தாஜுடின் தொடர்புகளை முன்னாள் மூத்த போலீஸ் அதிகாரி உறுதி செய்கிறார்

மலேசிய விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தாஜுடின் ராம்லிக்கு எதிரான வழக்குகளை ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீட்டுக் கொண்டு ஏதாவது ஒரு வகையில் தீர்வு காண வேண்டும் என உத்தரவிடுவதற்கு முன்னர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீண்டும் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் கோலாலம்பூர் போலீஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவுத் தலைவர் மாட் ஜைன் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தாஜுடின் அல்லது மற்ற அரசியல் தொடர்புடைய பிரமுகர்களுடைய நலன்களைக் காட்டிலும் பொது மக்களுடைய நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு அது அவசியம் என அவர் சொன்னார்.

“மலேசிய விமான நிறுவன ஊழலில் “மறைவான கரங்களும் பழைய ஆட்டக்காரர்களும்” வேலை செய்வதாகவும் அவர்கள் அண்மைய எம்ஏஎஸ்- ஏர் ஏசியா ‘இணைப்பில்’ சம்பந்தப்பட்டுள்ளதாகவும் நான் கருதுகிறேன்.”

“1998ம் ஆண்டு நிறுவன உலகிலிருந்து காணாமல் போன வான் அஸ்மி வான் ஹம்சா எம்ஏஎஸ் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளது அந்த ஊகத்தை வலுப்படுத்துகிறது. அந்த வான் அஸ்மி முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஜைனுடின் சார்பில் 150 மில்லியன் ரிங்கிட்டை வைத்திருப்பதில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.”

“அந்த புதிய நடவடிக்கையில் ஏதோ கோளாறு உள்ளது என்றோ அல்லது தாஜுடினுக்கு நிகழ்ந்ததைப் போன்று மீண்டும் ஏதாவது நடக்கக் கூடும் என்றோ மக்கள் சந்தேகப்படுவதற்கு அல்லது கவலைப்படுவதற்குக் காரணம் உள்ளது,” என மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மாட் ஜைன் குறிப்பிட்டுள்ளார். எம்ஏஎஸ்- ஏர் ஏசியா ஒப்பந்த நிபந்தனைகளை முழுமையாக அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது என்றும் அவர் சொன்னார்.

பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ், ஆகஸ்ட் மாதம் 8ம் தேதியிட்ட கடிதத்தில்,  தாஜுடினுடன் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணுமாறு ஜிஎல்சி-க்களுக்கு ஆலோசனை கூறுவதற்கான அரசாங்க அதிகாரத்தைத் தான் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது பற்றி மாட் ஜைன் கருத்துரைத்தார். நஸ்ரியின் கூற்றை நஜிப்பும் உறுதி செய்துள்ளார்.

“எம்ஏஎஸ் தலைவராக இருந்த போது தாஜுடின் பெற்றிருக்கக் கூடிய பில்லியன் கணக்கான ரிங்கிட்டுக்கு தாங்கள் பிரியாவிடை கூறுவது நல்லது என மக்கள் நினைப்பதில் தவறு இல்லை,” என்றார் மாட் ஜைன்.

மாட் ஜைன் தாம் சேவையில் இருந்த காலத்தில் பிரமுகர்கள் தொடர்பான சில வழக்குகளை விசாரித்துள்ளார். எம்ஏஎஸ் நிறுவனத்தில் தாஜுடின் செய்த தவறுகள் எனக் கூறப்படுவது மீது 1999ம் ஆண்டு முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் சமர்பித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட புலனாய்வில் தாம் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் அவர் சொன்னார்.