செக்சுவலிடி மெர்டேகா கருத்தரங்கை போலீஸார் தடுத்தனர்

நேற்றிரவு கோலாலம்பூரில், சுமார் 30 போலீசார், தடை செய்யப்பட்ட செக்சுவலிடி மெர்டேகா விழா தொடர்பான ஒரு கருத்தரங்கைத் தடுத்து நிறுத்தினர்.

இரவு மணி 7.30 அளவில் பசார் சினியின் அன்னெக்ஸ் கேலரிக்கு வந்ததாக செக்சுவலிடி மெர்டேகா ஒருங்கிணைப்பாளர் பாங் கீ தெய்க் கூறினார்.

 “இரவு 8 மணிக்கு அதன் கதவுகளை அடைப்பதற்குத் தயாரானபோது போலீசார் வந்துசேர்ந்தனர்.அது ஒரு பொது இடம் என்றும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறும் கேட்டுக்கொண்டனர். நாங்கள் கலைந்து சென்றோம். இன்றுவரை திரும்பிச் செல்லவில்லை”, என்றார்.

“போலீசார் முறையாகவே நடந்துகொண்டார்கள். எங்களிடமிருந்து எதையும் பறிமுதல் செய்யவில்லை.”

இனி, நவம்பர் 9 லிருந்து 13வரை அன்னென்ஸ் கேலரியில் நடத்தப்பட விருந்த செக்சுவலிடி மெர்டேகா விழா என்னவாகும் என்று கேட்டதற்கு பாங் பதிலளிக்கவில்லை.

நேற்று துணை போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் காலிட் அபு பக்கர், செக்சுவலிடி மெர்டேகா  விழா ஒட்டுமொத்தமாக தடை செய்யப்படுவதாக அறிவித்திருந்தார்.

ஓரினச் சேர்க்கையாளர்கள், அரவாணிகள் போன்றோர் பற்றி நல்ல புரிதலை ஏற்படுத்தவும் அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இவ்விழா 2008-இலிருந்து நடத்தப்பட்டு வந்துள்ளது.

அதற்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து எதிர்வினை ஆற்றிய பாங், “இது மலேசியாவுக்கு ஒரு துயர நாள்” என்றார்.

செக்சுவலிடி மெர்டேகா விழாவுக்குப் பல தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.அதே வேளை சில அமைப்புகள் மலேசிய வழக்குரைஞர் மன்றம், சுவாராம், இஸ்லாத்தில் சகோதரிகள் போன்றவை அதற்குத் தடை விதிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தன.