பினாங்கு தகவல் சுதந்திர மசோதாவை ஏற்றுக் கொண்டுள்ளது

பினாங்கு மாநிலச் சட்டமன்றம், தகவல் சுதந்திர மசோதாவை நேற்று ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிர்ப்பாக 2 வாக்குகளும் செலுத்தப்பட்டன.

மொத்தம் 40 உறுப்பினர்களைக் கொண்ட அந்த சட்டமன்றக் கூட்டத்தில் நேற்று 14 பேர் கலந்து கொள்ளவில்லை.

நேற்று பிற்பகல் அந்த மசோதா சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

அதனை இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமி இரண்டாவது வாசிப்புக்கு சமர்பித்தார்.

அரசியல் கட்சிகள், 20 அமைப்புக்கள் ஆகியவற்றின் கருத்துக்களைத் திரட்டுவதற்காக மூன்று முறை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து அந்த மசோதா திருத்தப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி அந்த மசோதா முதலில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நவம்பர் மாதம் முதல் தேதி அந்த மசோதா, திருத்தப்படுவதற்காக டிஏபி டத்தோ கிராமாட் உறுப்பினர் ஜக்திப் சிங் டியோ தலைமையில் அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிஎன் புலாவ் பெத்தோங் உறுப்பினர் முகமட் பாரிட், சாஆட், பிஎன் சுங்கை டுவா உறுப்பினர் ஜாஸ்மின் முகமட் ஆகியோர் அந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்த இருவர் ஆவர்.

அதற்கு முன்னதாக தகவல் சுதந்திர மசோதாவுக்கான ஐந்து திருத்தங்களை டிஏபி தஞ்சோங்  உறுப்பினர் சாவ் கொன் யாப்-பும் பிகேஆர் பத்து மாவ்ங் உறுப்பினர் அப்துல் மாலிக் அபுல் காசிமும் சமர்பித்தனர். அவர்கள் இருவரும் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்களும் ஆவர்.

TAGS: