உச்சநீதிமன்றத்தில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதிக்கான நிதி ஒதுக்கீடு வழக்கு

மலேசிய வரவுசெலவு அறிக்கையில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியின் மேம்பாட்டிற்காக ரிம1 மில்லியன் ஒதுக்கப்பட்ட்டுள்ளது. ஆனால், அரசாங்கம் அதனை வழங்காததால், அத்தொகுதியின் பிஎஸ்எம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார். அவ்வழக்கு இப்போது நாட்டின் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவிருக்கிறது.

இவ்வழக்கைத் தொடர்வதற்கான அனுமதி மனுவை உயர்நீதிமன்றம் அனுமதித்தது. ஆனால், மேல்முறையீட்டு நீதிமன்றம் அத்தீர்ப்பை அக்டோபர் 10, 2011 இல் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது பற்றி ஆலோசிக்கப்படும் என்று ஜெயக்குமார் அறிவித்திருந்தார்.

அக்டோபர் மாதத்தில் இவ்வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல பிஎஸ்எம்மின் மத்தியக் குழு தீர்மானித்தது.

ஜெயக்குமாரின் வழக்குரைஞர் அம்பிகா சீனிவாசன் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 8 இல், காலை மணி 11.00 அளவில் தாக்கல் செய்வார்.