சான் கொங் சாய் வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி

போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதித் திட்டம் தொடர்பில் ஏமாற்றியதாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் சான் கொங் சாய் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு மீதான விசாரணை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் தேதி தொடங்கும்.

அந்த விசாரணையில் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி முக்கியச் சாட்சியாக அழைக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏமாற்றியதாக கூறும் மூன்று குற்றச்சாட்டுக்களும் திருத்தப்பட்டு சான்-டம் வாசிக்கப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டுக்களை சான் மறுத்தார். பின்னர் நீதிபதி ஸாமானி அப்துல் ரஹிம் அந்தத் தேதியை நிர்ணயம் செய்தார்.

அந்த மூன்று குற்றச்சாட்டுக்களிலும் “kerajaan Malaysia” (மலேசிய அரசாங்கம்) என்னும் சொல் “sokongan kamu (Chan) sebagai menteri pengangkutan” (போக்குவரத்து அமைச்சர் என்னும் முறையில் உங்கள் (சான்) ஆதரவு எனத் திருத்தப்பட்டுள்ளதாக அரசு வழக்குரைஞர் நோர்டின் ஹசான் கூறினார்.

அந்தத் திருத்தங்களைத் தொடர்ந்து 2004ம் ஆண்டுக்கும் 2006ம் ஆண்டுக்கும் இடையில் போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதித் திட்டத்தின் மேம்பாட்டாளரான கோலா டைமன்சி சென் பெர்ஹாட்-டுக்கு 1.9 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தொகை அங்கீகரிக்கப்படுவதில் முன்னாள் பிரதமர் அப்துல்லாவை ஏமாற்றியதாக சான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் என்னும் முறையில் சான்- உடைய ஆதரவுடன் Transshipment Megahub Berhad என்னும் நிறுவனம் வழியாக கோலா டைமன்சி சென் பெர்ஹாட் கடன் பத்திரங்களை வெளியிடுவதின் மூலம் மேம்பாட்டுச் செலவுகள் சமாளிக்கப்படும் என்ற தகவலை மறைத்து விட்டதாக 55 வயதான சான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சான், புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள பாங்குனான் பெர்டானா கட்டிடத்தின் நான்காவது மாடியில் அந்தக் குற்றங்களைப் புரிந்ததாகவும் கூறப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 417வது பிரிவின் கீழ் சுமத்தப்பட்டுள்ள அந்தக் குற்றச்சாட்டில் சான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

விசாரணை ஏப்ரல் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையில் நடைபெறும் என அறிவித்த ஸாமானி, விசாரணை சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு உயர்ந்த நிபுணத்துவத் தரத்தை பின்பற்றுமாறு அரசு தரப்பையும் பிரதிவாதித் தரப்பையும் கேட்டுக் கொண்டார்.

பெர்னாமா