MCCBCHST: பள்ளிக்கூடங்களில் மாடுகளை அறுக்க வேண்டாம்

நாளை அய்டில் அட்ஹா கொண்டாடப்படவிருக்கும் வேளையில் பள்ளிக்கூடங்களிலும் இதர பொது இடங்களிம் மாடுகளை அறுக்கும் நடைமுறையை நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு MCCBCHST எனப்படும் மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ  ஆலோசனை மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாடுகளை-  இந்துக்கள் மிகவும் புனிதமாக கருதும்- தியாகம் செய்யும் சடங்கு கோலாலம்பூரில் அடுத்த வெள்ளிக்கிழமை குறைந்தது இரண்டு பள்ளிக்கூட வளாகங்களில் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது குறித்து அந்த மன்றம் கவலை தெரிவிக்கும் அறிக்கையை அதன் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.

வழக்கமாக அத்தகைய நிகழ்வுகள் பள்ளிவாசல் வளாகங்களில் நடைபெறும். ஆனால் சில சமயங்களில் மற்ற இடங்களிலும் நடத்தப்படுவது உண்டு.

போதுமான வசதிகள் இல்லாததால் அடுத்த வெள்ளிக்கிழமைக்குத் திட்டமிடப்பட்டிருந்த அது ரத்துச் செய்யப்பட்டு விட்டதாக மலேசியாகினிக்குத் தெரிய வந்துள்ளது.

இருந்த போதிலும் அத்தகைய நடவடிக்கையை “நமது பல இன, பல பண்பாட்டு மாணவர்களுக்கு முன்பு மேற்கொள்வதை “ஆழ்ந்த கவலையுடன்” தான் நோக்குவதாக  MCCBCHST தெரிவித்தது.

“ஏனெனில் பள்ளிக்குச் செல்லும் நமது பிள்ளைகளின் உணர்வுகளையும் பொதுவாக பல இனங்களைக் கொண்ட மலேசிய சமுதாயத்தின் உணர்வுகளையும் புறக்கணிக்கிறது.”

“நமது பல இன சமுதாயத்தின் உணர்வுகளை மதிக்குமாறு நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறோம். நமது பள்ளிக்கூடங்களிலும் உயர் கல்விக் கூடங்களிலும்  மற்ற பொது இடங்களிலும் அந்த சடங்குகள் நடத்தப்படுவதை நிறுத்துமாறும் நாங்கள் அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறோம்,” என அந்த மன்றம் கூறியது.

“பொது இடங்கள் குறிப்பாக பள்ளிக்கூடங்கள், முஸ்லிம் சமூகத்துடன் மட்டும் தொடர்புடைய அந்தச் சடங்கை நடத்துவதற்குச் சரியான இடங்கள் அல்ல என நாங்கள் கருதுகிறோம். நமது பல இன மக்களிடையே அமைதியையும் ஒற்றுமையையும் மேம்படுத்துவதற்கு அது உதவியாக இருக்க முடியாது.”

“நமது மாணவர்களிடையே அவர்கள் உருவகம் செய்யப்படும் ஆண்டுகளில் அமைதியையும் ஒற்றுமையான வாழ்வையும் பராமரித்து மேம்படுத்துவதே, கல்வி அதிகாரிகளுடைய தலையாய நோக்கமாக இருப்பதோடு அதிலும் கவனம் செலுத்த வேண்டும்.”

“நம்மிடையே நல்ல உணர்வுகள் நிலைக்கும் என MCCBCHST நம்புகிறது. அதற்காக பிரார்த்தனையும் செய்கிறது. அதிகாரிகள் தேவையானதைச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது. மாடுகளை, நமது மாணவர்கள் முன்னிலையில் தியாகம் செய்யும் சடங்குகள் எதிர்காலத்தில்,விரும்பத்தகாத விஷயமாக மாறுவதற்கு முன்னர் அதற்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் MCCBCHST கேட்டுக் கொள்கிறது.”