார்கள். ஆனால் அவர்கள் எத்தனை தேர்தல்களில் “வாக்களித்தனர்” என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

நீங்கள் துரோகிகள் என முத்திரை குத்துகின்றவர்கள் உண்மையில் உங்களுடைய அட்டூழியங்களை அம்பலப்படுத்திய அவர்கள் துரோகிகளே.  அவர்கள் மாமன்னருக்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருக்கின்றனர்.

அவர்கள் தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டு விட்டனர். நீங்கள் எப்போது செய்யப் போகின்றீர்கள்?

ஹத்தி பானாஸ்: அந்த ஆயுதப் படை அதிகாரிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மை இல்லை என்றால் ஜெனரல் சொல்வது போல அவர்கள் துரோகிகளே.

அது உண்மை என்றால்? யார் உண்மையில் நாட்டுக்கு துரோகம் செய்கின்றனர்? ஜெனரல் அதனை விசாரிப்பது நல்லது. அது உண்மை என்றால் தர்மசங்கடத்தைத் தவிர்ப்பதற்காக அதனை அவர்  ஒப்புக் கொள்ள வேண்டாம். அதனைச் செய்வதை நிறுத்தி விட்டாலே போதும்.

காருலஸ் காரி: ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி என்ற முறையில் நீங்கள் அந்தக்  குற்றச்சாட்டுக்கள் குறித்து முதலில் விசாரித்திருக்க வேண்டும். அதற்குப் பின்னர் அறிக்கை வெளியிட்டிருக்கலாம். அந்த முறைகேடுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

உண்மையைச் சொல்லுங்கள்: ஜெனரல் அவர்களே, யாருக்கு எதிராக துரோகம்? வெறுக்கத்தக்க அந்த காரியத்தைச் செய்யுமாறு உத்தரவிட்ட உங்களையும் உங்களைப் போன்றவர்களுக்கு எதிராகவா? அவர்கள் சரியானதைச் செய்துள்ளார்கள். ஏனெனில் அவர்கள் மக்களுக்கு விசுவாசமாக நடந்து கொண்டுள்ளனர்.

தாங்கள் தவறு செய்திருப்பதை உணர்ந்த அவர்கள் இப்போது மாறி விட்டனர். அதில் என்ன தவறு? அவர்களை துரோகிகள் என்று வருணித்த்தர்காக நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும்.

கோர் எஸ்இ: ஜெனரல் சுல்கிப்லி ‘மருட்டல்’ என்பது வெளியிலிருந்து மட்டுமே வர வேண்டும் என்ற அவசியமில்லை. வெளி மருட்டல்களிலிருந்து மலேசியாவை பாதுகாப்பாக வைத்திருப்பதே உங்கள் வேலை.

ஆனால் இன்னொரு ‘மருட்டலும்’ உள்ளது. அது ‘உள்’ மருட்டல். அது உங்கள் பணிக்கு அப்பாற்பட்டது. மலேசிய மக்களிடமிருந்து கொள்ளையடிப்பது, திருடுவது, மோசடி செய்வது ஆகியவையே அவை. தங்கள் தீய செயல்கள் வெளிச்சத்துக்கு வராமல் தடுப்பதற்காக அதிகாரத்தில் தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்க விரும்புகின்றவர்களே அதனைச் செய்கின்றனர். நீங்கள் அவர்களில் ஒருவர் அல்ல என நான் நம்புகிறேன்.

ஜெரார்ட் சாமுவேல் விஜயன்: ஆயுதப் படைகள் அகோங்கிற்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும். பிஎன் அரசாங்கத்துக்கு அல்ல. வாக்களிப்பு வெளிப்படையானது எனக் கூறிக் கொள்வது உண்மையானால்:

1) இராணுவ முகாம்களில் வேட்பாளர்கள் ஏன் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை?

2) எல்லைப் பகுதிகளில் அல்லது தீவிரமான இராணுவப் பணியில் இல்லாத வீரர்கள் உட்பட எல்லா வீரர்களும் முன்கூட்டியே ஏன் அஞ்சல் வாக்குகளை செலுத்த வேண்டும்?

3) நாட்டின் மற்ற பகுதிகளில் வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பு அஞ்சல் வாக்குகள் ஏன் எண்ணப்பட வேண்டும்?

4) அஞ்சல் வாக்குகள் செலுத்தப்படும் போது அதனைப் பார்வையிடுவதற்கு அரசியல் கட்சிகளின் பேராளர்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை?

5) அந்தக் குற்றச்சாட்டுக்களை இன்று வரை ஆயுதப்படைகள் ஏன் விசாரிக்கவில்லை?

அந்தக் குற்றச்சாட்டுக்களை விடுத்துள்ள அனைத்து ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும் பொய் சொல்வதாகவோ அல்லது விசுவாசமில்லாதவர்களாகவோ கருத முடியாது. ஏனெனில் இப்போது ஆயுதப் படைகளில் பணியாற்றுகின்றவர்கள் கூட இது போன்ற குற்றச்சாட்டுக்களைத் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் இல்லாதவன்_3e06: ஜெனரல் சுல்கிப்லி எது குறித்து ஒப்பாரி வைக்கிறார்? யாருக்கு விசுவாசம்? நாட்டுக்குச் சேவை செய்யும் தனது வீரர்கள், தாங்கள் தேர்வு செய்யும் பேராளருக்கு வாக்களிப்பதற்கு அவர்களுக்கு வழங்காமல் அம்னோவுடன் கை கோர்த்துக் கொண்டு பொது மக்களை ஏமாற்றியதாக ஆயுதப் படைகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களது உரிமை எங்கே போனது?

நாட்டுக்குச் சேவை செய்வதற்காக கீழ் நிலை அதிகாரிகள் ஆயுதப் படைகளில் சேர்ந்தனர். அம்னோவுக்கு சேவை செய்ய அல்ல. நீங்கள் அவர்களுக்கு தவறு செய்து விட்டீர்கள். அவர்களுக்குத் துரோகம் புரிந்தது நீங்களே.