ஆங்கிலத்தில் அறிவியல் கணித பாடங்களைப் போதிப்பதை பிகேஆர் எதிர்க்கிறது. அத்துடன் அது பக்காத்தான் ராக்யாட் கொள்கையில் ஒரு பகுதி அல்ல என்றும் அது கூறுகிறது.
ஆங்கிலத்தில் அறிவியல் கணித பாடங்களைப் போதிப்பதை தேர்வு செய்யும் வாய்ப்பு பெற்றோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அந்தக் கொள்கைக்கு ஆதரவாக பிகேஆர் தோழமைக் கட்சியான டிஏபி அறிக்கை விடுத்தததைத் தொடர்ந்து பிகேஆர் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவதற்கும் கல்வியை மேம்படுத்துவதற்கும் ஆங்கிலத்தில் அறிவியல் கணித பாடங்களைப் போதிப்பது ஒரு வழி அல்ல என பிகேஆர் தொடர்புப் பிரிவு இயக்குநர் நிக் நாஸ்மி நிக் அகமட் கூறினார்.
அத்துடன் அந்தக் கொள்கை பற்றி ‘புக்கு ஜிங்கா’ என அழைக்கப்படும் பக்காத்தான் பொதுக் கொள்கை வடிவமைப்பிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதற்கு பாஹாசா மலேசியாவைப் பயன்படுத்துவதே சிறந்த வழி என பிகேஆர் வலியுறுத்துகிறது. காரணம் அந்த மொழி எல்லா மாணவர்களுக்கும் பழக்கமான மொழி ஆகும். அரசியலமைப்பிலும் தேசிய மொழியாக அது பொறிக்கப்பட்டுள்ளது.
“சிறுபான்மையாக உள்ள ஆங்கில மொழி பேசும் குடும்பங்களைத் தவிர மாணவர்களுக்கு அந்நியமாக உள்ள ஒரு மொழியில் கல்வி கற்பிக்கும் போது ஆங்கில மொழி பேசும் மாணவர்களுக்கே அதிக நன்மை கிடைக்கும். ஆங்கில மொழி பேசாத மாணவர்கள் பாதிக்கப்படுவர். அதனால் ஏற்றத்தாழ்வு விரிவடையும்,” என்றார் நிக் நாஸ்மி.
“ஆங்கில மொழி ஆற்றலை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்களுடைய தரம் உயர்த்தப்படுவதோடு பாடத்திட்டமும் வலுப்படுத்தப்பட வேண்டும். அதே வேளையில் அந்த மொழிக்கான பாட நேரமும் அதிகரிக்கப்பட வேண்டும்.”
ஆங்கிலத்தில் அறிவியல் கணித பாடங்களைப் போதிக்கப்படுவதை தேர்வு செய்யும் வாய்ப்பு பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என பேஜ் என அழைக்கப்படும் பெற்றோர் நடவடிக்கை குழு ஒன்று போராட்டம் நடத்தி வருகிறது.
“கடந்த ஒன்பது ஆண்டுகளாக அந்தக் கொள்கை நடப்பில் இருப்பதால் எந்த மொழியிலும் கற்பிக்கும் ஆற்றலை ஆசிரியர்கள் பெற்றிருப்பர் என்பதால் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட வழி இல்லை என அது கருகிறது.”
ஆங்கிலத்தில் அறிவியல், கணித பாடங்களைப் போதிக்கும் கொள்கையைத் தொடருவதில்லை என்ற முடிவு இறுதியானது என கல்வி அமைச்சர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார். அது முடிந்து போன கதை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே அந்தக் கொள்கையை தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டும் என்ற வேண்டுகோட்கள், ஈராண்டுகள் காலம் கடந்தவை என துணைப் பிரதமருமான முஹைடின் சொன்னார்.
ஆங்கிலத்தில் அறிவியல், கணித பாடங்களைப் போதிப்பதற்கு வாய்ப்பு அளித்தால் திட்டப் பணிகள் சிக்கலாகி விடும் என்றும் அவர் ஏற்கனவே கூறியிருக்கிறார்.