ஸைட்: மலேசியாவை காப்பாற்ற ரிம10 நன்கொடை தாரீர்

Zaiddonationமலேசியாவை காப்பாற்றுவோம் இயக்கம் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்ள மலேசிய மக்களிடமிருந்து நிதி உதவி கோருகிறது என்று இவ்வியக்கத்தின் உறுப்பினரான ஸைட் இப்ராகிம் கூறினார்.

இந்நிதி இந்நாட்டில் வேரூன்றியிருக்கும் ஊழலை ஒழிக்கவும் உதவும். இங்கு வணிகர்கள் நிதி உதவி அளித்து கைமாறாக சலுகைகள் பெறுகின்றனர் என்றாரவர்.

“நாங்கள் தொழிலதிபர்கள் மற்றும் உலகிலுள்ள ஜோ லவ்ஸ் போன்றவர்களிடமிருந்து நிதி உதவி தேட மாட்டோம், ஏனென்றால் வணிகர்களிடமிருந்து ‘உதவி’ தேடி அதற்கு கைமாறாக சலுகைகள் அளிப்பது திட்டமிட்ட ஊழலுக்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது.

“(ஆகவே), தங்களுடைய பொதுவான எதிர்காலம் மீது அவர்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதை வெளிப்படுத்த ஒரு சிறிய, தனிப்பட்ட ஈடுபாடாக – ரிம10 ஆகிலும் – அளிக்குமாறு நான் மலேசிய மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்”, என்று அவர் தமது வலைத்தளத்தில் இன்று எழுதியுள்ளார்.

இது குறித்த மேல்விபரங்களை பின்னர் தருவதாக கூறியுள்ளார்.

பிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து அகற்றும், அரசு அமைப்புகளில் சீர்திருத்தங்களை அமல்படுத்தும் நோக்கங்கள் அடங்கிய ஒரு குடிமக்கள் பிரகடனத்தில் இக்குழுவினர் கையொப்பமிட்டனர்.

இக்குழுவினர் மலேசியாவுக்கு பொருளாதார மாற்றங்களையும் கொணர முடியும் என்று ஸைட் கூறினார்.

“இந்த இயக்கம் பூதாகரமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேலை இழப்புகளை நிறுத்துவதற்கு உதவ இயலும். அது தொழிலாளர்கள் தக்க முறையான வேலைகள் மற்றும் நியாயமான ஊதியம் பெறவும் உதவ முடியும்.

“அதிக மலிவான அந்நியத் தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைவதையும் மலேசியாவை காப்பாற்றுவோம் (இயக்கம்) நிறுத்த முடியும்”, என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சரான ஸைட் இப்ராகிம் கூறினார்.