இஸ்லாமிய, சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு சிலாங்கூர் தொடர்ந்து உதவும்

சிலாங்கூர் மாநில அரசு அடுத்த ஆண்டும் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளோடு இஸ்லாமிய பள்ளிகளுக்கும் தொடர்ந்து உதவிகள் வழங்கும் என்று மந்திரி புசார் காலிட் இப்ராகிம் நேற்று கூறினார்.

சீனப்பள்ளிகளும் இஸ்லாமியப் பள்ளிகளும் தலா ஆண்டுக்கு ரிம6 மில்லியன் உதவிகள் பெற்றன. தமிழ்ப்பள்ளிகள் ரிம4 மில்லியன் பெற்றன என்று அவர் கிள்ளானில் ஸ்கோலா மினாங்கா சீனா பெர்செண்டிரியான் சங் ஹுவா பள்ளியின் 100 ஆவது ஆண்டு விழா கொண்டாங்களைத் தொடக்கி வைத்த பின்னர் கூறினார்.

மாநில 2012 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் இம்மூன்று வித பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு இன்னும் கூடுதலாக இருக்கும் என்று நம்புவதாக அவர் கூறினார். அப்பட்ஜெட் அடுத்த வாரம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அது எப்படிப்பட்ட பட்ஜெட்டாக இருக்கும் என்று கூற அவர் மறுத்து விட்டார்.

அப்பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போது பள்ளியின் ரிம5 மில்லியன் செலவில் கட்டப்படவிருக்கும் பல்நோக்கு கட்டடத்தின் கால்கோள் சடங்கை அவர் செய்தார்.

மாநில அரசும் அரசு-இணைப்பு நிறுவனங்களும் அக்கட்ட நிர்மாணிப்புக்கு ரிம500,000 வழங்கும் என்று கூறினார்.

-பெர்னாமா