பாஸ்: ஹூடுட் சட்ட திருத்தம் குறித்து பாரிசான் கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அம்னோவின் பொறுப்பு

 

PASumnomustexplainhududஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 355 க்கு தனிப்பட்ட உறுப்பினர் தாக்கல் செய்த திருத்தங்கள் குறித்து பாரிசான் பங்காளிக் கட்சிகளுக்கு அம்னோதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தாக்கியுடின் ஹசான் இன்று கூறினார்.

அந்தச் சட்டத்தை (சட்டம் 355) திருத்துவதற்கான முன்மொழிதல்களை அம்னோ ஆதரிக்கிறது என்று பாஸ் கட்சிக்கு உறுதியளிக்கப்பட்டது என்றாரவர்.

“ஆகவே, பாரிசானை வழிநடத்திச் செல்கிற கட்சி என்ற முறையில் அம்னோதான் இந்த பிரச்சனைக்கு விளக்கமளிக்க வேண்டும், நாங்கள் அல்ல, என்று நான் கருதுகின்றேன்”, என்றார் தாக்கியுடின்.

நடைமுறைகேற்ப, மாராங் நாடாளுமன்ற உறுப்பினர் (பாஸ் தலைவர் ஹாடி) அந்த தனிப்பட்ட உறுப்பினர் மசோதாவை தாக்கல் செய்திருக்கலாம். இருப்பினும், அது பாஸ்சிடமிருந்து வந்தாலும், அது பாஸ்சை அதிகாரப்பூர்வமாக பிரதிநிதிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

அந்த மசோதாவை தாக்கல் செய்தவர் ஒரு தனிப்பட்ட நபர். அவர் அரசாங்கத்தின் ஓர் உறுப்பினராகக் கருதப்படவில்லை. அதை தாக்கல் செய்தது பாஸ் அல்ல, ஆனால் அவர் பாஸ்சிலிருந்து வந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்று அவர் தொடர்ந்து கூறினார்.

மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

தாக்கியுடின் கூற்றுப்படி, ஷரியா நீதிமன்றங்களின் அதிகாரங்களைத் திருத்துவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

அந்த மசோதா குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்று தாம் தெரிந்துகொண்டதாகக் கூறிய தாக்கியுடின், அப்படியில்லை என்றால், 15 ஆவது இடத்தில் இருந்த அந்த மசோதாவை முதலாவது இடத்திற்கு ஓர் அமைச்சர் கொண்டுவர அனுமதிப்பது என்பது சாத்தியமற்றதாகும் என்றார்.

“அந்த மசோதா அமைச்சரவையின் ஒப்புதலைக் கண்டிப்பாக பெற்றிருந்திருக்க வேண்டும். அது தவிர, முஸ்லிம் அல்லாத கட்சிகளுக்கு என்ன புரியவில்லை என்பது குறித்து எனக்குப் புரியவில்லை”, என்று தாக்யுடின் மேலும் கூறினார்.