யூயூசிஏ என்ற பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15வது பிரிவு அரசியலமைப்புக்கு முரணானது என அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உயர் கல்வி அமைச்சு முறையீடு செய்து கொள்வதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது.
முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு “அதிகாரங்கள் பிரிக்கப்பட்ட உணர்வுகளுக்கு எதிராக இருப்பதால்” அமைச்சரவை அந்த முடிவைச் செய்தது என அமைச்சரவை வட்டாரங்களை மேற்கோள் காட்டி சீன மொழி நாளேடுகள் தகவல் வெளியிட்டுள்ளன.
“நீதிமன்ற முடிவு தனிப்பட்ட சட்ட விளக்கம் என அமைச்சரவை கருதுகிறது. அந்தத் தீர்ப்பு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டால் எதிர்கால வழக்குகளை அது பாதிக்கும். ஆகவே அரசாங்கம் மேல் முறையீடு செய்ய வேண்டும் என அமைச்சரவை கருதுகிறது,” என அந்தத் தகவல் மேலும் குறிப்பிட்டது.
அந்தத் தகவலை ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுதினும் உறுதிப்படுத்தியுள்ளார். “யூகேஎம் நால்வர் மீதான முறையீட்டு நீதிமன்ற முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்து கொள்ள அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக சைனா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நானும் வட்டாரங்களிலிருந்து அந்தத் தகவலை கேள்விப்பட்டேன்,” என அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.