“பக்காத்தான் வரவு செலவுத் திட்டத்தில் குறைந்தபட்ச சம்பளத்துக்கு முன்னுரிமை”

பக்காத்தான் ராக்யாட் தயாரிக்கும் மாற்று வரவு செலவுத் திட்டத்தில் முதலிடம் கொடுக்கப்படும் விஷயங்களில் குறைந்த பட்சச் சம்பளமும் ஒன்றாகும்.

இவ்வாறு அந்த மாற்று வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பக்காத்தான் கூட்டணி பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்துக்குப் பின்னர் பாஸ் கோலசிலாங்கூர் எம்பி சுல்கெப்லி அகமட் அதனை அறிவித்தார்.

அக்டோபர் மாதம் அரசாங்கத்தின் 2012ம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுவதற்கு முன்னதாக பக்காத்தானின் மாற்று வரவு செலவுத் திட்டம் வெளியிடப்படும்.

குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை குழு உறுப்பினர்கள் இப்போது ஆராய்ந்து வருவதாக அவர் சொன்னார்.

“நாம் குறைந்தபட்சச் சம்பள விகிதத்தை அவசர அவசியமாக சமாளித்தாக வேண்டும். குறைந்த பட்ச சம்பளம் உற்பத்தித் திறன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பது முக்கியமான செய்தியாகும்,” என்றார் அவர்.

பக்காத்தானுடைய முயற்சி தேசிய குறைந்தபட்ச சம்பள மன்றத்தை அமைப்பதின் மூலம் வருமான வேறுபாட்டு பிரச்னையைத் தீர்க்க முயலும் கூட்டரசு அரசாங்க முயற்சியிலிருந்து மாறுபட்டது என சுல்கெப்லி தெரிவித்தார்.

அரசாங்க நடவடிக்கையை “கடப்பாடு இல்லாத நடவடிக்கை” என பக்காத்தான் வருணித்துள்ளது.