அம்பிகா இசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும், பெர்க்காசா

செக்சுவாலட்டி மெர்தேகாவுக்கு எதிராக தேசியப் பள்ளிவாசலில் பெர்க்காசா ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் அம்பிகா ஸ்ரீனிவாசன் எதிர்ப்பு ஊர்வலமாக மாறியது. அம்பிகா உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என ஆர்ப்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.

பெர்சே 2.0 தலைவருமான அம்பிகா, நவம்பர் 9ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் செக்சுவாலட்டி மெர்தேகாவில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசியப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் கூடிய 30 பேர் செக்சுவாலட்டி மெர்தேகா ஏற்பாட்டாளர்களைக் கண்டிக்கும் பதாதைகளை ஏந்திக் கொண்டு அணிவகுத்துச் சென்றனர்.

செக்சுவாலட்டி மெர்தேகா என்பது பலதரப்பட்ட பாலியல் அம்சங்களையும் பால் அடையாளத்தையும் கொண்டுள்ள மக்களுடைய மனித உரிமைகளை கொண்டாடும் ஆண்டு விழாவாகும். பல அரசு சாரா அமைப்புக்களும், கலைஞர்களும் போராளிகளும் தனிநபர்களும் 2008ம் ஆண்டு தொடக்கம் அந்த விழாவை நடத்தி வருகின்றன.

“Just ISA Ambiga, the antichrist”, “எல்லா சமயங்களும் ஒரினச் சேர்க்கையை எதிர்க்கின்றன”, “இஸ்லாமிய சமயத் துறைகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” , எனக் கேட்டுக் கொள்ளும் வாசகங்கள் அந்தப் பதாதைகளில் எழுதப்பட்டிருந்தன.

“ஒரினச் சேர்க்கையில் நாட்டமுள்ளவர்களை ஆதரிப்பது நமது நாட்டை அழித்து விடும்”, என பெர்க்காசா இளைஞர் தலைவர் இர்வான் பாஹ்மி இட்ரிஸ் கூறினார். அந்தக் கலாச்சாரத்தை கடைசி சொட்டு ரத்தம் வரை தடுத்து நிறுத்தப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.

“வழக்குரைஞர் மன்றத்தை தடை செய்யுங்கள்” என கேட்டுக் கொள்ளும் சுவரொட்டியையும் அவர்கள் வைத்திருந்தனர். செக்சுவாலட்டி மெர்தேகாவுக்கு அந்த மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளதால் அதனை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

பின்னர் அவர்கள் தேசியப் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமயத் துறைக்கு ஊர்வலமாக சென்றனர். செக்சுவாலட்டி மெர்தேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை அவர்கள் அங்கு சமர்பித்தனர்.

பெர்க்காசா துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் பாக்கார், அந்தத் துறையின் இயக்குநர் சே மாட் சே அலியிடம் பிற்பகல் 2 மணி வாக்கில் அந்த மகஜரைக் கொடுத்தார்.

‘சகிப்புத் தன்மை இல்லாதது குறித்து ஆத்திரம்’

இதனிடையே செக்சுவாலட்டி மெர்தேகா, அம்பிகா மீது தாக்குதல் தொடுக்கும் பெர்க்காசாவை விடுதலைக்கான வழக்குரைஞர் என்னும் அமைப்பு சாடியுள்ளது.

“சகிப்புத்தன்மை இல்லாதது குறித்து நாங்கள் ஆத்திரமடைந்துள்ளோம். பெர்க்காசா தாக்குதல், கூட்டரசு அரசியலமைப்பிலும் அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்திலும் கூறப்பட்டுள்ள பேச்சு-கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது.”

சிறுபான்மை பிரிவுகளையும் ஒதுக்கப்பட்ட பிரிவுகளையும் மிரட்டுவது, அச்சுறுத்துவது, அவற்றின் உரிமைகளை மீறுவது ஆகியவற்றுக்கு எதிராக மலேசியர்கள் போராட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டது.

“பாலியல் கருத்துக்கள் மாறுபாடாக இருந்தாலும் அனைத்து சிறுபான்மைப் பிரிவுகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். செக்சுவாலட்டி மெர்தேகா ஏற்பாட்டாளர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள் ஆகியோருடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது அதிகாரிகள் கடமையாகும்.”