ஜெனரல், இராணுவத்துக்கு அவமானத்தை கொண்டு வந்து விட்டார்

அஞ்சல் வாக்கு தில்லுமுல்லுகள் எனக் கூறப்படுவதை அம்பலப்படுத்திய தரப்புக்களின் விசுவாசம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் சுல்கிப்லி முகமட் ஜின், தமது சகாக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக மூத்த சட்ட விரிவுரையாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

அந்த ஜெனரல் நாடு, மக்கள் என்ற அடிப்படையிலான விசுவாசம் என்ற கோட்பாட்டை “புரிந்து கொள்ளவில்லை” என்றும் “வெற்று மறுப்பறிக்கைகளை” வெளியிடுகிறார் என்றும் அரசியலமைப்பு சட்ட வல்லுநரான அப்துல் அஜிஸ் பேரி சொன்னார்.

யாருக்கு விசுவாசம்? அரசியல் கட்சிகள் ஆயுதப் படைகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவரும் நாட்டுக்கும் அதன் சின்னமாக விளங்கும் யாங் டி பெர்துவான் அகோங்கிற்கும் விசுவாசமாக இருக்க வேண்டும்,” என அப்துல் அஜிஸ் விடுத்த அறிக்கை தெரிவித்தது.

தாங்கள் தேர்தல் மோசடியில் சம்பந்தப்பட்டதாக கூறிக் கொண்டுள்ள முன்னாள் இராணுவ வீரர்களைத் துரோகிகள் என சுல்கிப்லி நேற்று வருணித்துள்ளது பற்றி அவர் கருத்துரைத்தார்.

ஆயுதப் படைகள் கூட்டரசு அரசாங்கச் சேவையில் ஒரு பிரிவாகும். அது நாட்டுக்கும் மாமன்னருக்கும் மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும் என்பது அதன் பொருள் ஆகும்.

“ஆளும் அரசாங்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய தேவை இல்லை. அரசாங்கச் சேவை நடுநிலை வகிப்பது கட்டாயமாகும். அது ஆளும் கட்சிக்குத் துணை போகக் கூடாது.

“ஆயுதப்படைகள் சட்டத்துக்கு உட்பட்டு அரசாங்க ஆணைகளை நிறைவேற்ற வேண்டும். அஞ்சல் வாக்குகள் விஷயத்தில் நிகழ்ந்துள்ளது கிரிமினல் குற்றமாகும்,” என்றார் அப்துல் அஜிஸ்.

இராணுவத்தில் அஞ்சல் வாக்கு தில்லுமுல்லுகள் நிகழவில்லை என்பதை ஐயத்துக்கு இடமின்றி மெய்பிப்பது ஆயுதப் படைகளின் கடமை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அந்த விவகாரத்தை எழுப்பிய பாஸ் இளைஞர் பிரிவைச் சாடுவதற்குப் பதில் சுல்கிப்லி, அந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என அப்துல் அஜிஸ் வலியுறுத்தினார்.

“ஆயுதப் படைகள் பாஸ் இளைஞர் பிரிவுக்கு நன்றி கூற வேண்டும். தேர்தல்கள் தூய்மையானதாகவும் மோசடி இல்லாமலும் இருப்பதைக் காண விரும்பும் மக்களையே பாஸ் பிரதிநிதிக்கிறது.”

“தான் தூய்மையாக இருப்பதை ஆயுதப்படைகள் மெய்பிக்க வேண்டுமே தவிர மக்கள் ஆயுதப்படைகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் எனச் சொல்லக் கூடாது.”

“ஆயுதப்படைகள் மக்களுக்கு சொந்தமானது என்பதை ஜெனரல் உணர வேண்டும். மக்களை அவமானப்படுத்தியதுடன் அரசியலமைப்புக்கு எதிராக பல அறிக்கைகலை விடுத்துள்ள தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார், துணைத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்காரைப் போன்று அவர் நடந்து கொள்ளக் கூடாது”, என்றார் அப்துல் அஜிஸ்.

இதனிடையே தாங்கள் சேவையில் இருந்த போது அஞ்சல் வாக்குகளில் தில்லுமுல்லு செய்ததை ஒப்புக் கொண்ட நான்கு முன்னாள் வீரர்களை துரோகிகள் என சுல்கிப்லி வருணித்துள்ளது குறித்து பாஸ் இளளஞர் பிரிவு அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

அவர்கள் தாங்களாகவே முன்வந்து தவறு நிகழ்ந்துள்ளதை வெளியிட்டனர் என்று அந்தப் பிரிவின் துணைத் தலைவர் முகமட் அட்ராம் மூசா கூறினார்.

NONE“அந்த நால்வரும் வெளியிட்ட தகவல்கள் பற்றி அவர்களிடம் நேரடியாக விசாரிக்கவும் அதற்குப் பின்னர் அரசுக்கு பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவையும் அமைத்திருக்க வேண்டும்.”

“அஞ்சல் வாக்குகள் மீது பாஸ் இளைஞர் பிரிவைச் சாடுவது விவேகமான நடவடிக்கை அல்ல. அஞ்சல் வாக்குகள் தில்லுமுல்லு தொடர்பாக ஜெனரலுக்கு சரியான தகவல் கொடுக்கப்படவில்லை என நான் நம்புகிறேன்,” என அட்ராம் சொன்னார்.

‘நாங்கள் அந்த விஷயம் பற்றி ஜெனரலுக்கு விளக்க எப்போதும் தயாராக இருக்கிறோம்,” என்றார் அவர்.