வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், செக்சுவாலட்டி மெர்தேகா ஏற்பாட்டாளர்களை தற்காத்துப் பேசியுள்ளார். சிறுபான்மை மக்களுடைய உரிமைகளையும் மதிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் சொன்னார்.
தாம் அந்த விழாவுக்கான ஏற்பாட்டாளர் அல்ல என்பதைத் தெளிவுபடுத்திய அவர், நவம்பர் 9ம் தேதி அந்த நிகழ்வைத் தொடக்கி வைக்குமாறு தனிப்பட்ட முறையில் தாம் அழைக்கப்பட்டதாகச் சொன்னார்.
ஒதுக்கப்பட்ட திருநங்கைகள் அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் பாரபட்சத்தை எடுத்துக் காட்டுவதே செக்சுவாலட்டி மெர்தேகாவின் நோக்கம் என அவர் விளக்கினார்.
“அது ஒரினச் சேர்க்கையை ஊக்குவிக்கும் நிகழ்வு அல்ல. ஒரினச் சேர்க்கையை முக்கிய சமயங்கள் நிராகரிப்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அதற்காக தங்களுடைய நிலை காரணமாக மனோ ரீதியாக ஒடுக்கப்படுகின்ற அந்த ஒதுக்கப்பட்ட சமூகம் மீது புரிந்துணர்வைக் காட்டக் கூடாது என்பது அதன் பொருள் அல்ல. ”
“அவர்கள் அதற்காக மோசமாக நடத்தப்பட வேண்டும் என்பதோ அவர்களை ஈவிரக்கமின்றி தாக்க வேண்டும் என்பதோ அதன் பொருள் அல்ல. அவர்களுக்கு உரிமை இல்லை என்பதும் அதன் அர்த்தமல்ல. அவர்களை மிருகங்கள் என அழைக்கும் அளவுக்கு சென்றுள்ளது அந்த உண்மையை உணர்த்துகிறது”, என அம்பிகா இன்று விடுத்த ஒர் அறிக்கை கூறியது.
அம்பிகா மீதும் அந்த நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மீதும் அண்மையக் காலமாக தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. அந்த நிகழ்வுக்கு எதிராக பெர்க்காசாவும் முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்களைக் கொண்ட கூட்டணி ஒன்றும் போலீசில் புகார் செய்துள்ளன. அம்பிகா மீதும் ஏற்பாட்டாளர்கள் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவை கேட்டுக் கொண்டுள்ளன.
அம்பிகா உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்று கூட பெர்க்காசா கேட்டுக் கொண்டுள்ளது.
பொது ஒழுங்கை நிலை நிறுத்தும் பொருட்டு அந்த நிகழ்வு தடை செய்யப்படுவதாக துணைத் தேசிய போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் நேற்று அறிவித்தார்.