அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்கத் தொடங்கி விட்ட மாணவர்களுக்கு அவர்கள் அந்த மொழியில் அந்தப் பாடங்களை தொடர்ந்து கற்பதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது.
பல பெற்றோர் அமைப்புக்கள் ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து அரசாங்கம் அவ்வாறு அறிவித்துள்ளது.
என்றாலும் அந்தத் தீர்வு, ஆங்கில மொழிக் கொள்கையைக் கைவிடுவது என 2009ம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவிலிருந்து அரசாங்கம் பின் வாங்குவதாகப் பொருள்படாது.
தற்போது தொடக்கப்பள்ளிகளில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு பொருந்தும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று கூறினார். அவர்கள் ஐந்தாம் படிவத்தை முடிக்கும் வரையில் அதனைத் தொடருவதற்கு அனுமதிக்கப்படுவர்.
பெற்றோர்களுடைய கருத்துக்களை பரிசீலித்த பின்னர் தற்போது கணித அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்று வரும் மாணவர்கள் அதனைத் தொடர்ந்து அந்த மொழியில் கற்பதற்கு அல்லது முழுமையாக பாஹாசா மலேசியாவில் கற்பதற்கு அல்லது இரண்டு மொழிகளிலும் கற்பதற்கு அனுமதிப்பது என அமைச்சரவை இன்று முடிவு செய்தது,” என முஹைடின் சொன்னார்.
2003ம் ஆண்டு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆங்கிலத்தில் கணித அறிவியல் பாடங்களைக் கற்பிக்கும் கொள்கையை அறிமுகம் செய்தார். அதற்கு அப்போது தேசிய மொழியாக பாஹாசா மலேசியாவை தற்காக்க போராடிய பல அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.
ஆனால் அதற்கு ஆறு ஆண்டுகள் கழித்து அறிவியலையும் கணிதத்தையும் போதிப்பதற்கு பாஹாசா மலேசியாவைப் பயன்படுத்தும் கொள்கைக்கு அரசாங்கம் மாறியது.